காணாமல்போனோருக்கு சான்றிதழ் வழங்கப்படும்....
காணாமல் போனவர்கள் மரணச் சான்றிதழை பெற்றுக் கொள்வதற்கு தயாரில்லாத நிலையில் காணப்படுகின்றார்கள். எனினும் காணாமல் போனோருக்கான காணாமல்போன சான்றிதழை வழங்குவதற்கு நாம் தீர்மானம் எடுத்துள்ளோம். அதற்கான சான்றிதழை எதிர்வரும் இரண்டு மாதகாலப் பகுதிக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
வடக்கு கிழக்கில் காணாமற்போன தமிழ் மற்றும் ஏனைய மக்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று கோரி பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண நேற்றுக் கொண்டு வந்த பிரேரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், வடக்கு கிழக்கில் மட்டுமன்றி நாடளாவிய ரீதியில் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுகின்றன.
1951 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க பிறப்பு இறப்புச் சட்டத்தின் 110 ஆவது அத்தியாயத்தின் ஊடாகவே மரணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. பொதுவாக மரணமடைகின்றவர்களுக்கே இவ்வாறான மரணச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
எமது நாட்டில் காணாமல் போனவர்களுக்கான மரண சான்றிதழை வழங்குவதற்கான சட்டங்கள் காணப்படவில்லை. எமது நாட்டில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளார்கள். பயங்கரவாதக் கிளர்ச்சிகள், சுனாமி போன்ற பல்வேறு தருணங்களில் காணாமல் போயுள்ளார்கள்.
அதேநேரம் உயிரிழந்ததை உறவினர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலைமைகளும் காணப்படுகின்றன. எனவே 2010 ஆண்டு 19 ஆவது திருத்தத்திற்கு அமைவாக காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு காணாமற் போனவர்கள தொடர்பாக சான்றிதழை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம். இதற்கான சட்டத்தை அமைச்சரவை அங்கீகாரத்துடன் சட்டமா அதிபர் திணைக்களம் மூலம் சட்ட பதிவாளர் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். எதிர்வரும் இரு மாத காலத்தினுள் காணாமற் போனவர்களின் உறவினர்களுக்கு காணாமற் போனமைக்கான சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. அதேநேரம் காணாமல் போனவர்கள் மீள்வரும் போது அதனை மீள்பதிப்பதற்கான ஏற்பாடுகளும் அவர்களுக்கு விசேட சலுகைகளை வழங்குவதற்கான உள்ளடக்கங்களும் காணப்படுகின்றன என்றார்.
காணாமல்போனோருக்கு சான்றிதழ் வழங்கப்படும்....
Reviewed by Author
on
February 13, 2016
Rating:

No comments:
Post a Comment