மக்களின் மீள்குடியேற்றத்துக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் தூதுவர் இணக்கம் : ஜனாதிபதி மைத்திரி...
எனது புதிய அரசாங்கத்தில் இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் வராமல் இருக்கக் கூடிய வகையில் தான் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் சம்பூரில் நடைபெற்ற மக்களுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், அன்பு, கருணை, இரக்கம் இவைகளை யுத்தம் இல்லாமல் செய்து வருகிறது. யுத்தம் எந்த நாட்டுக்கும் எந்த மக்களுக்கும் பொருத்தமானதல்ல. உங்களுக்கு இருந்த உங்களது காணிகளை மீண்டும் வழங்குவதற்காகத் தான் இந்த பிரதேசத்துக்கு வந்துள்ளோம்.இந்த நாட்டில் வாழுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம், மலேயர், பறங்கியர் எல்லோரும் இந்த நாட்டிலே நன்றாக வாழ வேண்டும். எல்லோரும் சந்தோஷமாக வாழக் கூடிய சமூக அமைப்பு இருக்க வேண்டும்.
உங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி வசதிகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். நல்ல முறையிலான சுகாதார வசதிகளை வழங்க வேண்டும். உங்களது பொருளாதார சக்தி மேம்படுத்தப்பட வேண்டும். நீங்கள் தற்காலிகமாக வாழும் வீடுகளுக்கு விஜயம் செய்து பார்த்தேன். மிகவும் கஷ்டங்களுக்கும், நஷ்டங்களுக்கும் மத்தியிலேதான் இதில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் அந்த நிலைமை இல்லாமல் செய்து அதற்கான சீரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதற்கு புதிய வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளோம். வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இது சம்பந்தமாக எம்மிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது சம்பந்தமாக சம்பந்தன் பல தடவைகள் என்னிடம் கூறியிருக்கின்றார். அதனால் தான் இந்த பகுதிகளை அபிவிருத்தி செய்ய அமைச்சர் சுவாமிநாதனை நியமித்திருந்தோம். இந்த நாட்டில் வடக்கு கிழக்கு என்று வித்தியாசமாக வாழ வேண்டிய அவசியமில்லை. இந்த நாட்டில் வாழ க்கூடியவர்கள் அனைவரும் இந் நாட்டு மக்களே.
சந்தேகம், பயம் இல்லாமல் வாழவேண்டும். அப்படியான நல்ல சூழல் ஒன்றை எமது அரசாங்கத்தினால் ஏற்படுத்தித் தருவோம். இந்த நாட்டில் வாழுகின்ற மக்களிடத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் பல திட்டங்களைக் கொண்டுவந்தார். 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் புதியதொரு திருத்தத்தை ஏற்படுத்தி இருக்கின்றோம் இதன் மூலம் புதியதொரு பாதை திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் வெளிநாட்டு உதவிகள் பெறப்பட்டு அவர்களது தேவைகள் பூர்த்தி செய்யப்படும். எமது நாட்டுக்கு புதிதாக வந்து பதவியேற்ற அமெரிக்க உயர்ஸ்தானிகர் ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை மக்களின் மீள் குடியேற்றத்துக்குத் தருவதாகக் கூறியுள்ளார். நாம் எல்லோரும் இவ்வாறு சந்தோசமாக இருப்பதற்குக் காரணம் இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானமாகும். இந்த சமாதானத்தை ஏற்படுத்தித் தந்த படைவீரர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐந்து தடவைகள் பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளேன். அந்தச் சந்தர்ப்பத்தில் பல உயிர்கள் பலியாகின. எனவே இந்நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாத வகையில் நீங்களும் நானும் சேர்ந்து செயற்பட வேண்டும் எனக் கூறினார்.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, இரா.சம்பந்தன், ரவூப் ஹக்கீம், எம்.கே.டி.எஸ். குணவர்த்தன, அப்துல்லா மஹ்ரூப் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர். அஹமட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்களின் மீள்குடியேற்றத்துக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் தூதுவர் இணக்கம் : ஜனாதிபதி மைத்திரி...
Reviewed by Author
on
August 24, 2015
Rating:

No comments:
Post a Comment