புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளைப் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்போம்

வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்திருப்போர் தொடர்பில் விசேட நிதிக்குற்றப்பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளதோடு அது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் பலர் கைதாகலாம் என்றும் எச்சரிக்கைவிடுத்த அமைச்சரும் கண்டி மாவட்ட ஐ.தே.க.வேட்பாளருமான லக்ஷமன் கிரியெல்ல, புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை பெற்று அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கும் இனங்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்தவும் எதிர்கால எமது ஆட்சியில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.
பிட்ட கோட்டேயிலுள்ள சிறிகொத்தாவில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
கடந்த ஆட்சியின் போது மோசடியாக வங்கிகளில் பணத்தை வைத்திருப்போர் தொடர்பாக விசேட நிதிக்குற்றப் பிரிவுக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்று அவை விசாரிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு மோசடியாக வங்கிகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பணம் தொடர்பாக வங்கிகளில் தகவல்களை பெற முடியாதுள்ளது. எதிர்காலத்தில் இது தொடர்பான சட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டு தகவல்கள் பெற்றுக் கொள்ளப்படும்.அதன் போது பலர் கைதாகலாம்.
கடந்த காலங்களில் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டினர் ஆனால் அன்றைய ஆட்சியாளர்கள் அனுமதி வழங்கவில்லை.
ஆனால் இன்று நாம் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். இங்கு வந்து முதலீடு செய்யுமாறு இதன் மூலம் அவர்களின் பங்களிப்பை நாட்டின் அபிவிருத்திக்கு பெற்றுக் கொள்ள முடிவதோடு தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களிடையே புரிந்துணர்வு ஏற்படுவதோடு இனங்களிடையே நல்லிணக்கம் ஏற்படும்.
இனங்களை ஐக்கியப்படுத்தி நாட்டை சுபிட்சம் பாதையில் முன்னெடுப்பதே ஐ.தே.கட்சியின் இலக்காகும். சிங்கள பெளத்த மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது போன்று தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு அவர்களுக்கு வாழும் உரிமை உறுதி செய்யப்படும்.
இன்று வடக்கு, கிழக்கில் மக்கள் தமது சொந்த வியாபாரங்களை செய்ய முடியாது நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். எமது ஆட்சியில் அப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.
அடுத்த தேர்தலுக்கு பின்னர் ஐ.தே.முன்னணியின் ஸ்திரமான ஆட்சி உருவாகும். இதன்போது 10 இலட்சம் தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவோம் அதற்கான திட்டத்தை எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க உருவாக்கியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஐ.ம.சு. முன்னணிக்கும் வெற்றி பெற முடியாது என அதன் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தெரிவித்துள்ளார்.
அத்தோடு கட்சிக்குள்ளேயே ஒற்றுமையில்லாத போது இவர்களின் ஆட்சி நடத்துவது மட்டுமல்ல எதிர்க்கட்சியிலும் இருப்பதற்கு தகுதியில்லை. அன்று மஹிந்த ராஜபக்ஷ அரசியல் கட்சிகளை பிளவுப்படுத்தினார். இன்று அந்தப் பாவம் அக்கட்சியையே பிளவுப்படுத்தி சின்னாப்பின்னமாக்கியுள்ளது.இதுதான் விதியாகும். பாவத்தின் பிரதிபலனாகும் என்றும் அமைச்சர் லக் ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.
புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளைப் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்போம்
Reviewed by Author
on
July 18, 2015
Rating:

No comments:
Post a Comment