நடிகர் விவேக் மகன் மரணம் சென்னையில் இன்று உடல் தகனம்...
நடிகர் விவேக் மகன் மூளை காய்ச்சலால் மரணம் அடைந்தார். அவருடைய உடல் தகனம் சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
விவேக் மகன்
நகைச்சுவை நடிகர் விவேக்- அருள் செல்வி தம்பதியருக்கு அமிர்தா நந்தினி, தேஜஸ்வினி என்ற 2 மகள்களும், பிரசன்ன குமார் (வயது 13) என்ற ஒரே மகனும் இருந்தனர்.
சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த பிரசன்ன குமார், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், காய்ச்சல் குணமாகவில்லை. உடல் பரிசோதனைகள் செய்ததில், அவருக்கு மூளைக்காய்ச்சல் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
இதற்காக சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 40 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. விவேக்கும், மனைவி அருள்செல்வியும் அருகில் இருந்து மகனை பார்த்துக்கொண்டனர்.
மரணம்
இந்த நிலையில், நேற்று பிரசன்ன குமாரின் உடல்நிலை கவலைக்கிடமானது. அவரது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் பலன் இல்லாமல், மரணம் அடைந்தார்.
பிரசன்ன குமாரின் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து, விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் உள்ள விவேக்கின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
திரையுலகினர் அஞ்சலி
நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னகுமாரின் மரணம், அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாமல், திரையுலகினரையும் பெரிய சோகத்தில் ஆழ்த்தியது. நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏராளமானோர் விவேக் வீட்டு முன்பு திரண்டு நின்றார்கள்.
சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர், காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் ஆகியோர் பிரசன்னகுமார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இன்று உடல் தகனம்
நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத்தலைவர் பொன்வண்ணன், நடிகர்கள் விஜய், ஜெயம் ரவி, பிரபுதேவா, உதயநிதி ஸ்டாலின், சந்தானம், தாமு, கரண், உதயா, சிங்கம் புலி, சிங்கமுத்து, சூரி, மனோபாலா, நடிகைகள் விந்தியா, சரண்யா, லலிதகுமாரி, கும்தாஜ், டைரக்டர்கள் ஹரி, தங்கர்பச்சான், டி.பி.கஜேந்திரன், தயாரிப்பாளர் ஜி.தியாகராஜன் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
பிரசன்னகுமார் உடல் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகலில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, விருகம்பாக்கம் இளங்கோ நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
பட உலகினர் இரங்கல்
பிரசன்ன குமாரின் அகால மரணத்துக்கு நடிகர்கள் அஜித்குமார், பிரசன்னா, சசிகுமார், நடிகை குஷ்பு உள்ளிட்ட பட உலகினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
அஜித்குமார் தனது செய்தியில், ‘‘நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னா மரணம் அடைந்துவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை. மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அவரது ஆன்மா அமைதி பெறட்டும்” என கூறி உள்ளார்.
நடிகை குஷ்பு தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘‘நடிகர் விவேக் மகன் அகால மரணம் அடைந்து விட்டார் என்ற தகவல் மிகுந்து துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. எந்தவொரு பெற்றோருக்கும் இது மிகப்பெரிய இழப்பு ஆகும். அவரது ஆன்மா அமைதி அடைவதாக” என கூறி உள்ளார்.
நடிகர் விவேக் மகன் மரணம் சென்னையில் இன்று உடல் தகனம்...
Reviewed by Author
on
October 30, 2015
Rating:

No comments:
Post a Comment