அண்மைய செய்திகள்

recent
-

தனித் தமிழீழம் தான் தீர்வு-முல்லைத்தீவு மக்கள்

இனப்பிரச்சினைக்கு தனித் தமிழீழம் தான் தீர்வு எனவும், போரில் உயிர்நீத்த எங்களுடைய உறவுகளையும் மாவீரர்களையும், நினைவு கூருவதற்கும் எந்தவித தடைகளும் இன்றி அங்கீகரிக்க வேண்டும். அரசமைப்பு உருவாக்கம் தொடர்பாகக் கருத்தறியும் குழுவிடம் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளனர் முல்லைத்தீவு மாவட்ட மக்கள்

புதிய அரசமைப்பு தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவினுடைய 2ஆவது அமர்வு நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த கருத்தறியும் அமர்வில் கலந்து கொண்டு புதிய அரசமைப்பு தொடர்பாக, தங்களது கருத்துக்களை முன்வைக்கும்போதே முல்லைத்தீவு மக்கள் இவ்வாறு தெரிவித்திருந்தனர்.

குறித்த அமர்வில் கலந்து கொண்ட மக்கள் மேலும் தெரிவிக்கையில்,
1983ஆம் ஆண்டு இராணுவ முகாம்கள் எங்கெங்கே இருந்தனவோ மீண்டும் அங்கேயே இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் வகையில் புதிய அரசமைப்பில் இடம்பெறவேன்டும். தற்போது உள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலான தேர்தல் முறை நீக்கி புதிய அரசமைப்பில் தொகுதி ரீதியான தேர்தல் முறை கொண்டு வரப்படவேண்டும்.

இலங்கையில் வாழ்ந்த ஒரு இனத்தை அழித்ததை பெருமைபடுத்தி வெற்றி விழா எனக் கொண்டாடுவதை நிறுத்தும் வகையில் புதிய அரசமைப்பில் உள்வாங்கப்படவேண்டும். போரில் உயிர் நீத்த எங்களுடைய உறவுகளான போராளிகளையும், மக்களையும் நினைவு கூருவதற்கும் எந்தவித தடைகளும் இன்றி அதற்கு அனுமதியளிக்க வேண்டும்.

அத்துடன்,நடந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு தனித் தமிழீழம் தான் ஓரே தீர்வு எனவும் தெரிவித்தனர். மேலும், குறித்த புதிய அரசமைப்பு தொடர்பான மக்கள் கருத்தறியும் அமர்வுக்கு வருகை தந்தவர்களில் சிலர், வடக்கு, கிழக்கு இணைந்த சமஷ்டி முறையிலான அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்படவேண்டும். அவை அதி உச்ச அதிகாரங்களைக் கொண்டிருக்க வேண்டும் எனக் கருத்துக்களை முன்வைத்தனர்.

அத்துடன் தகவல் அறியும் சட்டத்தினையும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஊடகங்கள் சுதந்திரமாக செயற்படக்கூடிய வகையில் இருக்க வேண்டும். அனைவருக்கும் பொதுவான இனங்களைப் பிரித்துக்காட்டாத தேசியக்கொடி வேண்டும்.

இது அமைதியையும், சமாதானத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் வன்முறையான சித்தரிப்புக்கள் அற்றதாவும் இருக்க வேண்டும் எனவும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, நேற்றையதினம் இடம்பெற்ற குறித்த மக்கள் கருத்தறியும் அமர்வில் மாவட்டத்தை சேர்ந்த 50 பேர் வரையானோர் குழுவாகவும், தனியாகவும் சென்று தங்களுடைய கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.








தனித் தமிழீழம் தான் தீர்வு-முல்லைத்தீவு மக்கள் Reviewed by NEWMANNAR on February 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.