அண்மைய செய்திகள்

recent
-

கலப்பு நீதிமன்றமே தமிழினத்தின் கடைசி நம்பிக்கை!...


இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையே தமிழர்களின் இறுதி நம்பிக்கையாக இருந்தது.
அவ் எதிர்பார்ப்பு முழுமையான திருப்தியினை வழங்கவில்லை என்பது உண்மை.  வெறுமனே கண்துடைப்பு அறிக்கையாகவே ஐ.நாவின் அறிக்கை வெளிவந்துள்ளது.

யுத்த வெற்றியினை விட, ஐ.நா வின் அறிக்கையின் பின்பு தான் இலங்கை அரசாங்கம் அதிகமாக மார்தட்டிக்கொள்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மின்சார நாட்காலியிலிருந்து காப்பாற்றியதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அப்படியானால், புதிய அரசாங்கத்தினையும், புதிய ஜனாதிபதியினையும் உருவாக்க பிரதான காரணமாக இருந்த தமிழ் மக்களை காப்பாற்றும் எண்ணமில்லையா?

இலங்கை பிரதமர் ரணிலும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், முன்னாள் ஜனாதிபதி மகிந்தவினை காப்பாற்றியதாகத்தான் மார்தட்டுகிறார்களே தவிர, திட்டமிட்ட ஒரு இன அழிப்பிற்கு தீர்வு கிடைத்ததா? என யோசிக்க அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.

இந்திய சட்டமன்றத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின், கால் அரைவாசி பங்கு கூட ஐ.நாவின் அறிக்கையில் இல்லை என்பதுதான் உண்மை.

இவ்விடத்தில் இந்திய சட்டமன்ற தீர்மானமானது, காலம் கடந்து வந்த ஞானமா? எனவும் ஒரு பக்கத்தில் யோசிக்க தோன்றுகின்றது.

ஐக்கிய நாடுகள் அறிக்கை தொடர்பில் உண்மையில் ஈழ மக்கள் எதிர்பார்த்தது என்னவென்றால், இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்பதே.

காரணம், சர்வதேசமாவது தமிழினத்திற்கு உதவி செய்யும் என இன்னும் தமிழினம் நம்பிக் கொண்டிருப்பதுதான். அந்த நம்பிக்கை முழுமையாக தமிழினத்திடம் இல்லை. இருந்தும் என்ன செய்ய? தமிழினம் நம்புவதற்கு கூட வேறு யாரும் இல்லையே!

இருந்தும் நம்புகின்றார்கள். சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே உண்மையான நிலவரம் உலகிற்கு தெரியவரும். ஆனால் உள்ளக விசாரணையினை ஆதரிக்கும் வகையிலே ஐ.நா வின் அறிக்கை அமைந்துள்ளது.

முடிவு எட்டப்படுவதற்காகத்தான் விசாரணை நடாத்தப்பட வேண்டும். எடுக்கப்பட்ட ஒரு முடிவினை முன்மொழிய விசாரணை தேவையில்லை.

குற்றவாளிகளை காப்பாற்ற துடிக்கும் குழுவின் மூலம், விசாரணை நடாத்தப்படுவதால் உண்மை எப்படி வெளிச்சத்திற்கு வரும்?

ஆனால், முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் ஆட்சியின் போது வெளிவந்த ஐக்கிய நாடுகள் சபை அறிக்கைக்கும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சியின் போது வெளிவந்திருக்கும் அறிக்கைக்கும் பாரிய வித்தியாசம் இருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் பெரும்பாலும் அமெரிக்காவின் தீர்மானமாகவே இருக்கும் என்பது உலகறிந்த உண்மை. அதற்கு ஏற்றால் போலவே இத்தீர்மானம் வெளிவந்துள்ளது.

ஐ.நா வின் அறிக்கையானது, ஆட்சி செய்யும் அரசாங்க தலைமைகள் மற்றும் அவர்கள் கொண்டிருக்கும் வெளியுறவு கொள்கை சார்பாகவே இருக்கின்றதே தவிர, உண்மையில் தமிழினம் சார்பானதாக இருக்கின்றதா?

குறிப்பாக சனல் 4 வின் போர்க்குற்ற ஆவண பட இயக்குனர் கலம் மக்ரே கூறியதனைப்போல அமெரிக்காவின் செயற்பாடுகளில் மாற்றங்கள் இருப்பதனை உண்மையாகவே உணர முடிகின்றது.

குறிப்பாக, ஒரு அரசாங்கம் இன்னொரு அரசாங்கத்திற்குத்தான் ஆதரவோ, எதிர்ப்பினையே தெரிவிக்கும். உள் நிலவரங்கள் எப்பொழுதும் இரண்டாம் பட்சமான தாக்கத்தினையே செலுத்தும்.

