பிணைக்கைதிகளை தலையை துண்டித்து கொன்ற ஐ.எஸ். தீவிரவாதி ‘ஜிகாதி ஜான்’, அமெரிக்க தாக்குதலில் பலி சிரியாவில் காரில் சென்றபோது நடத்தப்பட்ட குண்டுவீச்சில், மேலும் 3 பேர் சாவு
பிணைக்கைதிகளை தலையை துண்டித்து கொன்ற ஐ.எஸ். தீவிரவாதி ‘ஜிகாதி ஜான்’, அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டார். சிரியாவில் காரில் சென்றபோது நடத்தப்பட்ட குண்டுவீச்சில் மேலும் 3 பேர் பலியாகினர்.
‘ஜிகாதி ஜான்’
ஈராக், சிரியாவில் முக்கிய நகரங்களை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள், மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து, சிறிது காலம் வைத்திருந்து, பின்னர் தலையை துண்டித்து கொல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இப்படி பிணைக்கைதிகளை தலையை துண்டித்து கொலை செய்த கொலையாளி, ஐ.எஸ். தீவிரவாதி ‘ஜிகாதி ஜான்’ (வயது 27) என தெரிய வந்தது.
உயிரை உறைய வைத்த வீடியோ
இந்த ஜிகாதி ஜான்தான் அமெரிக்க பத்திரிகையாளர்கள் ஜேம்ஸ் போலே, ஸ்டீவன் சாட்லோப், அமெரிக்க தொண்டு நிறுவன ஊழியர் பீட்டர் காசிக் உள்ளிட்ட பல பிணைக்கைதிகளை மிகவும் கொடூரமாக தலையை துண்டித்து படுகொலை செய்து, வீடியோ வெளியிட்டார்.
அந்த வீடியோ, உயிரை உறைய வைப்பதாக அமைந்தது.
காரில் சென்றபோது கொல்லப்பட்டார்
இந்த நிலையில், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைநகர் என கருதப்படுகிற ராக்கா நகரில் நேற்று முன்தினம் ஜிகாதி ஜானும், மேலும் 3 ஐ.எஸ். தீவிரவாதிகளும் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். அந்த கார், ராக்கா நகரின் கவர்னர் அலுவலகம் அருகே சென்றபோது, அமெரிக்கா நடத்திய குண்டு வீச்சில் சிக்கியது.
இதில் காரில் சென்ற ஜிகாதி ஜானும், மற்றவர்களும் கொல்லப்பட்டனர். இந்த தகவலை இங்கிலாந்தை சேர்ந்த கண்காணிப்பகம் ஒன்றின் இயக்குனரான ரமி அப்துல் ரகுமான், செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ‘‘ராக்கா நகரில் உள்ள மருத்துவமனையில் ஜிகாதி ஜானின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இதை அங்குள்ள எல்லா வட்டாரங்களும் கூறுகின்றன. ஆனால் தனிப்பட்ட முறையில் என்னால் இந்த தகவலை உறுதி செய்ய முடியாது’’ என்றார்.
பென்டகன் ஆராய்கிறது
இந்த தகவல்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் கூறுகிறது.
இதுபற்றி பென்டகன் செய்தி தொடர்பாளர் பீட்டர் குக் கூறும்போது, ‘‘வெள்ளிக்கிழமை இரவு சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் முடிவுகள் குறித்த தகவல்களை மதிப்பிட்டு வருகிறோம். உரிய நேரத்தில், சரியான தகவல்கள் வெளியிடப்படும்’’ என்றார்.
ஜிகாதி ஜான், அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பது உண்மை என்றால், இது ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்க கூட்டுப்படைகளின் நடவடிக்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க பிணைக்கைதிகளின் படுகொலைக்கு நீதி தேடித்தராமல் விட மாட்டேன் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த ஆண்டு கூறியது, இந்த தருணத்தில் நினைவுகூரத்தக்கது.
குவைத்தில் பிறந்தவர்
இந்த ஜிகாதி ஜானின் உண்மையான பெயர் முகமது எம்வாஸி. இங்கிலாந்து குடிமகனான இவர் குவைத்தில் பிறந்தவர் என நம்பப்படுகிறது. ஆங்கிலம் சரளமாக பேசக்கூடியவர். ஐ.எஸ். தீவிரவாதிகளின் மூளைச்சலவையில் மயங்கி, அந்த இயக்கத்தில் சேர்ந்து தீவிரவாத செயல்களை அரங்கேற்றி வந்தவர்.
ஜிகாதி ஜானை உயிரோடு பிடிக்க வேண்டும் அல்லது கொல்ல வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த ஆண்டு தனது நாட்டு படையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இப்போது அமெரிக்க தாக்குதலில் ‘ஜிகாதி ஜான்’ கொல்லப்பட்டிருப்பதாக இங்கிலாந்து நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
பிணைக்கைதிகளை தலையை துண்டித்து கொன்ற ஐ.எஸ். தீவிரவாதி ‘ஜிகாதி ஜான்’, அமெரிக்க தாக்குதலில் பலி சிரியாவில் காரில் சென்றபோது நடத்தப்பட்ட குண்டுவீச்சில், மேலும் 3 பேர் சாவு
Reviewed by NEWMANNAR
on
November 14, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 14, 2015
Rating:


No comments:
Post a Comment