50 வருடங்கள் தாண்டியும் சிரேஷ்ர ஊடகவியலாளனாக சமூகசேவகனான கலைஞர் லோரன்ஸ் கொன்சால்வாஸ் கூஞ்ஞ அவர்களின் அகத்திலிருந்து
கலைஞனின் அகம் கணனியில் முகம்
எனது வாழ்வில் எல்லாமே இலக்கு எனத்தான் நினைக்கிறேன். அதிலும் ஒழுக்கம் தரமான கல்வி சுயசேமிப்பு இம்மூன்றையும் எனது தாரகமந்திரமாகவே பின்பற்றுகிறேன் இம்மூன்றினையும் என்னிலும் என்னோடு பழகுவோர்களிலும் எதிர்பார்ப்பேன்… அப்படியே செயற்படச்சொல்வேன் அப்படியே வாழ்பவர்களை மிகவும் பிடிக்கும் என்கிறார்…
கலைஞனின் அகம் கணனியில் முகம் விம்பம் ஊடாக நம்மைககாண வருபவர் 50 வருடங்கள் தாண்டியும் சிரேஷ்ர ஊடகவியலாளனாக சமூகசேவகனாக நல்ல கிறிஸ்தவனாக ஓய்வுபெற்ற தபாலதிபராக தன்னலமின்றி பிறநலம் பேணும் கலைஞன் லோரன்ஸ் கொன்சால்வாஸ் கூஞ்ஞ அவர்களுடனான சந்திப்பின் போது…
தங்களைப்பற்றி?
தலைமன்னார் தான் எனது சொந்த இடம் தற்போது குடும்பமாக பேசாலை மண்ணில் வாழ்ந்து வருகின்றேன் எனது தந்தை பிலேந்திரன் லோரன்ஸ் கூஞ்ஞ அம்மா லோரன்ஸ் மேரி கூஞ்ஞ எனது ஆரம்பக்கல்வியினை தலைமன்னார் மேற்கு றோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலையிலும் இடைநிலை மற்றும் உயர் கல்வியை கல்முனை பாத்திமாக்கல்லூரியிலும் கண்டி பூரணவத்த புனித சூசையப்பர் குரு மடத்திலும் கல்வியைப் பெற்றிருக்கிறேன்.
செய்தியாளராக வரவேண்டும் என்ற எண்ணம் எப்போது உருவானது?
நான் சிறியவனாக இருக்கும் போதே எனக்குள் இந்த ஆசை இருந்தது. அதை நான் எமது பங்கில் நடக்கும் விடையங்களை அப்படியே தொகுத்து எழுதி அதைப்பங்குத்தந்தைக்கு காட்டி அவரின் அனுமதியினைப்பெற்று மறைமாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பாதுகாவலன் பத்திரிகைக்கும் கல்முனையில் படித்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வெளிவந்துகொண்டிருக்கும் தொண்டன் பத்திரிகைக்கும் பங்குத்தள செய்திகளை விரிவாக தொகுத்து எழுதி எனது ஆக்கங்களை எழுதியனுப்புவேன் அப்படியாக தொடர்ந்தது எனது செய்தியாளனாக வரவேண்டும் என்ற ஆசை அப்போது தான் அந்நத நற்செய்தியினை பத்திரிகையில் பார்த்தேன்.
எவ்வாறு இன்று தேசிய பத்திரிக்கையான வீரகேசரியின் அன்று செய்தியாளராக வந்தீர்கள்?
மன்னாருக்கு நிருபர் தேவையென வீரகேசரியில் விளம்பரம் வந்திருந்தது எனக்கு தெரியாது. எனது நண்பன் ஒரு விண்ணப்பபடிவம் எடுத்து நிரப்பி அனுப்பி விட்டு சொன்னான். டேய் உனக்கு தொலைபேசி அழைப்பு வரும் என்றான் நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன் அவன் சொன்னது போலவே எனக்கு நேர்முகத்தேர்வுக்கு கொழும்புக்கு வரச் சொல்லி தபால் வந்தது. நானும் சென்றேன் அங்கு பலர் நேர்முகத்தேர்வுக்காய் வந்திருந்தார்கள் அப்போது என்னிடம் ஒரு பந்தியைத் தந்து வாசித்து விட்டு தலைப்பிட்டு தருமாறு சொன்னார்கள். நான் அந்தப்பந்தியை படித்துவிட்டு நகைச்சுவையாகவும் இலகுவாகவும்.“கன்னிப்பெண் பாவாடையில் இரத்தக்கறை” எனும் தலைப்பினை போட்டுக்கொடுத்தேன். அவர் என்னைப்பார்த்து சிரித்து விட்டு என்ன இப்படியொரு தலைப்பை போட்டிருக்கிறீர் என்றார் நான் அத் தலைப்பில் இரண்டு அர்த்தங்கள் இருக்கிறது என்றேன் இரண்டு அர்த்தமா..?
