அண்மைய செய்திகள்

recent
-

தொடரும் வெள்ளை வான் கலாச்சாரம் சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்துகின்றது! சிவசக்தி ஆனந்தன்

தமிழர்களின் இனப்பிரச்சினையை மையமாக வைத்து ஜே.ஆரினால் முப்படையினருக்கும் ஆசிவழங்கப்பட்டு தண்டனையிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே கடந்த சுமார் நான்கு தசாப்தங்களாக நாட்டைப் பாதுகாக்க வேண்டிய படையினர் நாட்டின் அனைத்து பகுதியிலும் சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்டு, பெருமளவில் தமிழர்களைக் கடத்தி, கப்பம்பெற்று இறுதியில் கொலையும் செய்துள்ளனர் என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் சென்றிருந்தது என்று வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன் வவுனியாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இதுவரை காலமும் எமது கருத்தை இலங்கை அரசு மறுத்துவந்தது. இப்பொழுது அத்தகைய சம்பவங்கள் உண்மை என்பதை வெளிப்படுத்தும் முகமாக கடந்த திங்கட்கிழமை (20.07.2015) அன்று போலியான இலக்கத்தகடுடன் ஒரு வெள்ளை வானையும், சிவிலுடையில் ஆயுதத்துடன் வந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த மூவரையும் மீரிஹான பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

கடந்த காலங்களில் இந்நாட்டில், அடையாளம் தெரியாதோரால் வெள்ளைவானில் தமிழ் இளைஞர் கடத்தப்பட்டார்@ தமிழ் வர்த்தகர் கடத்தப்பட்டார் என்று நாளாந்தம் செய்திகள் வந்த வண்ணமிருந்தன. இன்று அவ்வாறான அடையாளம் தெரியாதோர் யார் என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது. ஆட்சிக்கட்டிலில் அமரப்போகின்ற கட்சிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் வருகின்றபோதே இத்தகைய கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

இந்நாட்டின் அரசியல் யாப்பிலிருந்து, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உட்பட அனைத்து விடயங்களும் ஆட்சியில் இருப்போரினால் எதிர்தரப்பினை கட்டுப்படுத்துவதற்கும், தாம் தொடர்ந்தும் பதவியில் இருப்பதற்காகவுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலும், அவர்களை சிங்கள பௌத்த இனவாதிகளுக்கு அடிமையாக்குவதிலும் அவர்கள் ஒன்றிணைந்தே செயற்பட்டு வந்துள்ளனர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு நாட்டின் இறையாண்மையைக் காப்பதற்கு உறுதியான அரசியல் யாப்பும், நீடித்து நிற்கக்கூடிய பொருளாதாரக் கொள்கையும், எதுவித சமரசத்திற்கும் இடமளிக்காத கட்சி அரசியலுக்கப்பாற்பட்ட பாதுகாப்புத்துறையும் மிகமிக அவசியமானவை.

எமது நாட்டின் அரசியல் யாப்பானது இதுவரை 19முறை திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இருபதாவது திருத்தத்திற்கும் அடித்தளமிடப்பட்டுள்ளது. அதனைப் போன்றே ஒவ்வொரு அரசாங்கமும் வௌ;வேறு பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றி, நாட்டின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. பாதுகாப்புத்துறையும்கூட கட்சி அரசியலுக்கு விதிவிலக்கல்ல என்பது இப்பொழுது நிரூபணமாகியுள்ளது.

இந்நாட்டில் வெளிப்படையாகத் தெரியும் படையினரின் முகாம்கள் தவிரவும், இரகசிய முகாம்கள் இருக்கின்றன என்று நாம் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தோம். குறிப்பாக திருகோணமலையில் ஒரு இரகசிய முகாமை படையினர் அமைத்துள்ளனர் என்றும் அதற்கான ஆதாரம் எம்மிடம் இருக்கின்றது என்றும் நாம் தெரிவித்திருந்தோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தான் விசாரித்துப் பார்த்த அளவில், அவ்வாறான முகாம்கள் எதுவும் இல்லை என்று படையினர் தெரிவித்ததாகக் கூறியிருந்தார்.

அண்மையில் கொழும்பில் நிலத்திற்குக் கீழே ஒரு முகாமும், திருகோணமலையில் ஒரு முகாமுமாக இரண்டு இரகசிய முகாம்கள் கடற்படையினரால் நிர்வகிக்கப்பட்டுள்ளதை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். அவ்வாறான ஒரு முகாமிலேயே தெஹிவளையில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு, கப்பம்பெற்றுக் கொண்டபின்னர் கொலைசெய்யப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

கடந்த காலங்களில் இதுகுறித்து எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படாமல் படையினர் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். எமது தொடர்ச்சியான அழுத்தத்தின் விளைவாகவும் சர்வதேச விசாரணையைத் தவிர்த்துக் கொள்ளும் நோக்கிலும் உள்நாட்டில் பக்கசார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டு இந்நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டு தண்டனை வழங்க முயற்சிக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் ஒரு கண்துடைப்பிற்காக இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உள்நாட்டு விசாரணைகளில் எமக்கு நம்பிக்கையில்லை@ சர்வதேச விசாரணையே எமக்குத் தேவை என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். பொருளாதாரக் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை விசாரிப்பதற்கு எமது பொலிசாருக்கு போதுமான பயிற்சி இல்லை என்பதையும் இப்பொழுதுதான் அவர்கள் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பயிற்சி எடுத்து வருகின்றனர் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

இந்நிலையில், சுமார் நாற்பதாண்டுகளாக நிறைவேற்று அதிகாரத்தின்கீழ் செயற்பட்ட இராணுவத்தினரின் அடக்குமுறைகளையும் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட அடாவடித்தனங்களையும் மனிதவுரிமை மீறல்களையும், போர்க்குற்றங்களையும் விசாரிப்பதற்கான தகுதியும், திறமையும் இலங்கை அரசாங்கத்திடம் இல்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆகவே, சர்வதேச விசாரணையே எமக்குத் தேவை என்பதையும், இணைந்த வடக்கு-கிழக்கில் எமது இறையாண்மையின் அடிப்படையில், எமக்கான நிலையான அரசியல் தீர்வினை நாம் பெற்றுக்கொள்வதற்கு பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்திற்கு வெளியிலும் சர்வதேச மட்டத்திலும் எமது குரலை பலமாக ஓங்கி ஒலிக்கச் செய்வதற்கு எமது மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்க வேண்டும்.

எத்தகைய இக்கட்டான சூழலுக்கும் முகங்கொடுத்து, துணிச்சலுடன் குரல்கொடுக்கும், ஜனநாயகப் போராட்டங்களில் முன்நிற்பவர்களை எமது மக்கள் தங்களது பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்வதும் மிகமிக அவசியம். எம்மைக் குழப்புவதற்கும் எமது வாக்குகளைச் சிதறடிப்பதற்கும் பலதரப்பினரும் சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவற்றை நாம் இனங்கண்டு மிகவும் தெளிவாகவும் உறுதியுடனும் வாக்களிக்க வேண்டும். எமது மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டியது மிகமிக அவசியம். அதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிப்பது எல்லாவற்றிலும் முக்கியமாகும். இவ்வாறு அவர் மக்களிடையே உரையாற்றினார்.

தொடரும் வெள்ளை வான் கலாச்சாரம் சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்துகின்றது! சிவசக்தி ஆனந்தன் Reviewed by NEWMANNAR on July 23, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.