அண்மைய செய்திகள்

recent
-

இரகசியத் தடுப்பு முகாம்களைத் தேடிப் பிடிக்குமா ஐ.நா?


திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் இரகசியத் தடுப்பு முகாம் ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாக பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா. செயற்குழு, அறிவித்ததைத் தொடர்ந்து உலகெங்கும் உள்ள ஊடகங்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஐ.நா. நிபுணர் குழு, இலங்கையில் கடந்த 9ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை நடத்திய ஆய்வுகளின் முடிவில், கடந்த புதன்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே, இந்த இரகசிய தடுப்பு முகாம் பற்றிய தகவல்களை வெளியிட்டிருந்தது.

இந்த தகவல் சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

ஏற்கனவே கொழும்பு மற்றும் சுற்றுப் புறங்களில் கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் 11 பேர் குறித்த விசாரணையின் போது, திருகோணமலைக் கடற்படைத் தளம் அருகே, இந்த இரகசிய சித்திரவதைக் கூடம் அமைந்திருப்பது பற்றிய தகவல்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றத்தில் வெளியிட்டிருந்தனர்.

ஆனால், தலா 12 சிறைக்கூடங்களைக் கொண்ட மூன்று கட்டடங்கள், முறையான சிறைச்சாலை வசதிகள் ஏதுமின்றி, அமைக்கப்பட்டிருந்ததை தாம் அவதானித்ததாக, ஐ.நா. குழுவினர் கூறியிருக்கின்றனர்.

அங்கு 2010ஆம் ஆண்டு பலர் சிறை வைக்கப்பட்டிருந்தனர் என்று நம்புவதற்கான சில தடயங்களையும் அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.

இரகசிய சிறைக்கூடங்களோ, தடுப்பு முகாம்களோ கிடையாது என்றே மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் மட்டுமல்ல, இப்போதைய மைத்திரிபால சிறிசேன அரசாங்கமும் கூறி வந்திருக்கின்றன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன உள்ளிட்ட பலரும், எந்த இரகசியத் தடுப்பு முகாமும் கிடையாது என்றே பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்கள்.

திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் ஒரு இரகசிய தடுப்பு முகாம் செயற்படுவதாக ஆரம்பத்தில் இருந்தே தமிழர் தரப்பிலும் கூறப்பட்டு வந்தது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அதுபற்றிய தகவல்களை வெளியிட்டிருந்தாலும், ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைத்திருக்கவில்லை.

இப்போதும் கூட போதிய வசதிகளின்றி- தடுப்புக்கூடங்கள் இருப்பதைத் தான் ஐ.நா. குழு கண்டறிந்திருக்கிறதே தவிர, அங்கு யாரும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை காணவில்லை. ஆனாலும், அங்கு சுவரில் காணப்பட்ட எழுத்துக்களும், கறைகளும், தடுப்பில் இருந்தவர்களின் அடையாளம் என்று ஐ.நா. குழு தீர்மானித்திருக்கிறது.

போதிய வசதிகளற்ற இந்த தடுப்புக்கூடங்களை வேறு தேவைகளுக்காக கடற்படை அமைத்தது என்று நியாயப்படுத்தவோ விளக்கம் கொடுக்கவோ முடியாது.

உயர்மட்டத்துக்குத் தெரியாமல் இந்த இரகசியத் தடுப்பு முகாம் செயற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் ஐ.நா. குழு கூறியிருப்பதன் அர்த்தமே, அரசாங்கத்தின் உயர்மட்டங்களுக்கு இது தெரிந்திருப்பதற்கான வாய்ப்புகளை வெளிப்படுத்தியிருக்கிறது.

தென்னாபிரிக்க சட்டநிபுணர் ஜஸ்மின் சூகா தலைமையிலான சர்வதேச மனித உரிமை அமைப்பு ஒன்று அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இந்த இரகசியத் தடுப்பு முகாம் பற்றிய தகவல்கள் செய்மதிப்பட ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும், இப்போது தான் முதன்முதலாக சர்வதேச நிபுணர்களின் கண்களில் அது அகப்பட்டிருக்கிறது.

