ஜனாதிபதியின் கடிதம் நாட்டு மக்களின் கருத்தை பிரதிபலிக்கிறது...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் நாட்டு மக்களின் கருத்தை பிரதிபலிப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க நேற்று தெரிவித்தார்.
நாட்டின் ஜனாதிபதிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் வேலை செய்ய முடிந்த போதும் மஹிந்த ராஜபக்ஷவுடன் வேலை செய்ய முடியாது என்பதே இந்த கடிதத்தின் உள்ளார்ந்த அர்த்தமெனவும் அவர் கூறினார்.
சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, தேர்தல் நெருங்கியுள்ள சந்தர்ப்பத்தில் நாட்டின் ஜனாதிபதி, வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷ அனுப்பி வைத்துள்ள கடிதம் ஐ.ம.சு.மு. மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டிய செய்தியாளர் இது கட்சியின் உட்பூசலின் விளைவால் உருவானதாகவென கேட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு விளக்கமளித்தார்.
எதிர்க்கட்சிக்குள் நடக்கும் உட்பூசல் தொடர்பில் எமக்கு தெரியாது. கட்சிப் பிரச்சினையை அவர்கள் தீர்த்துக் கொள்வார்கள். எமது கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. மஹிந்த ராஜபக்ஷ குறித்து நாட்டு மக்கள் கொண்டுள்ள கருத்தையே ஜனாதிபதி இந்த கடிதம் மூலம் வெளிப்படுத்தியுள்ளாரென்றும் அவர் கூறினார்.
தேர்தல் களத்தில் ஏற்கனவே ஆட்டம் கண்டிருந்த ஐ.ம.சு.மு. ஜனாதிபதியின் இந்த கடித்தை தொடர்ந்து ஒடிந்துபோய் விட்டது. வாக்களிக்க செல்லும் மக்களுக்கு வழிகாட்ட வேண்டியது நாட்டுத் தலைவனின் கடமையாகும். இல்லாவிடில் தவறானவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்வதன் மூலம் நாட்டை அதளபாதாளத்திற்குள் தள்ள வேண்டிய நிலை ஏற்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
புளுமெண்டால் சம்பவத்தை தவிர்ந்த எந்தவொரு பாரதூரமான தேர்தல் வன்முறைகளும் இது வரையில் நடைபெறவில்லையென சுட்டிக்காட்டிய அமைச்சர், இச்சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட கார் சுசில் பிரேமஜயந்தவின் தேர்தல் அலுவலகத்திலி ருந்தே எடுத்து வரப்பட்டிருப்பதனால் தேர்தலுக்குப் பின்னர் பொலிஸார் அவரை கைது செய்வதற்கான சாத்தியமிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தல் செயற்பாடுகள் அமைதியானதும் சுமுகமானதுமான முறையில் முன்னெடுக்கப்பட்டமைக்கு தேர்தல்கள் ஆணையாளரின் பக்கச்சார்பற்ற செயற்பாடுகளே காரணமென்றும் அதற்காக அவரை பாராட்ட வேண்டுமென்றும் அவர் கூறினார்.
ஐ.ம.சு. முவின் வேட்பாளர்கள் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் சி.ஐ.டி. மற்றும் நிதிமோசடிக்கான பொலிஸ் பிரிவில் முன்வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் சமயத்தில் அது தொடர்பிலான விசாரணைகளை நிறுத்தி வைக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் கேட்டுக் கொண்டதற்கமையவே அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தேர்தலின் பின்னர் அது குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்படும். இதற்கு அஞ்சியே முன்னாள் எம்.பிக்களான விமல் வீரவன்ச மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் என்மீது போலி குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன.
கொட்டகாமினி என்ற அடியாளை நான் வைத்திருப்பதாக தெரிவிக்கின்றனர். எனக்கு அவரை தெரியாது அவர் இலங்கையிலிருந்து தப்பி இந்தியாவிலிருப்பதாகவே சி.ஐ.டி. கூறுகின்றது.
விமல்வீரவன்சவும் அவரது பாரியாரும் காணி மோசடி தொடர்பில் மீண்டும் நிதிமோசடிக்கான பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்படவுள்ளனர்.
அதற்கு அஞ்சியே இவர்கள் என்மீது சேறு பூச முனைகின்றனர்.
ஜனாதிபதியின் கடிதம் நாட்டு மக்களின் கருத்தை பிரதிபலிக்கிறது...
Reviewed by Author
on
August 16, 2015
Rating:

No comments:
Post a Comment