ஓன்று கன்னிப்பெண் விபத்திற்கு உள்ளானால்…மற்றொன்று கன்னிப்பெண்ணுக்கே உரிய காலப்பிரச்சினை என்றேன் தோளில் தட்டியவர் நீர் மன்னார் மாவட்ட செய்தி நிருபராக தெரிவு செய்யபட்டுள்ளீர் என்றார் மட்டற்ற மகிழ்ச்சி அன்றிலிருந்து தொடங்கியது எனது ஊடகப்பணி
இன்றைய நவீனம் இல்லாத அன்றைய நிலையில் எவ்வாறு செய்திகளை சேகரித்தீர்கள்?
நீங்கள் சொல்லியது போல இன்று போல் நவீனம் அன்றில்லைத்தான் ஆனாலும் செய்திகளை சேகரித்தோம் அனுப்பினோம். அது அருமையான தருணங்கள் அன்றைய சூழலில் செய்திகளை சேகர்க்கும் இடங்களாக “வைத்திய சாலை -பொலீஸ் நிலையம்- நீதிமன்றம்- சலூன் -பிரதான கடைப்பகுதிகள் -மக்கள் நடமாடும் சந்தைப்பகுதிகள்” தான் எங்கள் செய்தி சேகரிப்பு தளங்கள் அங்கு நிற்கும் யாராவது ஒருவரிடம் நடந்த சம்பவத்தினை பற்றி ஒரு கேள்வியினை எழுப்பினால் போதும் அவர் அந்த விடையத்தினைப்புட்டு புட்டு வைப்பார் அதன் உண்மைத்தன்மையயை அறிந்து கொள்ள அதே சம்பவத்தை இன்னுமொரு இடத்தில் கேள்வியினை கேட்டு கிடைக்கின்ற விடையத்தினை இரண்டிற்கும் ஓப்பீடு செய்து தகவலை தொகுத்து அனுப்புவோம். இப்போது உள்ளது போல ஈ-மெயில் இல்லை தந்தியில் தான் பலவற்ரை தபாலிலும் அனுப்புவோம் தந்தி அனுப்புவதானால் தபால் நிலையத்திற்கு சென்று பெயரை பதிவு செய்து இலக்கத்தினையும் கொடுக்கவேண்டும் 30 நிமிடம் முதல் ஐந்தரை மணிநேரம் வரை காத்திருக்க வேண்டும் அதிலும் எனக்கு இலகுவாக 5-15 நிமிடங்களுக்குள் அழைப்பு கிடைத்து விடும். அடுத்த நாள் பத்திரிகையை பார்க்கும் போது மனம் மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கும் நாம் அனுப்பிய விடையத்தின் சாரம்சம் மாறாமல் அழகாக தொகுத்து அச்சுக்கோர்த்து வெளியிட்டு இருப்பார்கள்.
யுத்த காலத்தில் தங்களின் ஊடகப்பணி எவ்வாறு இருந்தது?
அன்று ஊடகவியலாளர்கள் மறைமுகமாகவே தமது வேலையில் ஈடுபட்டனர் இப்போதுள்ளது போல சுகந்திரம் இல்லை எனது ஊடகத்தின் தொடர்ச்சியும் ஆயுதப்போராட்டத்தின் ஆரம்பகாலங்களாகவே இருந்தது 1980 காலப்பகுதியில் செய்திகள் சேகரிப்பது மிகவும் கடினம். மேளத்திற்கு இருபக்கம் அடி போல எனது நிலை இருதரப்பினருக்கும் தப்பி வாழ வேண்டிய சூழ்நிலை ஒரு பிரிவினர் இச்செய்தியை போடு… என்பார்கள் மற்றத்தரப்பினர் போடாதே… என்பார்கள் இதைவிட நான் கட்டாயம் செய்தி அனுப்பியே ஆகவேண்டும் இருதரப்பினரையும் பகைக்க முடியாது. பத்திரிகையில் செய்தி வந்தாக வேண்டும் அந்தப்பிரிவினரிடம் அவர்களின் செய்தியை அவர்களுக்கு முன்னே வைத்து எழுதி அவர்கள் கையினாலே தந்தியனுப்பச்செய்வேன். அடுத்த வினாடி ஆசிரியர் பீடத்திற்கு தந்தியனுப்புவேன். என்னுடைய ஆக்கம் இந்த எழுத்தில் இந்த வடிவத்தில் வந்தால் மட்டுமே போடுங்கள் என்பேன் அதற்கு ஏற்றவாறுதான் அவர்களும் அச்சுக்கோர்ப்பார்கள் அதனால் இருதரப்பினர் விரும்பும் செய்தியும் பத்திரிகையில் வராது அதே சம்பவம் எனது விருப்பத்திற்கு ஏற்றது போல வரும்
அடுத்த நாள் இருதரப்பினரும் என்னை சூழ்ந்து கொள்வார்கள் என்ன நாம் அனுப்பிய செய்தி பத்திரிகையில் வரவில்லை என்று வெருட்டுவார்கள் நான் மெதுவாக உங்கள் முன்னால் தானே எழுதி தந்தேன் நீங்கள் தானே தந்தி அனுப்பினீர்கள் அப்படியிருந்தும் வரவில்லையானால் நான் என்ன செய்வது சொல்லுங்கள் என்பேன் சிறிது நேரம் முறைத்து விட்டு சென்றுவிடுவார்கள் இப்படியாக சில முறைகள் அல்ல பல முறைகள்…
உங்களை ஒரு முறையும் கைது செய்யவில்லையா?