இனிமேல் இந்த இரகசியத் தடுப்பு முகாம் விவகாரம் அவ்வளவு இலகுவாக சர்வதேச சமூகத்தினாலோ அல்லது, மனித உரிமை அமைப்புகளாலோ மறக்கப்படமாட்டாது.

காணாமற்போனோர் தொடர்பான கேள்விகள் எழுப்பப்படும் ஒவ்வொரு தருணத்திலும், இந்த இரகசியத் தடுப்பு முகாம் பற்றிய தகவல்கள் ஊடகங்களிலும் அறிக்கைகளிலும் இடம்பெறுவது தடுக்கப்பட முடியாது போகும்.

ஆனால், போரின் போதும், போருக்குப் பின்னரும், இத்தகைய பல இரகசியத் தடுப்பு முகாம்களை படைத்தரப்பு வைத்திருந்தது என்ற கருத்து பரவலாகவே உள்ளது.

லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றுக்கு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அண்மையில் அளித்திருந்த பேட்டியில், இரகசியத் தடுப்பு முகாம்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

அதில் அவர் இராணுவப் புலனாய்வில் இரகசிய தடுப்பு முகாம்கள் ஒன்றும் புதிய விடயமல்ல என்று கூறியிருந்தார்.

அதாவது போர் உத்திகளில் ஒன்றாகவே அவர் இரகசிய தடுப்பு முகாம்களை குறிப்பிட்டிருந்தார். எனினும், காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா குழுவின் பிரதிநிதிகளோ, தரக்குறைவான இரகசிய முகாமொன்றில் தடுத்து வைக்கப்படுவது மனித உரிமை மீறலாகும் என்று கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது கூறியிருந்தனர்.

அதிகாரபூர்வமற்ற இரகசிய தடுப்பு முகாம்களை, முன்னைய அரசாங்கம் தாராளமாகவே அனுமதித்திருந்தது என்பது, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கருத்து வெளிப்படுத்துகிறது.

அத்தகைய முகாம்கள் இப்போது வெளிச்சத்துக்கு வரும் போதே, அவை எத்தகைய பாரதூரமானவை என்பது படைத்தரப்பினருக்கே புரிகிறது போலத் தெரிகிறது.

அதேவேளை, போர்க்காலங்களிலும், போருக்குப் பின்னரும், இலங்கையின் பல பாகங்களிலும் இரகசிய தடுப்பு முகாம்கள் இருந்ததற்கான சான்றுகளை தேடிப் பிடிக்க வேண்டிய பொறுப்பு இப்போது ஐ.நா.வுக்கு வந்திருக்கிறது.

இரகசியத் தடுப்பு முகாம்கள் பற்றிய சந்தேகம் இருந்ததால் தான், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வந்திருந்த, போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும், அமெரிக்கத் தூதுவரான ஸ்டீபன் ராப், பூசா தடுப்பு முகாமுக்கு அருகிலுள்ள ஒரு இராணுவ முகாமுக்குள் திடீரென நுழைந்து தேடுதல் நடத்தியிருந்தார்.

பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை பார்வையிடுவதற்காக சென்றிருந்த போது, அந்த தடுப்பு முகாமுடன் இணைந்திருந்த இராணுவ முகாம் ஒன்றுக்குள் அவர் திடீரென நுழைந்து, தேடுதல் நடத்தும் பாணியில் பார்வையிட்டார்.

போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்கள் இரகசிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தான் அவர் அந்த தேடுதலை நடத்தியிருந்தார்.

