செவ்வாயின் முப்பரிமாண புகைப்படங்களை அனுப்பியது மங்கள்யான்...
செவ்வாய் கிரகத்தின் வியக்க வைக்கும் முப்பரிமாண தோற்றங்களைப் படம் பிடித்து அனுப்பியுள்ளது மங்கள்யான் விண்கலம். செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு 74 மில்லியன் டொலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 475 கோடி ரூபா செலவில், மங்கள்யான் என்ற விண்கலத்தை கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் திகதி இந்தியா விண்வெளிக்கு அனுப்பியது.
செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பிய உலகின் 4 ஆவது நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்தது. இது விண்வெளித்துறையில் இந்தியாவுக்கு உலகளாவிய கௌரவத்தை பெற்று தந்தது. இந்த மங்கள்யான் விண்கலம், தற்போது செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வருகிறது.
அது தொடர்பான படங்களையும் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. மங்கள்யான் விண்கலத்தில் "மார்ஸ் கலர் கேமரா" என்னும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா, செவ்வாய் கிரகத்தின் முப்பரிமாண படங்களை கடந்த மாதம் 19 ஆம் திகதி எடுத்து அனுப்பி உள்ளது.
அதில் செவ்வாய் கிரகத்தில் உள்ள "ஓபிர் சஸ்மா" என்ற பள்ளத்தாக்கு இடம் பெற்றுள்ளது. "ஓபிர் சஸ்மா" பள்ளத்தாக்கின் சுவர்கள் பல அடுக்குகளை கொண்டதாக அமைந்துள்ளன. அதன் தரைப்பகுதியும் அடுக்கு பொருட்களின் சேகரிப்பாக அமைந்துள்ளது.
இது தொடர்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மங்கள்யான் எடுத்து அனுப்பியுள்ள இந்த படங்கள் ஆயிரத்து 857 கி.மீ. உயரத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் உள்ள பள்ளத்தாக்கை மங்கள்யான் படங்கள் எடுத்து அனுப்பி இருப்பதை பிரதமர் நரேந்திர மோடி, "ட்விட்டர்" பக்கத்தில் பாராட்டி உள்ளார்.
செவ்வாயின் முப்பரிமாண புகைப்படங்களை அனுப்பியது மங்கள்யான்...
Reviewed by Author
on
August 21, 2015
Rating:
No comments:
Post a Comment