மன்னார் காற்றாலை திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு, மன்னாரில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட இரண்டு காற்றாலை மின்சார உற்பத்தித் திட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த விடயம் குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு ஆவணம், வட்சப் செயலி ஊடாக தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் பிரதிகளைத் தாம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தியோகபூர்வ ஆவணம் கிடைத்த பின்னர் அதன் விபரங்களைத் தாம் பகிரங்கப்படுத்த முடியும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இதன்படி, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 36 காற்றாடிகளுக்கு மேலதிகமாக, ஆரம்பிக்கப்பட்ட இரண்டு திட்டங்களுக்கான 14 காற்றாடிகளை அமைக்கும் பணிகளை முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதியின் பணிப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த காற்றாலை நிறுவல் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் தொடர்ந்தும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
அத்துடன், கொழும்பு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாலும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டங்களின் பின்னர் நிலைமையை அறிந்து பரிந்துரைக்கும் வகையில் நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி அமைத்திருந்தார்.
அந்த குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதிக்குச் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே, ஜனாதிபதி பணிப்புரையும் வெளியாகியுள்ளது.
அதேநேரம், இந்த பணிப்புரைக்கு மேலதிகமாக, நிபுணர் குழு பரிந்துரைத்துள்ள சுற்றாடல் சம்பந்தமான தடுப்பு நடவடிக்கைகளையும் உரிய முறையில் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியால் அரசாங்க அதிபருக்கு அனுப்பப்பட்ட ஆவணம் தமக்குக் கிடைத்துள்ளதாக காற்றாலை திட்டத்துக்கு எதிர்ப்பை வெளியிடும் போராட்டக் குழுவுக்குத் தலைமை தாங்கும் அருட் தந்தை மார்க்கஸ்தெரிவித்தார்.
எனினும், ஜனாதிபதியின் பணிப்புரையைத் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தொடர்ந்து போராடப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

No comments:
Post a Comment