ஏன் இல்லை பல முறை அதுவும் ஐந்து முறை தள்ளாடிக்கும் ஒரு முறை 4ம் மாடிக்கும் செனறுள்ளதாக ஞாபகம் இன்று 4ம் மாடி அன்று தள்ளாடி அவ்வளவுதான் இரண்டு டிக்கும் போயுள்ளேன் கட்டாயம் போய்த்தான் ஆகவேண்டிய சூழல் என்ன செய்வது. எனக்கு ஆண்டவனின் அருளால் எதுவும் பெரிதாக நடப்பதில்லை விசாரிப்பார்கள் இனி இவ்வாறு தப்பாய் எழுதக்கூடாது என்பார்கள் நான் எதுவுமே எதிர்த்து பேசமாட்டேன் பயமுறுத்துவார்கள் அப்படி இப்படி தப்பாய் எதுவும் எழுதக்கூடாது என்பார்கள் எல்லாவற்றிற்கும் தலையாட்டுவேன் இப்படியாக இருந்தபடியால்தான எனது பணிக்கும் எனது உயிருக்கும் ஆபத்து குறைவாகவே இருந்தது இப்போது உங்கள் முன்னால் இருந்து பேசுகின்றேன்.
அன்றைய சூழ்நிலையில் உங்கள் நிலை?
சொல்லவே வேண்டாம் அந்தளவிற்கு… எப்போதுமே ஊடகவியலாளன் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் எனது ஊடகவாழ்க்கையில் எனது கழுத்தில் கூர்மையான கத்தி இருந்த வண்ணமே தொடர்ந்தது ஆனால் எனக்கு ஒரு விதமான நம்பிக்கையும் இறைவனின் துணையும் முயற்சியும் என்னை பல இன்னல்கள் கண்ணிவெடி மிதிவெடி கிளைமர் குண்டுத்தாக்குதலில் இருந்தும் தப்பியுள்ளேன் பல முறை கடவுள் அருள் என்பேன் யுத்தம் காரணமாக எல்லோரும் இந்தியா சென்றபோது நான் தலைமன்னார் கிராமத்தில் முஸ்லீம் மக்களோடு இருந்து விட்;டேன் அப்போதும் எனது பணியினை தொடர்ந்தேன்.
முஸ்லீம் சமூகத்தினருடன் தங்கவேண்டிய சூழல் எவ்வாறு அமைந்தது?
1990ம் ஆண்டு ஏற்பட்ட யுத்தத்தாலும் குறிப்பாக உணவுப்பிரச்சினையாலும் மக்கள் இடம்பெயர்ந்து இந்தியா சென்றனர் நான் போகவில்லை எனது தாயார் மிகவும் பிரயாத்தனம் எடுத்தும் பலனளிக்கவில்லை நான் தலைமன்னார் கிராமத்தில் முஸ்லீம் மக்களோடு இருந்தேன். எனது அதிகமான ஓய்வு பொழுதுகளாகவே அமைந்தது. அன்றொரு பொழுதில் மரத்தடியின் கீழ் அமர்ந்து இருக்கும் போது எனது சறத்தின் அருகில் இருந்து ஒழித்து பிடித்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன் எனது சறத்தினுள் புகுந்து விட்டான் நான் பேசவும் அவனுக்கு கோபம் வந்து. என்னை மரியாதை இல்லா வார்த்தையினால் ஏசிவிட்டான். எனக்கு பெரும் கவலையாய் இருந்தது அன்று நினைத்தேன் இந்தச்சிறுவர்களை எனது வழிக்கு கொண்டுவர வேண்டும் என நினைத்தேன். சும்மா இருப்பதைவிட இந்தச்சிறுவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கலாம் எனது ஓய்வு நேரத்தினை இச்சிறுவர்களுக்கு ஆங்கில பாடம் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். அதன் தொடர்ச்சியாக 350 சிறுவர்கள் எனது ஆங்கில வகுப்பில் இணைந்து கொண்டார்கள் அவர்களுக்கு கல்வியோடு எனது கொள்கையான தரமான கல்வி ஒழுக்கம் சுயசேமிப்பு இம்மூன்றினையும் சேர்த்து கற்றுக்கொடுத்தேன். அந்த முஸ்லீம் சமூகமே என்னை முழுமையாக ஏற்றுக்கொண்டது. 