அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்க தீர்மானத்தின் 14 பரிந்துரைகளை நீக்குமாறு இலங்கை கோரிக்கை...


சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைக்கும் விடயம் உள்ளிட்ட 14 பரிந்துரைகளை, அமெரிக்கத் தீர்மான வரைவில் இருந்து நீக்க வேண்டும் என்று இலங்கை வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவிக்கும், 26 பரிந்துரைகளைக் கொண்ட தீர்மான வரைவை அமெரிக்கா முன்வைத்திருந்தது.

இந்த தீர்மான வரைவு குறித்து, ஜெனிவாவில் கடந்த திங்கட்கிழமை அமெரிக்கா முதலாவது முறைசாரா கலந்துரையாடலை நடத்திய போது, தீர்மான வரைவை நிராகரிப்பதாக இலங்கை அறிவித்தது.

இந்த நிலையில்,நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மதியம், இரண்டாவது முறைசாரா கலந்துரையாடலை அமெரிக்கா நடத்தியது. இதற்கு ஜெனிவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் கெய்த் ஹாப்பர் தலைமை தாங்கினார்.

இதன் போது, தீர்மான வரைவில் உள்ள 26 பரிந்துரைகளில், 14 பந்திகளை முற்றாகவே நீக்கி, தீர்மான வரைவை மென்மைப்படுத்த வேண்டும் என்று இலங்கை பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க வலியுறுத்தினார்.

குறிப்பாக, குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை் அமைக்கப் பரிந்துரைக்கும் பந்தி முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும், உள்நாட்டு பொறிமுறைக்கு ஆதரவான பந்தி சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சாட்சிகளைப் பாதுகாத்தலை வலுப்படுத்தல், காணிகளை மீள ஒப்படைத்தல், இராணுவமய நீக்கம், ஊடகவியலாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்கள் குறித்த விசாரணை, நீதிக்குப் புறம்பான படுகொலைகள் குறித்த நம்பகமான விசாரணை, வெலிவேரிய துப்பாக்கிச் சூடு பற்றிய ஒரு அறிக்கை, மனித உரிமைகள் குறித்து ஆவணப்படுத்தும் ஒரு பொறிமுறை, அதிகாரப்பகிர்வு, பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள், தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்களின் அறிககைகளுக்குப் பதிலளித்தல் போன்றவற்றுக்கு அழைப்பு விடும் பந்திகளையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில், ஜெனிவாவுக்கான இலங்கை பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்கவுடன் இணைந்து பங்கேற்ற, ஜெனிவாவுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சமந்த ஜெயசூரிய, வியன்னாவுக்கான இலங்கைத் தூதுவர் அசீஸ் ஆகியோர், தீர்மான வரைவில் இருந்து நீக்க வேண்டிய, திருத்த வேண்டிய டசின் கணக்கான விடயங்களைச் சுட்டிக்காட்டினர்.

ஜெனிவாவில் நேற்று முன்தினம் அமெரிக்கா நடத்திய இரண்டாவது முறைசாராக் கலந்துரையாடலில், அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றதைப் பரிந்துரைக்கும் 4வது செயற்பாட்டுப் பந்தி தொடர்பாக விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

இந்தப் பந்தியை நீக்க வேண்டும் என்று இலங்கை தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இலங்கைக்கு ஆதரவாக ரஷ்யாவும், சீனாவும் நேற்று கருத்துக்களை முன்வைத்தன.

அதேவேளை, கலப்பு நீதிமன்றப் பரிந்துரையை உள்ளடக்கிய தீர்மான வரைவின் 4வது பந்தியை, நீக்குவதற்கு, சுவிற்சர்லாந்து, நோர்வே, நெதர்லாந்து, அயர்லாந்து, கனடா ஆகிய நாடுகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டன.

அமெரிக்க தீர்மானத்தின் 14 பரிந்துரைகளை நீக்குமாறு இலங்கை கோரிக்கை... Reviewed by Author on September 24, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.