பொது வைத்தியசாலையில் கடமையில் இருந்த சிற்றூழியரை தாக்கியமையை கண்டித்து பணிப்பகிஸ்கரிப்பு-Photos
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று சனிக்கிழமை(12) இரவு கடைமையில் இருந்த சிற்றூழியர்களிடம் தர்க்கத்தில் ஈடுபட்ட இருவர் திடீர் என சிற்றூழியர் ஒருவரை கடுமையாக தாக்கிய சம்பவத்தை கண்டித்து மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை(13) காலை பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,,
மன்னார் பொது வைத்தியசாலையில் நேற்று சனிக்கிழமை இரவு 8.45 மணியளவில் மது போதையில் வருகை தந்த இருவர் ஒருவரை சிகிச்சைக்காக அழைத்து வந்தனர்.
இதன் போது வைத்தியர் இல்லாத நிலையில் இங்கு இரவு நேர கடமையில் இருந்த சிற்றூழியர்களிடம் மது போதையில் வருகை தந்த இருவரும் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் மது போதையில் இருந்த குறித்த இருவரும் திடீர் என சிற்றூழியர் ஒருவர் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.
இதன் போது குறித்த சிற்றூழியர் காதுப்பகுதியில் கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் மன்னார் பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த நிலையில் சக சிற்றூழியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் ஏனைய சிற்றூழியர்கள் நீதி கேட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை(13) காலை மன்னார் பொது வைத்தியசாலைக்க முன் பதாதைகளை ஏந்தியவாறு பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் ஈடுபட்ட குறித்த இரு சந்தேக நபர்களையும் மன்னார் பொலிஸார் கைது செய்தனர்.
சிற்றூழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டமையினால் வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.உடனடியாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோர் வைத்தியசாலைக்குச் சென்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட சிற்றூழியர்களுடன் கலந்துரையாடினர்.
இதன் போது மன்னார் வைத்தியசாலைக்கு வருகை தந்த மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் தமது பிரச்சினைகளை தெரியப்படுத்தினர்.
பிரச்சினைகளை கேட்டரிந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிற்றூழியரை தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததோடு மன்னார் பொது வைத்தியசாலைக்கு இரவு நேரங்களில் மேலதிக பாதுகாப்பு வழங்குவதாக உறுதியளித்தார்.
-இதனைத்தொடர்ந்து காலை 10 மணியளவில் தமது பணிப்பகிஸ்கரிப்பை கைவிட்ட சிற்றூழியர்கள் தமது கடமைகளில் ஈடுபட்டனர்.
பொது வைத்தியசாலையில் கடமையில் இருந்த சிற்றூழியரை தாக்கியமையை கண்டித்து பணிப்பகிஸ்கரிப்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
September 14, 2015
Rating:

No comments:
Post a Comment