அதேவேளை, இராணுவ முகாம் ஒன்றுக்குள் ஸ்டீபன் ராப் குழுவினர் அத்துமீறி நுழைந்ததாக, அரசாங்க வட்டாரங்கள் பின்னர் குற்றம்சாட்டியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

போரின் முடிவில் சரணடைந்தவர்கள், கடத்தப்பட்டு காணாமற் போனவர்கள் இரகசியத் தடுப்பு முகாம்களில் இன்னமும் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற ஊகங்களை வலுப்படுத்தும் சில சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

போரின் முடிவில் படையினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான விநாயகம் என்பவரின், மனைவி பிள்ளைகள், அண்மையில் புலனாய்வுப் பிரிவினர் என்று சந்தேகிக்கப்படுவோரால் தென்மராட்சி வரணியில் உள்ள வீட்டில் திடீரெனக் கொண்டு வந்து இறக்கி விடப்பட்டிருந்தனர்.

இவர்கள் இதுவரை எங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்ற விபரம் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

இதுபோன்று கடத்தப்பட்டு காணாமற்போன சிலரின் குடும்பங்களுக்கு, அவர்கள் உயிருடன் இருப்பதான தகவல்களும் படைத்தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இவர்கள், எந்த அதிகாரபூர்வ முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக பகிரங்கப்படாதவர்கள்.

எனவே இவர்கள், இரகசியத் தடுப்பு முகாம்களில் தான் இருந்திருக்கின்றனர் என்பது உறுதியாகிறது.

இப்போது வரைக்கும், இரகசியத் தடுப்பு முகாம்களில் ஒன்றை மட்டுமே ஐ.நா.வினால் கண்டறிய முடிந்திருக்கிறது.

இதையடுத்து, இரகசியத் தடுப்பு முகாம்கள், அங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்போர் பற்றிய விபரங்களை வெளியிட வேண்டும் என்று அரசாங்கத்திடம் ஐ.நா. குழு கோரியிருக்கிறது.

ஏற்கனவே, அத்தகைய இரகசியத் தடுப்பு முகாம்கள் ஏதும் இல்லை என்று வாதிட்ட அரசாங்கம், புதிதாக ஏதேனும், தடுப்பு முகாம்கள் பற்றிய இரகசியங்களை வெளியிடும் என்று எதிர்பார்க்க முடியாது.

எனினும், ஐ.நா.வின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்று விசாரணைகளை நடத்தும் என்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்ன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு என்ற பெயரில், இரகசிய தடுப்பு முகாம்கள், சித்திரவதைக் கூடங்களை அரசபடைகள் பேணி வந்திருப்பது இப்போது உறுதியாகியிருக்கும் நிலையில், ஐ.நா.வும் சர்வதேச சமூகமும் இதனை எந்தளவுக்கு விசாரணைக்குட்படுத்தப் போகின்றன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ஜெனீவா தீர்மானத்துக்கு அமைய, ஐ.நா.வின் கண்காணிப்பாளர்களும், பிரதிநிதிகளும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கைக்கு வரவுள்ள நிலையில், இரகசியத் தடுப்பு முகாம்களைத் தேடுவதற்கான பொறிமுறை ஒன்றை ஐ.நா. உருவாக்கினால் தான் பல இரகசியங்கள் வெளிச்சத்துக்கு வரும். ஐ.நா.வின் தேடுதல் தான், இரகசியத் தடுப்பு முகாம்கள், காணாமற்போனவர்கள் பற்றிய இரகசியங்கள் பலவற்றையும் வெளிப்படுத்துமே தவிர, உள்ளக விசாரணைகள் அதனைச் செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது.

காணாமற்போனவர்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்த சர்வதேச சமூகம் ஆர்வம் கொண்டிருப்பதுது உறுதியானால், முதலில் இரகசியத் தடுப்பு முகாம்களை தேடத் துவங்க வேண்டியது தவிர்க்க முடியாதது.

இரகசியத் தடுப்பு முகாம்களைத் தேடிப் பிடிக்குமா ஐ.நா? Reviewed by Author on November 22, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.