தந்தை செல்வாவின் வழியில் போராடிக் கொண்டிருக்கின்றோம்!: யோகேஸ்வரன்
தந்தை செல்வாவின் வழியினைப் பின்பற்றி தாம் தமிழ் மக்களுக்காக போராடி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கல்குடா தொகுதியிலுள்ள கிரான் பிரதேசத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“நாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு வீரயுகம் வாழ்ந்து வந்துள்ளோம். அன்று நடைபெறுகின்ற வீரச் செயல்களை நாங்கள் உள்வாங்கினோம். அந்த வீரச் செயல்களின் மூலம் விடியலை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தோம்.
இந்த யுகத்தில் நாங்கள் வரலாறுகளைப் பற்றி கவலைப்படவில்லை. எமது எதிர்கால சந்ததியினர் வரலாற்றைத் தொலைத்தவர்களாக உருவாகக் கூடாது.
சுதந்திரம் பெற்றதன் பின்பு இந்த நாட்டில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களிலே அரசுக்கு எமது நிலைப்பாடுகளை அகிம்சை வழிகளிலே சொல்லுகின்ற வேளையிலே நாங்கள் வென்று தருகிறோம் என்று எமது இளைஞர்கள் தங்களுடைய வழியிலே பலத்திலே தங்களுடைய உரிமையைப் பெற்றெடுப்பதற்காக போராடினார்கள்.
அந்த போராட்டத்தை போராட்டத்தின் உண்மைத் தன்மையை விளைவை அறியாமல் வேண்டுமென்றே அலட்சியம் செய்ததன் காரணமாக உண்மையான விடுதலைப் போராட்டமொன்று உலகத்திலே எங்குமில்லாதவாறு பயங்கரவாதம் என்று வரைவிலக்கணப்படுத்தப்பட்டு சர்வதேச போர் முறைகள் முரணாக ஒரு இனம் நசுக்கப்பட்டிருக்கிறது.
எங்களுடைய அரசியல் வரலாறுகளை துக்ககரமான வரலாறுகளை கடந்த 65 ஆண்டுகளுக்கு மேலாக இந்த உலகத்தில் நியாயத்திற்காக போராடிக் கொண்டிருக்கின்ற ஒரு இனம் இருப்பதென்றால் அது தமிழினம் மட்டுமே.
நாங்கள் உள்நாட்டில் எமக்கு உரிமை வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறோம்.
1948ல் வந்த பிரஜாவுரிமை சட்டத்தின் மூலம் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்களின் உரிமைகள் மறுக்கச் செய்தார்கள் அதன் காரணமாக நடைபெற்ற எல்லாத் தேர்தல்களிலும் தமிழர்களுக்கான உரிமைகளான சமஷ்டி சுயநிர்ணய உரிமை கடைசியாக தமிழீழம் என மக்கள் வழங்கிய ஆணைகளின் அடிப்படையில் அவ்வப்போது கவனம் செலுத்துகின்ற அரசுகள் எல்லாவற்றையும் தூக்கி குப்பையிலே போட்டு விட்டு இங்கு ஜனநாயக ஆட்சி நடக்கிறது என்று கூறுகிறார்கள்.
எமது மக்களை ஏமாற்றுவதா அவர்களின் ஜனநாயகம்.
இது தமிழன் இராவணன் ஆண்ட பூமி. நாங்கள் வீரம் மிக்க தமிழன் உரிமையை விட்டுக் கொடுக்காத ஒரு பரம்பரையில் வந்தவர்கள் நாம்.
வடக்கு கிழக்கில் எமக்கு இருக்கின்ற சுய நிர்ணய உரிமை மிகவும் உணர்வு பூர்வமாக கேட்டு பார்த்தவர்கள் நாம். அங்கிகரித்து விட்டு தருகின்றோம் என்று கூறிவிட்டு உறுதி மொழி கொடுத்து விட்டு அவற்றையெல்லாம் தாக்கி பதில் கொடுத்த தலைவர்களைப் பின்பற்றப் போகிறீர்களா?
பதவிகள், வருமானங்கள், பட்டங்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டு எங்களுடைய தலைவர் தந்தை செல்வா இரண்டு முறை பிரதம நீதியரசரால் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க அழைக்கப்பட்டவர் அதனை அவர் புறந்தள்ளினார்.
தன்னுடைய சொத்துக்களையெல்லாம் இழந்தார். எமது மக்கள் இந்த நாட்டில் தங்களுடைய வரலாற்றின் அடிப்படையில் உயர்ந்த வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக அவர் எல்லாவற்றையும் துறந்தார்.
இன்று நாங்களும் அவரின் வழியில் எமது மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறோம்.
அன்பான எமது உறவுகளே!,
நாங்கள் இத்தனை காலமும் போராடியது எதற்காக என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். எமது உரிமையை வென்றெடுக்க எத்தனை உயிரிகள் பலியாகியுள்ளன.
அவர்களது போராட்டத்தின் பயனாக இன்று ஒரு தீர்வுத் திட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். அந்த இறுதி முடிவை நேக்கிய பயணத்திற்கு வலுசேர்க்கும் வகையில் நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குங்கள்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
தந்தை செல்வாவின் வழியில் போராடிக் கொண்டிருக்கின்றோம்!: யோகேஸ்வரன்
Reviewed by Author
on
July 19, 2015
Rating:
No comments:
Post a Comment