இவ்வாறாக, இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம், குறிப்பாக பிரதமரின் முதலாளித்துவ கொள்கைக்கு மூலாதாரமான நாடான அமெரிக்காவுடன், இனி அதிகரிக்கும் என்பதன் ஆரம்பமாகத்தான் ஐ.நா வின் அறிக்கை இருக்கின்றது.

ஐ.நா வின் அறிக்கையின் பரிந்துரைகளாக சொல்லப்பட்ட கலப்பு நீதிமன்றம் என்பதனை தவிர, ஏனைய எந்த விடயமும் பாரிய தாக்கத்தினை செலுத்தவில்லை என்பதே நிஜம்.

கலப்பு நீதிமன்றம் கூட பரிந்துரை மட்டுமே. இது நடைமுறைக்கு வருமா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

அது நடைமுறைக்கு வந்தாலும் வெற்றியடையுமா? என்பதும் சந்தேகமே. காரணம்கம்போடியாவிலும், சியரலியோனிலும் ஐ.நாவினால் நியமிக்கப்பட்ட ஹைபிரிட் நீதிமன்றம்தோல்வியடைந்த வரலாறுகளே உள்ளன.

குறிப்பாக, இலங்கை அரசாங்கமானது இறுதி யுத்த குற்றவாளிகளான பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, சரத் பொன்சேகா மற்றும் இராணுவ வீரர்களை விசாரணைக்கு உற்படுத்த அனுமதி வழங்குமா?

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி விசாரணைக்கு வருவதற்கான எந்த வாய்ப்புக்களும் இல்லை. பெரும்பான்மை சிங்கள மக்கள், மகிந்தவினை சர்வதேச விசாரணைக்கு உற்படுத்த எச்சந்தர்ப்பத்திலும் துணைபோக மாட்டார்கள்.

இதனை நன்கு உணர்ந்துள்ள தற்போதைய அரசாங்கம், அத்தகைய முன்னெடுப்புக்களை செய்து, தமது அரசாங்கம் மீதான விமர்சனத்தினை பெற்றுக்கொள்ள தயாராக இல்லை.

ஆகவே இனி தமிழ் மக்களின் பிரச்சினைகளை, ஐ.நா விற்கு அறியப்படுத்துவதனால் எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை.

கலப்பு நீதிமன்றத்தின் ஊடாக இதனை ஆராய்வது பொருத்தமான சாத்தியமும் இல்லை. தற்போதைய நிலையில் எமது இறுதி ஆயுதம் எதிர்க்கட்சி தலைமைத்துவமே.

இவ் எதிர்கட்சி அந்தஸ்தினை தக்கவைத்து, தனி ஈழம் அல்லது சமஸ்டிக்கான வாக்கெடுப்பினை, வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடம் கோருவதற்கான சந்தர்ப்பத்தினை பெருவதே சிறந்ததாக அமையும்.

அல்லது காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை முழுமையாக பெற்றுக்கொள்ள முயல வேண்டும். இதற்கிடையில் தமிழ் மக்கள் இன்னும் இருக்கின்றார்கள் என நம்பிக்கொண்டிருக்கும் உறவுகளை மீட்டெடுக்க முயற்சிகளை மேற்க்கொள்ள வேண்டும்.

பெரும்பான்மை தலைமைகளை நம்பி காத்திருந்தது போதும், தமிழின அழிப்பிற்கு ஆயுதம் கொடுத்த நாடுகள், ஈழத் தமிழ் மக்களுக்கு குரல் மட்டுமே கொடுக்கின்றது.

பரவாயில்லை அந்த குரல்களும் ஓய்வதற்கு முன் தமிழினத்திற்கான தீர்வுக் கோரிக்கைகளை வென்றெடுக்க தமிழினம் முயலவேண்டும்.

காத்திருந்ததிற்கு பாடம் புகட்டிய ஐ.நா விற்கு, காலம் கடந்து தீர்மானம் கொண்டுவந்த தமிழகத்திற்கு, இதுவரையில் முழு தமிழினத்தினையும் அழிக்காமல் இருந்த பெரும்பான்மை இனத்திற்கும், தமிழினம் நன்றி மட்டுமே தெரிவிக்கும்.

இந்நிலையில் நம்பிக்கையில்லை இருப்பினும் நம்புகிறோம்,  கலப்பு நீதிமன்றமே தமிழினத்தின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் என்று. காத்திருப்போம்……!

கலப்பு நீதிமன்றமே தமிழினத்தின் கடைசி நம்பிக்கை!... Reviewed by Author on September 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.