15வருடங்கள் நான் அவர்களுடன் தான் இருந்தேன் உணவு உடை எதுவுமே நான் வேண்டியதில்லை எல்லாமே அவர்கள் தான் பார்த்துக்கொண்டார்கள். குழப்பம் வந்தது யாராவது ஒருவர் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் தானே குழப்பம் ஏற்பட்டது. அந்த கிராமத்து மௌலவி உட்பட சிலர் என்னை எதிர்த்தார்கள் வெறுத்தார்கள் அவர்கள் என் மேல் ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கள் மதம் மாற்றம் செய்கிறேன் -இளைஞர்களையும் சிறுவர்களையும் கெடுக்கிறேன் அத்தோடு விடவில்லை -கஞ்சாப்பொட்டலங்களை வைத்து விட்டு நான் மாணவர்களை தீயவழிகளில் சீரழிக்கப்பார்க்கிறேன் என்றார்கள் முஸ்லீம் பெண்கள் தாய்மார்கள் ஒட்டு மொத்தமாக என்பக்கம் தான் நின்றார்கள் அன்றைய சூழலிலும் நான் தான் தான் ஜெயித்தேன்.
அப்படிக்கற்றவர்கள் இன்று எப்படி இருக்கிறார்கள் உங்களை எப்படி நோக்குகிறார்கள்?
அந்த மாணவர்களின் கல்வியின் பெறுபேறு சராசரியாக 60-80வரையிலும் சுயசேமிப்பு ஒரு சிறு அட்டையை கொடுத்து அதில் திங்கள் முதல் வெள்ளிவரை ஒவ்வொரு நாளும் ஒரு ரூபாவீதம் 5நாளும் 5ரூபா சேர்க்க வேண்டும் அது போல பாடசாலை ஒழுங்கு ஒழுக்கம் பேச்சு செயல் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் அவதானிப்பேன் அவ்வாறு தெரிவு செய்யப்படுவர்களுக்கு அந்த ஆண்டிற்கான சிறந்த மாணவன் விருதும் தங்கத்திலான பதக்கமும் கொடுத்துள்ளேன். தங்ஙப்பதக்கத்தினை தந்து உதவியவர்கள் மன்னார் லயன்ஸ் நிர்வாகம் இப்படியாக தெரிவு செய்யப்பட்டவர்கள் 5 பேர் இன்று சமூகத்தில் கௌரவமான தொழில் இருவர் இஞ்சினியராகவும் ஒருவர் மருத்துவராகவும் ஒருவர் பேராசிரியராகவும் ஒருவர் அரச உயர் பதவி வகிப்பவராகவும் அத்தோடு என்னிடம் கல்வி பயின்ற முஸ்லீம் மாணவர்களில் 7பேர் இன்று மௌலவிகளாக உள்ளார்கள் இப்போதும் என்னை எங்கு கண்டாலும் மரியாதையுணர்வுடன் தான்… நான் அன்று அவர்களை எவ்வாறு கணித்துள்ளேன் பார்த்தீர்களா வளரும் பயிரை முளையில் தெரியும் என்பார்களே அது போல எனது உழைப்பு வீணாகவில்லை மிக்க மகழ்ச்சியாவுள்ளது.
உங்கள் வாழ்வின் இலக்கு எதுவென நினைக்கிறீர்கள்?
எனது வாழ்வில் எல்லாமே இலக்கு எனத்தான் நினைக்கிறேன். அதிலும் ஒழுக்கம் தரமான கல்வி சுயசேமிப்பு இம்மூன்றையும் எனது தாரகமந்திரமாகவே பின்பற்றுகிறேன் இம்மூன்றினையும் என்னோடு பழகுவோர்களிலும் எதிர்பார்ப்பேன் அப்படியே செயற்படச்சொல்வேன் அப்படியே வாழ்பவர்களை மிகவும் பிடிக்கும்.
தங்கள் ஊடகப்பணியில் வெளியில் நிறைய சவால்கள் அது போல வீட்டில் எவ்வாறு?
