அண்மைய செய்திகள்

recent
-

யாழ்.நீதவான் நீதிமன்றங்கள் பிறப்பிக்கின்ற கட்டளைகளில் மேல் நீதிமன்றம் தலையிடாது


யாழ். குடாநாட்டில் உள்ள நீதிமன்ற நீதிபதிகளினால் பிறப்பிக்கப்படுகின்ற போக்குவரத்து குற்றம் சம்பந்தமான தீர்ப்புக்களில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் அநாவசியமாகத் தலையிடமாட்டாது என்று மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நேற்று (16) தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து குற்றம் தொடர்பான வழக்கொன்றில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மீளாய்வு மனு மீதான விசாரணையின்போது, அந்த நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட முடியாது என அவர் மறுத்துள்ளார்.

அண்மைக்காலமாக யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற போக்குவரத்துக் குற்றங்கள் சம்பந்தமாக விசேடமாக மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரங்களை குறிப்பிட்ட காலத்திற்கு இடைநிறுத்துமாறு இங்குள்ள நீதிமன்றங்களில் தீர்ப்பு வழங்கப்படுகின்றது.

இத்தகைய தீர்ப்புக்களை மீளாய்வு செய்து சாரதி அனுமதிப்பத்திரங்களை இடைநிறுத்துமாறு நீதவான் நீதிமன்றங்களினால் விடுக்கப்பட்ட கட்டளையை ரத்துச் செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.

மதுபோதையில் வாகனம் செலுத்திய போது இடம்பெற்ற வாகனப் போக்குவரத்து விபத்து ஒன்றில் பாதசாரி ஒருவர் மரணம் அடைந்த சம்பவத்தில் சாரதி மதுபோதையில் வாகனம் செலுத்தியமைக்காக அவருடைய சாரதி அனுமதிப் பத்திரத்தை நீதவான் நீதிமன்றம் 9 மாதங்களுக்குச் செல்லுபடியற்றது என இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இதேபோன்று இன்னுமொரு வழக்கிலும் சாரதி அனுமதிப்பத்திரத்தை 9 மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த இரண்டு வழக்குகளிலும் வழங்கப்பட்ட நீதவான் நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை எதிர்த்து யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுக்களில் சாரதி அனுமதிப்பத்திரத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவை நீக்குமாறு கோரப்பட்டிருந்தது.

இவற்றில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டு சம்பந்தப்பட்ட மீளாய்வு மனு மீதான விசாரணை கடந்த வெள்ளியன்று மேல் நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டபோது, வாகனப் போக்குவரத்து குற்றச் செயல்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதவான் நீதிமன்றங்கள் பிறப்பிக்கின்ற கட்டளைகளில் மேல் நீதிமன்றம் அநாவசியமாகத் தலையிட மாட்டாது என்று நீதிபதி இளங்செழியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நீதவான் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் தாமாகவே முன்வந்து குற்றவாளி என ஒப்புக் கொண்டதன் பின்னர் சட்ட வரையறைக்கு உட்பட்டே தீர்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. எனவேஇ இத்தகைய வழக்குகள் தொடர்பில் மீளாய்வு மனு தாக்கல் செய்யும்போது, அந்தத் தீர்ப்பில் சட்டரீதியாக என்ன பிழை இருக்கின்றது என்பது மீளாய்வு மனுவில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

நீதவான் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் மேல் நீதிமன்றம் தலையீடு செய்வதற்கு விதி விலக்கான காரணங்கள் என்னென்ன இருக்கின்றன என்பதும் அந்த மீளாய்வு மனுவில் முறையாக சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்களை மீளாய்வு செய்வதற்குரிய சட்ட ரீதியான காரணங்கள் அல்லது விளக்கங்கள் மீளாய்வு மனுக்களில் குறிப்பிடப்படாத சூழ்நிலையில் நீதவான் நீதிமன்றத்தின் தீர்ப்புக்களுக்கு தற்காலிகமாகக்கூட மேல் நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்படமாட்டாது. ஆகவே, இந்த மீளாய்வு மனு மீதான மேல் நீதிமன்ற விசாரணைகள் முடிவடையும் வரையில் நீதவான் நீதிமன்றத்தின் தடையுத்தரவு நீடிக்கும் என்றார்.

இந்த வழக்கு தொடர்பாக அரச சட்டத்தரணி தனது ஆட்சேபணை மனு தாக்கல் செய்வதற்கு பங்குனி மாதம் வரையில் அவகாசம் வழங்கி நீதிபதி இளஞ்செழியன் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்
யாழ்.நீதவான் நீதிமன்றங்கள் பிறப்பிக்கின்ற கட்டளைகளில் மேல் நீதிமன்றம் தலையிடாது Reviewed by NEWMANNAR on February 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.