வடக்கில் அடையாளமிட்ட அபிவிருத்தித் திட்டங்கள், நிதி ஆணைக்குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிப்பு!
வடக்கு அரசினால் நடப்பு நிதியாண்டில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, நிதி ஆணைக்குழுவின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பிரதம செயலாளர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரசாங்கத்தினால் நடப்பு நிதியாண்டுக்கு வட மாகாண சபைக்கு 3 ஆயிரத்து 199 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதனை அடிப்படையாக கொண்டு, மாகாண சபையின் ஒவ்வொரு அமைச்சுக்கும் நிதி பங்கீடு செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை இடம்பெற்ற வடமாகாண சபையில் பாதீட்டுக் கூட்டத் தொடரில், நிதிச் செலவீனத்துக்கான அனுமதி கிடைக்கப் பெற்றது.
அத்துடன், நடப்பு ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் 5 அமைச்சுக்களினாலும் இனங்காணப்பட்டது.
அவ்வாறு இனங்காணப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதாக, நிதி ஆணைக்குழுவுக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக 2015ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை உரிய காலத்துக்கு முன்னர் செலவு செய்து முடிப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.
எனினும், நிதி ஆணைக்குழுவின் அனுமதி ஏப்ரல் மாதமளவிலேயே கிடைக்கப் பெற்றதால், இந்தத் திட்டங்களை முடிவுறுத்துவதில் தாமதம் ஏற்படுவதாகச் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மாகாணசபையில் தெரிவித்திருந்தார்.
எனவே, ஜனவரி மாதமே நிதி ஆணைக்குழுவின் அனுமதிக்காக அபிவிருத்தித் திட்டங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கில் அடையாளமிட்ட அபிவிருத்தித் திட்டங்கள், நிதி ஆணைக்குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிப்பு!
Reviewed by Author
on
January 31, 2016
Rating:

No comments:
Post a Comment