பொதுத்தேர்தல் வேட்பு மனுக்கள் இன்று முதல் ஏற்பு: ஊர்வலங்களுக்குத் தடை
ஓகஸ்ட் 17ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகிறது. இதனையொட்டி இன்று முதல் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 13ம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணி வரையில் கட்சிகள், சுயேச்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
இதனையொட்டி இன்று முதல் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஊர்வலங்கள் கட்அவுட்கள் போஸ்டர்களை காட்சிப்படுத்துதல் தேர்தல் பிரசார அலுவலகங்களை திறந்து வைத்தல் ஆகிய செயற்பாடுகளுக்கும் இன்று முதல் தடை விதிக்கப்பட்டிருப்பதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் இன்று முதல் எதிர்வரும் 13ம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும். வேட்பாளர்கள் தத்தமது வேட்பு மனுக்களை மேற்குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தாம் போட்டியிடும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரிடம் ஒப்படைக்க வேண்டும்.
அதற்கமைய 13ம் திகதி நண்பகல் 12 மணி முதல் தொடர்ந்து வரும் ஒன்றரை மணித்தியாலங்களும் கையளிக்கப்பட்ட வேட்பு மனுக்களின் ஆட்சேபனை தெரிவிக்கும் காலப்பகுதியாக பிரகடனப்படுத்தும். அன்றைய தினம் பிற்பகல் 1.30 மணிக்கு தெரிவத்தாட்சி அலுவலகரினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் பற்றிய தீர்மானங்கள் அறிவிக்கப்படும்.
இதேவேளை இதுவரையில் 14 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாகவும் எம். மொஹமட் தெரிவித்தார்.
எதிர்வரும் 13ம் திகதி நண்பகல் 12 மணி வரையிலும் கட்டுப்பணம் செலுத்த முடியும். கடந்த வெள்ளிக்கிழமை வரையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 03 சுயேச்சைகளும் கம்பஹா மாவட்டத்தில் 02 சுயேச்சைகளும் களுத்துறை மாவட்டத்தில் 02 சுயேச்சைகளும் கொழும்பு, நுவரெலியா, திகாமடுல்ல, திருகோணமலை, அநுராதபுரம், புத்தளம், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொரு சுயேச்சைகளும் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் கட்சிகளின் பெயர் மற்றும் சின்னங்களின் மாற்றங்களிற்காக வழங்கப்பட்ட கால வரையறை கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வந்துள்ளது. அதற்கமைய 04 கட்சிகள் தமது பெயர் மற்றும் சின்னங்களை மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொதுத்தேர்தல் வேட்பு மனுக்கள் இன்று முதல் ஏற்பு: ஊர்வலங்களுக்குத் தடை
Reviewed by NEWMANNAR
on
July 06, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 06, 2015
Rating:


No comments:
Post a Comment