வெளியில்…வீட்டில் துப்பரவாக எந்தப்பிரச்சினையும் இல்லை காரணம் நான் சிறுபராயத்தில் இருந்தே என்ன செய்கிறேன்.. எங்கே போகிறேன்.. வருகிறேன்.. செய்கிறேன்.. என்பதையெல்லாம் யாருக்கும் சொல்ல மாட்டேன். காரணம் எனது வேலைகளில் யாரும் தடைப்போடுதல் தடங்கல்கள் குறுக்கிடுவது எல்லாம் பிடிக்காது அதனால்தான் ஊடகவியலாளனாக வந்த பின்பு நான் பெரும்பாலும் வீட்டில் தங்குவதில்லை சிறுபராயத்திலும் தான் எங்கள் கோயில் பங்கு தந்தையோடு தான் தங்குவேன் அப்படியான சூழல் தான் நிலவியது என்னை வீட்டில் சற்றி வளைத்து 4தடவையும் பங்குதந்தையோடு தங்கியிருக்கும் போதும் ஒரு தடவையும் பிடித்து சென்றார்கள் அப்போது தான் எனது தாயார் முதல் தடவையாக டேய் வாடா இந்தியாவுக்குப்போவம் என்றார் நான் வரவில்லை நீங்கள் போங்கள் நான் வருகிறேன் என்றேன். இங்கேயே தங்கி விட்டேன்.
தங்கள் ஊடகப்பணியில் எழுத்தின் வன்மையால் சாதித்த விடையங்கள் பற்றி?
பலவுள்ளது அதிலும அப்போதைய சூழ்நிலையில் வீதிகள் பெரிதாக புனரமைக்கமாட்டார்கள் இராணுவமும் பொலிஸ்காரரும் வீதியை திருத்தியமைக்க அனுமதிப்பதில்லை காரணம் புலிகள் இயக்கத்தினர் கன்னி வெடி மிதிவெடி கிளைமர் போன்றவற்றினை புதைத்து விடுவார்கள் என்பதானாலும் அப்படித்தானே நடந்தது நான் இந்தப்பிரச்சினையை நகைச்சுவையாக எழுதினேன் தலைமன்னார் கடலாமைகள் மீன்கள் எல்லாம் தலைமன்னார் வீதியில் சந்தோசமா நீந்தி விளையாடுகின்றது கவனிப்பாரில்லை கவனம் சம்மந்தப்பட்டவர்கள் கவனத்திற்கு என எழுதினேன் இதைப்பார்த்த உயரதிகாரி என்னை அழைத்து உ மக்கு வேற வேலை இல்லையா என்ன வேலை இது என்றார் சேர் நீங்களா அதற்கு பொறுப்பு அபபடியென்றால் நான் எழுதியிருக்கவே மாட்டன் என்றேன் சரிசரி பராவாயில்லை எம்மால் மக்களுக்கு நல்ல வீதி கிடைத்துள்தது தானே என்றார். இது எப்படி…
தங்கள் வாழ்வில் மறக்க முடியாத நபர்கள் பற்றி?
எனது வாழ்வில் பலர் உள்ளனர் அத்தனை பெயரையும் கூறிவிடமுடியாது என்னுடைய தாய்தந்தைக்குப்பின் உறவுகளும் ஊடகவாழ்வில் வீரகேசரிப்பத்திரிகையின் ஆசிரியர்கள் குறிப்பாக வீரகேசரியின் முன்னாள் உதவி ஆசிரியர் சந்திரபோஸ் சட்டத்தரணி அவர்களுடன் அன்றைய காலகட்டத்தில் மன்னார் அரசாங்க அதிபராக இருந்த கே.கணேஸ் ஐயாவையும் பொலிஸ் பொறுப்பதிகாரியாக இருந்த கே.அரசரெட்ணம் ஐயாவையும் மறக்கவே முடியாது. இவர்களின் முயற்சியால் தான் பல கைதுகளில் இருந்து விடுதலையானேன். இல்லையானால் எப்போதே இறந்திருப்பேன்.
தற்போது ஓய்வு பெற்ற தபாலதிபராக உள்ளீர்களே ஏனைய செயற்பாடுகள்?
