ஈழத் தமிழர்களின் பண்பாடு, அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் தேவை: கி.வீரமணி...
இலங்கையில் புதிய அரசு பொறுப்பேற்று ஓராண்டாகிறது. ஈழத் தமிழர்களான ஆதிக்குடிகளை அன்னியப்படுத்தாமல் அவர்களின் பண்பாடு, அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் சிறீசேன தலைமையில் தமிழர்களின், இஸ்லாமியர்களின் ஆதரவு காரணமாக அமைந்த அரசு அமைந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது.
கொடுங்கோலன், தமிழினப் படுகொலையாளியான மகிந்த ராஜபக்சவின் ஆட்சி ஒழிந்து ஓராண்டு ஆகிறது என்றே நாகரிக உலகமும், உலகெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும் கருதுகின்றனர்.
புதிய அதிபர் சிறீசேன தலைமையில் உள்ள அரசு தேர்தலின் போது அது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது அதன் தலையாய கடமை! அந்த வகையில், அதிபர் ஆட்சி முறையை மாற்றி கபினட் தகுதியுள்ள ஜனநாயக முறை திருத்தத்தை நிறைவேற்றியது வரவேற்கத்தக்கது.
புதிய ஆட்சி செய்ய வேண்டியது என பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை முதலிய அடிப்படை உரிமைகள் தான் ஜனநாயகத்தின் மூச்சுக்காற்று! அதற்கு எவ்வித குந்தகமோ, தடையோ இல்லாத ஆட்சியாக தனது ஆட்சியை நடத்த வேண்டியது அதன் முக்கிய தேவையாகும்.
சிங்களப் பெரும்பான்மை நாடாக இருப்பினும், சிறுபான்மையினர் என்று தமிழர்களைக் கருதாமல், இலங்கையின் ஆதிக்குடி உரிமை உள்ளவர்கள் என்ற வரலாற்றுக் கண்ணோட்டத்தோடும், இலங்கையின் வளர்ச்சிக்குத் தமிழர்கள் அளித்த வியர்வை வெள்ளமும், இரத்தத் துளிகளின் வெள்ள ஆறும் சாதாரணமானவையல்ல.
அண்மைக் காலத்தில் போர்க் குற்றங்கள் என்ற மனித நேயமற்ற காட்டுவிலங்காண்டித்தனத்தின் காரணமாக தமிழர்கள் கொட்டிய இரத்தக் கண்ணீர் மறக்கக் கூடாதவை - மறக்க முடியாதவையும்கூட
சிங்கப்பூர் நாட்டில் எப்படி, பெரும்பான்மை சீனர்களுக்கு இணையாக மலாய்க்காரர்கள், தமிழர்கள், யூரேஷியர்கள் ஆகியவர்கள் சம உரிமை, சம வாய்ப்புள்ள குடிமக்களாகக் கருதப்பட்டு நடத்தப்படுகிறார்களோ அதுபோல, இலங்கையில் தமிழர்கள், முஸ்லிம் மக்கள் எல்லோரும் நடத்தப்படுதல் வேண்டும்.
தமிழர்களின் உரிய இடங்கள், பகுதிகளை அவர்களுக்கே மீண்டும் தந்து, மீள்குடியேற்றத்தில் தனி அவசர அக்கறையை இலங்கை அரசு காட்டவேண்டும். அதைவிட முக்கியம், சிறையில் உள்ள பல்லாயிரக்கணக்கான அல்லது பல நூற்றுக்கணக்கான தமிழர்களை (குற்றம் எதுவும் செய்யாமலே சிறைக் கொடுமை அனுபவிப்பவர்களை உடனடியாக விடுதலை செய்து, வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும்.
தமிழர்களை அன்னியப்பட்டவர்களாக நினைக்க வேண்டாம்!
தமிழ் மொழி, பண்பாடு, நாகரிகத்திற்கும், அடிப்படை உரிமைகளுக்கும் இலங்கை அரசு தகுந்த வாய்ப்பும், உத்தரவாதமும் அளித்து, தமிழர்கள் இலங்கை அரசுக்கு அன்னியப்பட்டவர்கள் என்ற பழைய நினைப்பை - அணுகுமுறையை அடியோடு மாற்றிக்கொண்டு செயல்பட முன்வரவேண்டும்.
இலங்கை மத்திய அரசு - மாநில அரசு - பல்வகை தனி அதிகாரப் பகிர்வுடன் கூடியவைகளாக இயங்கி, வடக்கு, கிழக்கு, தமிழ் மாகாண குடிமக்கள் உள்பட அனைவர்க்கும் அனைத்து அதிகாரங்களும் கிடைக்கும் வண்ணம் முந்தைய நிலைப்பாட்டினை முற்றாக மாற்றி, புதியதோர் நிலைப்பாட்டை நடைமுறையில் காட்டினால், அனைவர்க்கும் அனைத்தும் என்ற உறவும், உரிமையும் குடிமக்கள் மத்தியில் பூத்துக் குலுங்கும் நிலை இனி வருங்காலத்தில் ஏற்படக்கூடும். இலங்கையும் பொருளாதாரத்தில் வளர்ச்சியை நோக்கியும் செல்ல முடியும்.
இவை சிறப்பாக நடக்க வேண்டுமானால், முக்கியமாக இரத்த வெறி கொண்ட புத்த பிக்குகளை ‘‘அரசியல் அழுத்தக்காரர்களாக’’ ஒருபோதும் அனுமதிக்காமல், மதத்தை அவர்கள் எல்லைக்குள் அடக்கி, மதத்தின் தலையீடு இலங்கை அரசியலில் தவிர்க்கப்பட்டால், எல்லா தரப்பினரின் ஏகோபித்த ஒத்துழைப்பை சிறீசேன தலைமையிலான அரசு பெறக்கூடும்.
எம் அரும் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்களின் காயங்கள் இன்னமும் வடுக்களாகக்கூட மாறாத நிலையில், தமிழர் உரிமைகளின் அங்கீகாரம் மிகவும் அவசரம், அவசியம். இவ்வாறு கூறியுள்ளார்.
ஈழத் தமிழர்களின் பண்பாடு, அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் தேவை: கி.வீரமணி...
Reviewed by Author
on
January 13, 2016
Rating:

No comments:
Post a Comment