ஐஸை விட ஆபத்தான போதைப்பொருள் நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்
நாட்டில் ஐஸ் என்ற மெத்தம்பேட்டமைனை விட ஆபத்தான போதைப்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் வெலிகம பகுதியில் தங்குமிடம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் மாதிரிகளை சமீபத்தில் பரிசோதித்ததன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெலிகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில், அண்மையில் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு வெளிநாட்டு இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதன் மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக அரசு பகுப்பாய்வாளர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
அரசு பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் முதற்கட்ட பரிசோதனைகளின்படி, அந்த இடத்தில் ஐஸ் போதைப்பொருளை விட ஆபத்தான புதிய போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களில் குறித்த அறிக்கை வெளியிடப்படும் என்று பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தங்காலை பகுதியில் 03 லொறிகளில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் தொகை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு அமைய மோட்டார் வாகனம் ஒன்றை தங்காலை குற்றவியல் பிரிவு பொறுப்பேற்றுள்ளது.
குறித்த போதைப்பொருளை கடத்திய சந்தேகநபர்கள் பயணித்த மோட்டார் வாகனமே இவ்வாறு மாத்தறை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தங்காலை பகுதியில் அண்மையில் 700 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பல சந்தேக நபர்களை கைது செய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஐஸை விட ஆபத்தான போதைப்பொருள் நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்
Reviewed by Vijithan
on
September 28, 2025
Rating:

No comments:
Post a Comment