ஆரசாங்க வேலையில் இருந்து தான் ஓய்வு பெற்றுள்ளேனே தவிர எனது ஊடகப்பணியிலும் சமூகசேவையில் இருந்தும் ஓய்வு பெறவில்லை பெறபோவதுமில்லை அப்படியானால் அது நிரந்தர ஓய்வாகத்தான் இருக்கும். சமூக செயற்பாடுகள் பலவற்றில் என்னை ஈடுபடுத்தி வருகின்றேன் நான் எனது இளமைக்காலத்தில் மேற்கொண்ட கொள்கையில் ஒன்றை தற்போது மிகவும் தீவீரமாக செயற்படுத்தி வருகின்றேன். அது தான் சுயசேமிப்பு எனும் விடையத்தினை செய்து வருகின்றேன். எமது மக்களைப்பொறுத்த வரையில் குறிப்பாக பேசாலை மக்கள் பிரதான தொழிலாக கடற்தொழிலில் தான் ஈடுபட்டு வருகின்றார்கள் உலில் மிகவும் பயங்கரமான தொழிலாக 3வது இடத்தில் உள்ளது. கடற்தொழில் இத்தொழிலில் ஒரு நாள் நல்ல வருமானம் ஒரு நாள் எதுவுமே இல்லை காற்றிலும் குளிரிலும் கடும்வெயிலிலும் இரவுபகல் பாராமல் கஸ்ரப்படும் போது ஒரு நாள் வெறுங்கையோடு வரும் போது அந்தக்குடும்பத்தின் நிலையை எண்ணிப்பாருங்கள் மிகவும் மோசமான நிலையை தோற்றுவிக்கும் அல்லவா…
இதை நான் பல காலமாக நேரடியாகவும் அவர்களோடு வாழ்ந்து அனுபவித்திருப்பதால் இந்நிலையை இல்லாமல் பண்ண முடிவு செய்தேன். அதன் விளைவாகவே பேசாலையைச்சேர்ந்த 500 குடும்பங்களை இதுவரை எனது சுயு சேமிப்பு திட்டத்தில் இணைத்துள்ளேன் ஒவ்வொருவரினதும் பெயரில் வங்கிக்கணக்கை திறந்துள்ளேன் ஒவ்வொரு நாளும் அவர்களின் வீட்டுக்குச்சென்று அவர்களால் முடிந்த தொகையினை புத்தகத்தில் வைப்பிலிடவேண்டும் அனைத்து வங்கிக்கணக்கு புத்தகங்கள் என்னிடம் தான் உள்ளது அவர்களின் முக்கியமான தேவைக்கு மட்டுமே பணத்தினை எடுக்கலாம் இப்படிச்செல்லும் போது மனிதர்களின் செயல் எண்ணம் பழக்கவழக்கங்கள் வாழ்க்கை முறைகள் என்பவற்றை எனது வாழ்க்கைப்பாடமாக மாற்றிக்கொள்கிறேன். எனது இத்திட்டத்தின் மூலம் பிரிந்து வாழ்ந்த குடும்பங்கள் தினமும் சண்டை சச்சரவோடு வாழ்ந்த குடும்பங்கள் இன்று மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் அவர்களை காணும் போது எனது மனம் மட்டற்ற மகிழ்ச்சி கொள்ளுகின்றது அதை சொல்ல முடியாது உணர்ந்தால் அதன் ஆனந்தம் புரியும் அதனோடு எனது ஊடகப்பணியும் கிறிஸ்த்தவப்பணியும் சேர்ந்து எனது வாழ்க்கை பொதுநலத்துடனே நகர்கின்றது.
மன்னாரில் கலைஞர்களை கௌரவிக்கின்றார்களா அவர்களுக்கான மதிப்பு எவ்வாறு உள்ளது?
மன்னாரைப்பொறுத்தவரையில் நிறையக்கலைஞர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் எல்லாரையும் கௌரவிக்கின்றார்கள் மதிக்கின்றார்கள் எனறு சொல்லமுடியாது. காரணம் மன்னாரில் பல அமைப்புக்ள உள்ளது பல விழாக்களை நடத்தியுள்ளது நல்ல விடையம் அவ்விழாக்களில் மன்னார் கலைஞர்களை மறந்து விட்டு வேறுமாவட்ட கலைஞர்களை எங்கள் முன்னிலையிலே கௌரவப்படுத்தினால் கலைஞர்கள் என்ற ரீதீயில் மகிழ்ச்சி ஆனால் இப்படியான செயல்கள் எம்மை அவமானப்படுத்தும் செயல் அல்லவா…
மன்னாரில் நான் 50 வருடங்களுக்கு மேலாக ஊடகவியலாளனாக செயற்பட்டு வருகின்றேன். அதுவும் பிராந்திய ஊடகவியலாளன் இதுவரை எந்த விழாவிழும் என்னைக்கண்டுகொள்ளவே இல்லை ஒரு முறை மன்னார் ஆயுர்வேத சபையும் பிரதேச சபையும் கௌரவித்தது. என்னை கௌரவிக்க வேண்டாம். மன்னார் மன்னில் உள்ள கலைஞர்களை கௌரவியுங்கள் பாராட்டுங்கள் அப்போதுதான் அக்கலைஞனும் வளர்வான் அக்கலைஞனால் அந்த மாவட்டமும் வளரும் என்னை இதுவரை யாருக்கும் பெரிதாக தெரியாது சமீபத்தில் இலங்கை ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் விருது தந்து கௌரவித்த பின்புதான் மன்னாரிலுள்ள முக்கால்வாசிப்பேருக்கு தெரியும் நான் என்னை தெரியப்படுத்த விரும்பவும் இல்லை ஆனால் மன்னாரில் இருக்கும் அமைப்புக்கள் மன்னார் கலைஞர்களை கண்டுகொள்வதே இல்லை காரணம் எனக்கு விளங்க வில்லை…
இதுவரை தாங்கள் வகித்த பதவிகள் செயற்பாடுகள் பற்றி?
