அண்மைய செய்திகள்

recent
-

மகசின் சிறையில் 75 அரசியல் கைதிகள் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம்!


சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளக் கோரியும் அப்போராட்டத்தை வலுப்படுத்தும் வகையிலும் மகசின் சிறைச்சாலையில் உள்ள 75 தமிழ் அரசியல் கைதிகளும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை இன்றைய தினம் முன்னெடுக்கவுள்ளனர்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் நீண்டகாலமாக விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான யாழ்.கரவெட்டி வடக்கு கரணவாயைச் சேர்ந்த மதியரசன் சுலக்சன், நாவலப்பிட்டி மக்கும்பரவைச் சேர்ந்த கணேசன் சந்திரன் ஆகிய இருவரும் கடந்த திங்கட்கிழமை முதல் தமது விடுதலையை வலியுறுத்தி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர்.

ஆறாவது நாளாகவும் அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை அவர்களது வழக்கு விசாரணை வவுனியா நீதிமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுமென சட்டமா அதிபர் திணைக்களம் உரிய அதிகாரிகளின் மூலம் அறிவித்திருந்ததையடுத்து நேற்று முன்தினம் சனிக்கிழமை தமது போராட்டத்தை இடைநிறுத்தியிருப்பதாக அறிவித்தனர்.

அதனையடுத்து அவர்களை மீண்டும் சாதாரண கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரிவிற்கும் மாற்றப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மகசின் சிறைச்சாலையின் ஜே பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பெண்ணொருவர் உட்பட 14 தமிழ் அரசியல் கைதிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று ஆறாவது நாளாகவும் முன்னெடுத்திருந்தனர்.

உடல்நிலை மோசமடைந்திருக்கும் கைதிகள் வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைவாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் மீண்டும் சிறைக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் எவ்வாறாயினும் தமது கோரிக்கைகள் தொடர்பாக உரிய பதில் கிடைக்காத வரையில் தமது போராட்டத்தை கைவிடப் போவதில்லையென்பதில் உறுதியாகவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் அவர்களின் போராட்டத்தினை வலுப்படுத்தும் வகையிலும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 75 தமிழ் அரசியல் கைதிகள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
மகசின் சிறையில் 75 அரசியல் கைதிகள் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம்! Reviewed by Author on February 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.