முரண்பாடுகள் ஒருபோதும் வெற்றியை கொண்டுவராது!
நல்லதொரு எதிர்காலத்துக்கான எதிர்பார்ப்புகளுடன் நாடு காத்துக் கொண்டிருக்கும் இக்காலப் பகுதியில் நாம் அடுத்து என்ன நடக்கப் போகின்றது? என்ற கேள்வியுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
என்னதான் பேசிக்கொண்டிருந்த போதிலும் நாட்டில் அமைதி, சமாதானம், நல்லிணக்கம் என்பனவற்றையே ஒவ்வொரு குடிமகனும் எதிர்பார்க்கின்றான். நீண்டதொரு இருளுக்குப் பின்னர் இப்போதுதான் ஒளிவீசத் தொடங்கியுள்ளது. இன்னும் முழுமையாக விடியவில்லை சூரியோதயம் மட்டுமே வெளிப்பட்டுள்ளது.
மீண்டும் காரிருள் மூழாமல் இருப்பதை உறுதி செய்து கொள்வது சகல தரப்புகளினதும் தலையாய கடப்பாடாகும். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இருள் சூழ்ந்திருந்த நாட்டில் 2015 ஜனவரி 8ல் தான் சூரியன் உதிக்கத் தொடங்கினான்.
விடிந்தவுடனேயே எல்லாக் காரியங்களையும் ஒன்றாகச் சாதித்துவிட முடியும் என்று எவராலும் எதிர்பார்க்க முடியாது. முதலில் செய்ய வேண்டிய பணி என்னவென்பதை திட்டமிட்டே ஆரம்பிக்க வேண்டியுள்ளது. முதலில் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். அதனூடாகவே அடுத்த கட்டத்துக்கான நகர்வை முன்னெடுக்க முடியும்.
அரசியல் ஸ்திரத்தை ஏற்ப்படுத்த முதலில் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம் மிக முக்கியமானதாகும். கடந்த காலத்தில் இன முரண்பாடுகளால்தான் நாடு மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது. நாட்டில் இனவாதம் தலை விரித்தாடிய போது அதிகாரத்திலிருந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் அதனை கண்டுகொள்ளவே இல்லை.
அது விஸ்வபரூம் எடுத்ததன் விளைவாக சிறுபான்மைச் சக்திகள் அனைத்தும் ஒரே நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதன் தாக்கத்தை இரண்டு தேர்தல்களிலும் கண்டு கொள்ளக்கூடியதாக அமைந்தது. அன்று இனவாதச் செயற்பாடுகளை முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால் இழப்புகள், அழிவுகள் ஏற்பட்டிருக்கவே முடியாது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு காலம் கடந்து ஞானம் பிறந்திருப்பதை கடந்த வாரத்தில் காணக்கூடியதாக இருந்தது. முஸ்லிம் சமுகத்தினர் சிலருடனான சந்திப்பொன்றில் அவர் தெரிவித்திருக்கும் கூற்றை கேளிக்கூத்தானதாகவே நோக்க வேண்டியுள்ளது.
தனது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இனவெறிச் செயற்பாடுகளுக்கு தான் பொறுப்பல்லவெனவும், தனக்குத் தெரியாமலேயே அவை இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இப்படி அவர் சொன்னவுடனேயே அங்கிருந்த முஸ்லிம் பிரமுகர்கள் முதலில் தங்கள் தலையை தடவிப் பார்த்திருக்க வேண்டும். தவறியெனும் தமது தலைகளில் கொம்பு முளைத்திருக்குமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
நாட்டில் என்ன நடந்தாலும் அதற்குப் பொறுப்புக்கூறுபவராக நாட்டின் தலைவர்தான் இருக்க வேண்டும். தட்டிக்கழித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூற முடியுமா? முஸ்லிம் சமுகத்தை மீண்டுமொரு தடவை அவர் ஏமாற்ற முயற்சிப்பதையே இது காட்டுகின்றது. அந்தளவுக்கு முஸ்லிம்கள் இனிமேலும் ஏமாறமாட்டார்கள்.
இன்றைய தேசிய அரசு நாட்டில் நல்லிணக்கத்தை உறுதிமிக்கதாக கட்டியெழுப்புவதிலேயே அக்கறை செலுத்தி வருகின்றது. இந்த நிலைமையில்தான் எதிரணிச் சக்தி இனங்களை தவறாக வழிநடத்தி அரசை பலவீனப்படுத்த முனைகின்றது.
நல்லாட்சியில் நல்லிணக்கம் மலர்வதனூடாக நாட்டின் எதிர்காலம் நம்பிக்கை மிக்கதாக மாற முடியும். அதற்குப் பாதை அமைக்கும் வகையிலேயே அரசியலமைப்பு மறுசீரமைப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த அரசியலமைப்பு மாற்றச் செயற்பாடுகள் விடயத்தில் இதே இனவாதச் சக்தி குட்டையை குழப்பும் செயற்பாடுகளிலும் இறங்கியுள்ளன. இவ்வாறான ஜனநாயக விரோத, கீழத்தரமான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் நாட்டு மக்கள் விரட்டியடிக்க வேண்டிய தேவைப்பாடு இன்று ஏற்பட்டிருப்பதை நன்கு உணர முடிகிறது.
இது இவ்வாறிருக்கும் நிலையில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வடக்கு சென்று பதவியேற்ற கையோடு இன நல்லிணகக்கத்தின் அவசியம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஓரிடத்தில் வடக்கு – தெற்கு இனங்களுக்கிடையே கலப்புத் திருமணம் குறித்தும் குறிப்பிட்டிருந்தார். எந்த வழியிலேனும் இனங்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதன் அர்த்தத்தில்தான் தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சிலர் இதனைக் கூட தவறான கண்கொண்டு பார்க்க முயற்சிப்பதுதான் கவலை தரக்கூடியதாக உள்ளது. கலப்புத் திருமணம் நடந்தால் தீர்வு வந்துவிடுமா? என ஒரு தமிழ் அரசியல் பிரமுகர் கேள்வி எழுப்பி இருப்பது ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை.
எல்லா விடயங்களிலும் கறுப்புக்கண்ணாடி அணிந்து பார்க்க முயற்சிக்க வேண்டாம். தூய்மையாக வெளிப்படையாக வெளிச்சத்தைத் தேட வேண்டும். அதற்கு வெள்ளைக்கண்ணாடி அணிய வேண்டும்.
எப்போதும் நல்லதை சிந்தித்தால் நிச்சயம் நல்லதே நடக்கும். சத்தியம் நிலைத்து நிற்கக்கூடியது. அசத்தியம் அழிவது நிச்சயம் என்பதை மறக்காமலிருந்தால் எல்லாம் நலமாகவே முடியும்.
முரண்பாடுகள் ஒருபோதும் வெற்றியை கொண்டுவராது!
Reviewed by Author
on
February 27, 2016
Rating:

No comments:
Post a Comment