பிறந்து 8 நாட்களே ஆன ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள்: அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் சாதனை...
சுவிஸின் பெர்ன் மருத்துவமனையில் பிறந்து 8 நாட்களே ஆன ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் பிரித்துள்ளனர்.
டிசம்பர் மாதம் 2ம் திகதி, பேஸல் பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர் 3 பெண் குழந்தைகளை சிசேரியன் மூலம் பெற்றுள்ளார்.
அவற்றில் 2 பெண் குழந்தைகள் கல்லீரல், இதய வெளியுறை மற்றும் விலா எழும்புகள் இணைந்த நிலையில் ஒட்டி பிறந்துள்ளனர்.
மூன்றாவது பெண் குழந்தை நலமாக இருந்த நிலையில், ஒட்டி பிறந்த குழந்தைகள் மொத்தமே 2200 கிராம் எடை மட்டுமே இருந்துள்ளனர்.
அந்த 2 பெண் குழந்தைகளில் ஒருவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகவும் மற்றொரு குழந்தைக்கு குறைவாகவும் இருந்ததால் ஒரு குழந்தைக்கு போதுமான ரத்தம் செல்லவில்லை.
பொதுவாக மருத்துவ உலகை பொருத்தவரை ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளை பிரிக்க குழந்தை பிறந்ததில் இருந்து 3 அல்லது 6 மாதம் வரை கழித்தே முயற்சிகள் தொடங்கப்படும்.
ஆனால் இந்த இரட்டைக் குழந்தைகளை உடனே அறுவை சிகிச்சை மூலம் பிரித்தாக வேண்டிய நிலை இருந்ததால் குழந்தைகள் பிறந்து 8 தினங்கள் கழித்து, அதாவது கடந்த டிசெம்பர் 10ம் திகதி 5 மணி நேர அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரித்துள்ளனர்.
பெர்னில் உள்ள Inselspital மருத்துவமனையில், ஜெனிவாவின் மருத்துவ பல்கலைக்கழக உதவியுடன் 10 பேர் கொண்ட மருத்துவக் குழு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.
குழந்தை அறுவை சிகிச்சை மருத்துவர் Steffen Berger கூறுகையில், இரண்டு குழந்தைகளும் தற்போது நலமாக உள்ளனர்.
இருவரும் நன்றாக உணவருந்துவதால் பிறந்தபோது இருந்த எடையை விட தற்போது 2 மடங்கு அதிக எடையை அடைந்துள்ளனர்.
அந்த குழந்தைகளின் தற்போதைய எடை 1890 கிராம் மற்றும் 2120 கிராம் என தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த இரட்டை பெண் குழந்தைகள் இன்னும் சில வாரங்களில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றப்படுவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அறுவை சிகிச்சையின் போதும் பின்னும் குழந்தைகள் மற்றும் தாயை பல்வேறு மருத்துவ துறையை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் ஒன்றாக இருந்து பார்த்துக் கொண்டுள்ளனர்.
குழந்தைகளின் தந்தை கூறுகையில், நாங்கள் இன்ப அதிர்ச்சியில் இருக்கிறோம். ஆனால் அது அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை.
இரட்டை பெண் குழந்தைகள் ஒட்டிபிறக்க உள்ளதை அறிந்ததும் நாங்கள் 3வது குழந்தையை மட்டுமே பெற்றுகொள்வது பற்றி விவாதித்தோம்.
ஆனால் மருத்துவர்கள் தான், அந்த குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் பிரிக்க வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்தனர்.
இதையடுத்தே நானும் என் மனைவியும் தெளிவானோம். அந்த குழந்தைகளின் உயிரை பறிக்கும் உரிமை நமக்கு இல்லை என்பதை உணர்ந்தோம்.
மேலும், குழந்தைகள் எப்படி இருந்தாலும் அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.
பிறந்து 8 நாட்களே ஆன ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள்: அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் சாதனை...
Reviewed by Author
on
January 31, 2016
Rating:

No comments:
Post a Comment