இங்கிலாந்து நாட்டில் விமான விபத்தில் பின்லேடன் குடும்பத்தினர் பலி
இங்கிலாந்து நாட்டில் நடந்த தனியார் ஜெட் விமான விபத்தில் பின்லேடன் குடும்பத்தினர் பலியாகினர்.
பின்லேடன் குடும்பத்தினர்
அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான வாஷிங்டன் பென்டகன், நியூயார்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின் மீது கடந்த 2001 செப்டம்பர் 11-ந் தேதி விமானங்களை மோதி அதிபயங்கர தாக்குதல்கள் நடத்தி 3 ஆயிரம் பேரை கொன்று குவித்த அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் பின்லேடன்.
இவர், பாகிஸ்தானில் அப்போட்டாபாத் என்ற இடத்தில் பதுங்கி இருந்தபோது 2011-ம் வருடம், மே 2-ந் தேதி அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டார். இவரது குடும்ப உறுப்பினர்கள் நேற்று முன்தினம் இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு இத்தாலி நாட்டில் மிலான் நகரில் உள்ள மல்பென்சா விமான நிலையத்தில் இருந்து, ‘எம்ப்ரேர் பினோம்-300’ என்ற ஜெட் விமானம் மூலம் இங்கிலாந்து நாட்டின் தென்பகுதியில் உள்ள ஹாம்ஷயர் நகருக்கு புறப்பட்டனர். விமானத்தில் விமானியுடன் சேர்த்து மொத்தம் 4 பேர் பயணம் செய்தனர்.
விபத்து
இந்த விமானம், அடுத்த 1½ மணி நேரத்தில் (இந்திய நேரப்படி நேற்று முன்தினம் மாலை 7.30 மணிக்கு) ஹாம்ஷயர் பிளாக்புஷி விமான நிலையத்தில் தரை இறங்க வந்தபோது, அதன் அருகேயுள்ள கார்கள் ஏலமிடும் இடம் ஒன்றில் மோதி தீப்பற்றி எரிந்தது. இதில் விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் பலியாகினர். இதை பிளாக்புஷி விமான நிலைய நிர்வாகமும் உறுதி செய்தது.
இந்த விமான விபத்தில் பலியானவர்களுக்கு இங்கிலாந்துக்கான சவுதி தூதர், இளவரசர் முகமது பின் நவாப் அல் சவுத் இரங்கல் தெரிவித்து தூதரகத்தின் ‘டுவிட்டர்’ சமூக வலைத்தள பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.
விசாரணை நடக்கிறது
விபத்தில் பலியானவர்களின் உடல்களை சவுதி அரேபியாவில் நல்லடக்கம் செய்வதற்காக விரைவாக ஒப்படைக்க லண்டனில் உள்ள சவுதி தூதரகம், இங்கிலாந்து அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
விபத்துக்குள்ளான விமானம், பின்லேடன் குடும்பத்துக்கு சொந்தமானது என அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.
இந்த விபத்து குறித்து ஹாம்ஷயர் போலீசார், விமான விபத்து புலனாய்வு பிரிவினருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்தவர்கள் யார், யார்?
விபத்தில் பலியான பின்லேடனின் குடும்பத்தினர் யார், யார் என்ற விவரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், பலியானவர்களில் பின்லேடனின் சித்தி ராஜாஹஷிமும், சகோதரி சானாவும் அடங்குவர், என தகவல்கள் கூறுகின்றன.
பின்லேடனின் தந்தை முகமது பின்லேடனும், 1967-ம் ஆண்டு சவுதி அரேபியாவில் நடந்த விமான விபத்தில்தான் பலி ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து நாட்டில் விமான விபத்தில் பின்லேடன் குடும்பத்தினர் பலி
Reviewed by NEWMANNAR
on
August 02, 2015
Rating:

No comments:
Post a Comment