யானையுடன் சேர்ந்து நாமும் வெற்றி பெற்றால்தான் அது முழு வெற்றியாகும் : மனோ கணேசன்
யானை சின்னம் வென்றால் மட்டும் போதாது. யானை அரசாங்கம் அமைந்தாலும் போதாது. யானையுடன் சேர்ந்து நாமும் வெற்றிபெற வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கொழும்பு மாளிகாவத்தையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில்,
நாமும் அந்த அரசில் பங்காளியாக இருக்க வேண்டும். அதுதான் முழுமையான வெற்றி. அதுதான் எங்கள் வெற்றி. யானை வந்து விட்டால் எல்லாம் சரி என்று எண்ணி விடாதீர்கள். அப்படி நினைந்து யானை சின்னத்துக்கு வாக்களித்துவிட்டு, உங்கள் விருப்பு வாக்குகளை அவருக்கு, இவருக்கு என்று தாராள மனசுடன் அள்ளி வீசி விடாதீர்கள். யானைக்கு வாக்களிப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியத்துடன் கவனமாக விருப்பு வாக்குகளை வழங்குங்கள். உங்கள் விருப்பு வாக்குகளை எங்கள் விருப்பு வாக்கு இலக்கங்களுக்கு வழங்குங்கள்.
இதை நாம் புரிந்துக்கொண்டு வாக்களித்தால், தமிழ் முற்போக்கு கூட்டணி ஒருபலமான பேரம் பேசும் சக்தியாக அடுத்த அரசாங்கத்துக்கு உள்ளே செயற்படும். அதுமட்டுமல்லஇ வட-கிழக்கில் இருந்து வெற்றி பெற்று வரும் அணியுடன் இணைந்து ஒரு ஐக்கிய அணியாக செயற்படும். இது காலத்தின் கட்டாயம் .
நமது வாக்காளர்கள் யானை சின்ன பட்டியல்களின் உள்ளே ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டியிடும் தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் யார் என்பதையும் அவர்களின் விருப்பு வாக்கு இலக்கங்களையும் தேடி அறிந்து வாக்களிக்க வேண்டும். நாங்கள் கொழும்பு, நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுகிறோம். உங்கள் விருப்பு வாக்குகளை யானை சின்னத்தில் போட்டியிடும் மாற்று இன வேட்பாளர்களுக்கு வழங்கி விட்டால், யானை வெல்லும். அவர்களும் வெல்வார்கள். நாம் வெல்ல மாட்டோம்.
கொழும்பு மாவட்டத்தில் எனது இலக்கம் 8 குகவரதன் இலக்கம் 9 என்னுடன் சேர்த்து பிரதமரின் இலக்கம் 15 இந்த மூன்றையும் கோர்த்து 8-9-15 என்று வாக்களித்தால்தான் கொழும்பில் இரண்டு தமிழர்கள் வெல்ல முடியும். ரணிலுடன் எங்களுக்கு விருப்பு வாக்கு பெறுவதில் போட்டி இல்லை.
அவர் பல இலட்சம் விருப்பு வாக்குகளை பெறப்போகின்றார். ஆகவே அவருக்கு வாக்களிப்பதில் எமக்கு பிரச்சினையில்லை. எங்களுடன் விருப்பு வாக்கு போட்டியில் ஈடுபட்டுள்ள ஏனைய அனைத்து யானை சின்ன மாற்று வேட்பாளர்களுக்கு எங்கள் மக்களின் வாக்குகள் சென்று சேர்வதில்தான் எங்களுக்கு சிக்கல் இருக்கின்றது.
இதுபற்றி பிரபல அரசியல் ஆய்வாளர் த. மனோகரன் ஒரு கருத்தை சொல்கிறார். அதை இங்கே குறிப்பிடுவது நன்று என நினைக்கின்றேன். “யானை சின்ன பட்டியலில் போட்டியிடும், பெரும்பான்மை இன வேட்பாளர்கள், தமிழர்களின் விருப்பு வாக்கையும் வாங்கி, தங்களது சிங்கள மக்களின் விருப்பு வாக்கையும் வாங்கி சுலபமாக வெற்றிப்படியின் மேலே ஏறி போய் விடுகிறார்கள்.
அதாவது எங்கள் வாக்குகளின் மூலமே அவர்கள் விருப்பு வாக்கு பட்டியலில் மேலிடங்களை பெற்று விடுகிறார்கள். ஆனால், நமது தமிழ் வேட்பாளர்கள், எங்கள் தமிழ் மக்களின் விருப்பு வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டு விருப்பு வாக்கு பட்டியலில் கீழேயே பின்தங்கி நின்று விடுகின்றார்கள். இதை தவிர்க்க ஒரே வழி, நம் தமிழ் வேட்பாளர்களுக்கு மாத்திரம் எமது விருப்பு வாக்குகளை அளிக்க வேண்டும். மிகுதி ஒரு விருப்பு வாக்கை எமது தமிழ் வேட்பாளர்களுடன் விருப்பு வாக்கு போட்டியில் ஈடுபடாத பெரும்பான்மை இன வேட்பாளருக்கு வழங்க வேண்டும். இதுவே வெற்றிக்கு வழி. நடைமுறை தேர்தல் முறையில் இருக்கின்ற இந்த இரகசியம் இன்று பகிரங்க இரகசியமாகி விட்டது. இதை புரிந்துக்கொண்டுள்ளவர்கள், புரியாதவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
யானையுடன் சேர்ந்து நாமும் வெற்றி பெற்றால்தான் அது முழு வெற்றியாகும் : மனோ கணேசன்
Reviewed by Author
on
August 07, 2015
Rating:

No comments:
Post a Comment