காலம் கனியும் வேளையில் நமது ஒன்று திரண்ட பலம் அவசியம்- கரவெட்டியில் சி.சிறீதரன்
எதிர்வரும் தேர்தலில் தமிழர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒட்டுமொத்த வாக்குகளையும் அளித்து எமது மக்களின் அபிலாசைகளை வெல்ல பாடுபடவேண்டும் என கேட்டுக்கொள்வதுடன், காலம் கனிகின்ற வேளையில் அதை சரியாக பயன்படுத்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் கரவெட்டியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பரப்புரை பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட யாழ் மாவட்டத்தில் இலக்கம் 10 ல் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தொடர்கையில்,
வரலாற்றில் பல்வேறு தடைகளையும் கடந்த வார்த்தைகளால் வடிக்க முடியாத தியாகங்களை செய்து இன்று தமிழர்களாகிய எங்களின் நீண்ட கால உரிமைப் பிரச்சனை உலகால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பிராந்திய உலக வல்லரசுகளின் பார்வைகளில் முக்கிய விடயமாக இனங்காணப்பட்டுள்ள சூழலில்தான் .இந்தத் தேர்தல் வந்திருக்கின்றது.
உலக அளவில் இந்தத் தேர்தல் எதிர்ப்பார்ப்புக்களை கிளப்பியிருக்கின்றது. இந்த தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழர்கள் தங்கள் ஜனநாயக பலத்தை எவ்வாறு முன்னெப்பொழுதையும் விட உச்சமாக ஒரு தேசியக் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பினூடாக வெளிப்படுத்த வேண்டியது தமிழர்கள் முன் நிற்கும் எமது கடமை.
இதையே உலகத்தின் முக்கிய தலைவர்களும் இங்குள்ள தமிழ் கட்சிகளிடம் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார்கள். நீங்கள் ஒரு தலைமைத்துவம் ஊடாக உங்கள் பிரச்சனையை சொல்லுங்கள் என அவர்கள் கூறியுள்ளார்கள்.
கடந்த காலங்களில் அரசாங்கத்தோடு இணைந்து கொண்டு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்டவர்களால் எமது நீண்ட உரிமைப் பிரச்சனை அபிவிருத்தி வேலை வாய்ப்பு வசதிகள் என்ற பாணியில் கூறப்பட்டதால் எமது அபிலாசைகளை கொண்டு செல்வதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
எனவே இம்முறை வருகின்ற இந்த வரலாற்று சந்தர்ப்பமான தேர்தலில் தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஒட்டுமொத்த வாக்குகளையும் அளித்து எமது மக்களின் அபிலாசைகளை வெல்ல பாடுபடவேண்டும் என கேட்டுக்கொள்வதுடன் காலம் கனிகின்ற வேளையில் அதை சரியாக பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
காலம் கனியும் வேளையில் நமது ஒன்று திரண்ட பலம் அவசியம்- கரவெட்டியில் சி.சிறீதரன்
Reviewed by NEWMANNAR
on
August 03, 2015
Rating:

No comments:
Post a Comment