அண்மைய செய்திகள்

recent
-

போரால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் உதவிகளின்றி தொழில்களை ஆரம்பிக்க முடியாத நிலை. வட மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம்.படங்கள் இணைப்பு


எமது மக்களுக்கு அதிகளவான உதவிகள் போரின் பின்பான வாழ்வாதார இயல்பு நிலைக்குத் தேவைப்படுகின்ற நிலையில், உதவி தேவையானவர்களில் முன்னுரிமைக்கு உரியவர்களை இனங்கண்டு உதவிவருகின்றோம். ஆகவே உதவி பெறுபவர்கள் உதவிகளை உரியவாறு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தனது நிதி ஒதுக்கீட்டில்; தொழில் தேவையுள்ள தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு சுயதொழில் முயற்சிகளுக்காக துவிச்சக்கர வண்டிகள் , நிறுத்தல் அளவை உபகரணங்கள், மீன்பிடி வலைகள் மற்றும் உபகரயங்கள், குளிர்பாணம் தயாரிக்கும் இயந்திரம், கடை நடத்துவதற்கான தளபாடங்கள் ஆகியவை வழங்கும் நிகழ்வு நேற்று இடம் பெற்றது.

-குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,
வடக்குக் கிழக்கில் இடம்பெற்ற யுத்தம் எமது வாழ்வாதாரத்திற்கான சகலவற்றினையும் அழித்துள்ளது. இவ்வாறு எமது வாழ்வாதாரத்திற்கான மார்க்கங்கள் அழிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றனவே தவிர அதனை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பாரிய வேலைத்திட்டங்கள் குறைவாகவே உள்ளன.

இந்தநிலையில் போரை நடத்திய அரசு மக்களின் இழப்பீடுகளை சரியாக இனங்கண்டு அவற்றுக்கு பொறுப்புச் சொல்லும் நிலையை அடைந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் அது கூட இன்றுவரையில் இடம்பெறவில்லை.

இவ்வாறானதோர் நிலையில், வடக்கு மாகாண சபை அமைக்கப்பட்டதன் பின்னர் மாகாண சபையின் திட்டங்கள் வாயிலாகவும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் குறித்தொதுக்கப்பட்ட மூலதன நிதி ஊடாகவும் முன்னுரிமை அடிப்படையில் மக்களுக்கு எம்மால் இயன்ற உதவித்திட்டங்களை வழங்கி வருகின்றோம்.

இவ் உதவித்திட்டங்களை நாம் எவ்வளவு தூரம் சிரத்தையுடன் வழங்கிவருகின்றோமோ அதேயளவு சிரத்தையுடன் நீங்களும் சரியாகப் பயன்படுத்தும் போது தான் சரியான முன்னேற்றத்தினை அடைய முடியும்.

சாதாரணமாக வழங்கப்படும் உதவிகளைக் காட்டிலும் தொழில் முயற்சிகளுக்காக வழங்கப்படும் உதவிகள் ஓர் நிலையான நீடித்து நிற்கக் கூடிய அபிவிருத்தியை நோக்காகக் கொண்டவையாகும். எனவே எமது மக்கள், வழங்கப்படும் இந்த உதவிகளை சரியாகக் கையாள வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் போரின் பின்பாக உட்கட்டமைப்புக்களை ஏற்படுத்தி விட்டு மக்கள் தமது தொழில்களை தாமே கட்டியெழுப்பிவிடுவர் என மத்தியில் இருந்த அரசாங்கம் கூறியது.

உண்மையில் பாதிக்கப்பட்ட நலிவடைந்த ஓர் சமூகத்தினால் தமக்கான தொழில்களை தாமே கட்டியெழுப்ப முடியாது.

அவ்வாறு எதிர்பார்க்கவும் முடியாது. கட்டாயமாக மக்களுக்கு அரச உதவிகள் அவசியம். இவ்வாறான சூழ்நிலையில் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்மால் மக்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்பத்தக்க உதவிகளை வழங்க முடிந்துள்ளமை நல்லதோர் நிலைமையாகும்.

இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார். இவ் உதவிகள் வழங்கும் நிகழ்வில் வடக்கு மகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.













போரால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் உதவிகளின்றி தொழில்களை ஆரம்பிக்க முடியாத நிலை. வட மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம்.படங்கள் இணைப்பு Reviewed by NEWMANNAR on January 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.