மட்டக்களப்பு கல்முனை பாத்திமா பாடசாலையின் துடுப்பாட்டம் மற்றும் உதைபந்தாட்டக்குழு உறுப்பினர்
மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் சங்கத் தலைவர்
மன்னார் மாவட்ட பேசாலை மறையாசிரியர் சங்கத் தலைவர்
மன்னார் மாவட்ட உபதபாலதிபர் சங்கத்தலைவர்
அகிலஇலங்கை மன்னார் மாவட்ட தமிழ்பேசும் உபதபாலதிபர் சங்கத் தலைவர்
தலைமன்னார் பியர் சிக்கனக்கடன் உதவிச்சங்கப் பொருளாளர்
தங்களைப்பாராட்டி தந்த விருதுகளும் பட்டங்களும்-
மன்னார் மாவட்ட ஆயுர்வேத சபையினால் பொன்னாடைஅணிவித்து கௌரவிப்பு(முதல் கௌரவிப்பு எனலாம்)
உலக தபால் தின நினைவுச்சின்னம்-2008
உலக தபால் தின நினைவுச்சின்னம்-2009
32வருடங்கள் தபாலதிபர் சேவை சிறப்பு விருது
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் கருத்தரங்கு சினைவுச்சின்னம்-2009
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் கருத்தரங்கு சினைவுச்சின்னம் (ஐNளுஐ)12-03-2010
இலங்கை இதலியல் கல்லூரியின் பயிற்சிப்பட்டறை-15-17-02-2008
மனித உரிமைகள் கருத்தரங்கு நினைவுச்சின்னம் 22-09-2013
ஊடகஅமைச்சின் ஊடகத்துறை கருத்தரங்கு நினைவுச்சின்னம்-30-07-2011
நிமலராஜன் ஊடகத்துறை கருத்தரங்கு நினைவுச்சின்னம்-17-10-2001
ஊடகவியலாளர் கௌரவிப்பு விருது-2008
மன்னார் பிரதேச இலக்கிய கலைவிழாவில் கௌரவிப்பு
அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் அமைப்பினால் சிரேஷ்ர ஊடகவியலாளர் சிறந்த சேவை விருது-17-03-2015
மற்றும் பல அமைப்புகளும் எனது பேசாலைப்பங்கும் கௌரவித்துள்ளது.
இளம் ஊடகவியலாளர்கள் எப்படி இருக்க வேண்டும்?
எப்போதும் எதற்கும் தயாரான நிலையில் இருப்பதோடு பலவகையான ஆற்றலோடும் இருக்கவேண்டும் ஒரு ஊடகவியலாளன் பத்திரிகையிலோ வானொலியிலோ இணையத்திலோ எதாவது ஒன்றில் அல்லது இரண்டில் நிருபராகவோ தொகுப்பாளராகவோ இருக்கலாம் ஒருவர் பல ஊடகங்களில் இருந்தால் தரமான தகவல் செய்திகளைளோ தரமுடியாது அவரால் தகவலின் உண்மைத்தன்மையை திறமையை வெளிப்படுத்த முடியாது இப்பஉள்ள ஊடகவியலாளர்கள் பணம் தான் இலக்காக கொண்டு செயற்படகிறார்கள் இவர்களிடம் இருந்து சமூகத்திற்கோ இனத்திற்கோ நாட்டிற்கோ எந்த விதமான பலனும் கிடைக்கப்போவதில்லை நன்மையும் இல்லை.
ஒரு முறை 1987-1990 காலப்பகுதியிருக்கும் மன்னார் மக்கள் வங்கியினால் விழிப்புணர்வு கருத்தரங்கு 3 நாட்கள் நடைபெற்றது அதற்கு ஒவ்வொரு ஊடகத்தில் இருந்தும் ஒருவரை மக்கள் வங்கி கேட்டிருந்தது அதற்கேற்ப வீரகேசரிப்பத்திரிகைக்காக மன்னார் இருந்து என்னை இணைத்துக்கொண்டார்கள் 3 நிகழ்வு நிறைவு பெற்றது அவர்களின் நிகழ்ச்சியினை தொகுத்து எழுதி பத்திரிகையில் வந்ததை பார்த்து மகிழ்ச்சியுற்ற மக்கள் வங்கி நிர்வாகம் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கியது அவர்கள் வழங்கிய ஊக்கத் தொகையினை நான் பெற வில்லை பல முறைகேட்டும் பெற்றுக்கொள்ளவில்லை எனது ஆசிரியர் பீடத்திற்கு மக்கள் சங்கி கடிதம் எழுதி இருந்தது இப்படியானதொரு ஊடகவியலாளாளரை இதுவரை கண்டதில்லை தனது கடமையை மட்டுமே செய்கிறார் வாழ்த்துகிறோம் அக்கடிதம் தான் என்னை மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளனாக நியமிப்பதற்கு சான்றாகியது எங்கள் வேலை எதுவோ அதை திறம்படச்செய்தால் எல்லாமே எம்மைத்தேடிவரும் பணமும் புகழும் அல்ல வாழ்க்கை… வாழ்க்கைக்கு பணம் புகழோடு நல்ல செயல் திறனும் தேவை.
