நவீன வசதிகளைக் கொண்ட மைதானம் இடமாற்றப்பட்டமைக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ்.கண்டனம்.
மன்னார் நகரசபைக்கு உற்பட்ட எமில்நகரில் நவீன வசதிகளைக் கொண்ட மைதானம் இடமாற்றப்பட்டமைக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ். மாவட்டக் குழுக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர முன்னனியின் மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் மத்திய குழு உறுப்பினரும் மாவட்டப் பொறுப்பாளர் எஸ். ஆர். குமரேஸ் தலைமையில் கட்சிக் காரியாலயத்தில் நேற்று (10) நடைபெற்றது.இதன் போதே குறித்த மைதானம் இடமாற்றப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர், உப தலைவர், உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டு தேர்தலில் வேலைகள் செய்த மற்றும் வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
பொதுத்தேர்தலுக்குப்பின் இடம் பெறும் முதலாவது மாவட்டக் குழுக்கூட்டம் என்பதால் பல்வேறு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டது.
இத்தேர்தலில் கட்சியின் நகர்வுகள் பற்றியும், வாக்கு வங்கியின் ஏற்ற இறக்கங்கள் பற்றியும், எமது கட்சித்தலைவருக்கு தேசியப்பட்டியல் வழங்காமை பற்றியும் கூட்டமைப்பின் ஒரூங்கிணைப்பு குழுவை இதுவரை கூட்டப்படாது இருப்பது தொடர்பாகவும் மற்றும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி விடயங்களில் தனிப்பட்ட அரசியல் வாதிகளின் தன்னிச்சையான போக்குகள் பற்றியும் வெளிப்படையற்ற கபடத்தனமான நடவடிக்கைகளை தடுப்பது பற்றியும் விரிவாக ஆராயப்பட்டு கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக மாவட்டத்தின் விசேட நவீன வசதிகளைக்கொண்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கு நகர சபைக்கு உற்பட்ட எமில்நகரில் இடமும் ஒதுக்கப்பட்டு நகரசபையாலும் விளையாட்டுத்துறை அமைச்சாலும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இதற்கான ஆதாரங்கள் நகரசபையில் உள்ளன.
இப்போது இம் மைதானமானது மிகவும் கபடத்தனமான முறையில் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளுக்கோ, அதிகாரிகளுக்கோ, விளையாட்டுத்துறையினருக்கோ தெரியாமல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இச் செயலை மிகவும் இரகசியமாக நகரசபை கலைக்கப்பட்டதன் பின் தமிழ் மக்களின் வாக்குகளை தொடர்ச்சியாக தனது ஏமாற்றுத்திறன் மூலம் பெற்று வரும் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களே செய்துள்ளார் என்பதனை அறிந்து ஏமாறாத மக்களும் ஏமாந்த மக்களுடன் சேர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதுவும் தனது சொந்த ஊரான தாராபுரத்திற்கு மாற்றப்பட்டதை இட்டு அவரது சுயநலம் வெளிப்பட்டுள்ளது.
இச் செயல்பாடானது ஒட்டு மொத்த மாவட்ட மக்களையும் கோவமடையச்செய்வதோடு இச் செயற்பாட்டினை வன்மையாக கண்டிப்பதுடன் இவ் மைதானத்தினை மீண்டும் நகரசபைக்குற்பட்ட எமில்நகரில் அமைப்பதற்கு மக்கள் சக்தியைத் திரட்டி எம்மாலான சகல முயற்சிகளையும் மேற்கொள்ளுவோம் என மாவட்ட குழுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக எஸ்.ஆர். குமரேஸ் அவர்கள் தெரிவித்தார்.இவ்விடையம் தொடர்பாக அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களின் கருத்தை பெற்றுக்கொள்ள பல தடவைகள் தொடர்பை ஏற்படுத்திய போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
நவீன வசதிகளைக் கொண்ட மைதானம் இடமாற்றப்பட்டமைக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ்.கண்டனம்.
Reviewed by NEWMANNAR
on
September 14, 2015
Rating:

No comments:
Post a Comment