தற்போதுள்ள இளைஞர் யுவதிகளின் நிலை பற்றி?
மிகவும் மோசமாய் உள்ளது இளைஞர்யுவதிகளை இந்த நவீனம் முற்று முழுதாக ஆட்கொண்டுள்ளது குறிப்பாக கைத்தொலைபேசிப்பாவனை அதிகரித்த பின்புதான் சீர்கேடுகள் சீரழிவுகள் அதிகரித்துள்ளது கல்வி ஒழுக்கம் கலாச்சாரம் பண்பாடு எல்லாமே மறந்தவர்களாய் மனம் போன போக்கில் வாழஎத்தனிக்கின்றார்கள் இவர்கள் பெரியவர்களின் பெற்றோர்களின் செல்லையோ ஆலோசனையினையோ கேட்பதாக இல்லை வேப்பங்காய் போல பெரியவர்களின் ஆலோசனையை வெறுக்கின்றார்கள் பொருளாதார சுழ்நிலையும் அவரவர் சமயப்பற்றின்மையும் தான் காரணம் உண்மையான வாழ்வு என்பது எவ்விதத்திலும் தனது இனத்தின் பண்பாட்டு விழுமியங்களில் நிலைத்து ஒழுக்கமாய் சமூகமாய் வாழ்தலே தற்போதைய தேவையும் அவசியமும் ஆகும்.
மன்னார் கலைஞர்கள் மக்கள் என்பதையே சுவாசமாக கொண்டு இயங்கும் மன்னார் இணையம் பற்றி தங்களின் கருத்து?
நான் பொதுவாக எந்த இணையமும் பார்ப்பதில்லை காரணம் ஒரு இணையத்தளம் போடுகின்ற விடையங்களைத்தான் அப்படியே கொப்பி பண்ணி மற்ற இணையத்தளங்கள் போடுகின்றார்கள். செய்தியோ- படங்களோ எந்தவித மாற்றமும் இல்லை. நவீனம் மனிதனை மிக்க சோம்பேறியாக்கி விட்டது. இப்ப இருக்கின்ற ஊடகவியலாளர்களும் ஏனோ தானோ என்றுதான் செயற்படுகிறார்கள். பெயரும் புகழும் பெற வேண்டும் என நினைக்கிறார்களே தவிர சரியான தகவலை செய்தியை வழங்க வேண்டும் அதில் தங்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என நினைப்பதில்லை தற்போதைய சூழலும் அவ்வாறு அமைந்துள்ளது. இப்படியான சூழலிலும் மன்னார் மக்கள் இணையம் மூலம் மன்னார் மக்கள் கலைஞர்கள் மன்னாருக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படும் மன்னார் இணையநிர்வாகத்தினருக்கு எனது பாராட்டுக்கள். குறிப்பாக இவ்வளவு நேரமும் என்னைப்பேட்டி கண்ட உஙகளுக்கும் எனது வாழ்த்துக்கள் இன்றிலிருந்து மன்னார் இணையம் பார்ப்பேன் என்னை செவ்வி கண்டதிற்காக அல்ல மன்னார் கலைஞர்கள் மன்னார் மக்கள் புனிதத்தலங்கள் ஒவ்வொரு விடயத்திலும் மன்னாரை முன்னிறுத்தி செயற்படுவதால் மன்னாரை கௌரவிப்பதால் நான் தொடர்ச்சியாக பார்ப்பேன். தொடரட்டும் தங்களின் சேவை வளரட்டும் மன்னாரும் மன்னார் கலைஞர்களோடு மக்களும் என்றும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
வை.கஜேந்திரன்
50 வருடங்கள் தாண்டியும் சிரேஷ்ர ஊடகவியலாளனாக சமூகசேவகனான கலைஞர் லோரன்ஸ் கொன்சால்வாஸ் கூஞ்ஞ அவர்களின் அகத்திலிருந்து
Reviewed by NEWMANNAR
on
June 26, 2015
Rating:
No comments:
Post a Comment