அண்மைய செய்திகள்

recent
-

மனித உரிமைகள் நிலவரம்: இலங்கை மீது அம்னெஸ்டி விமர்சனம்

'காணாமல்போனவர்களுக்கு என்ன ஆனது என்பதை கண்டறிவதிலும் அவர்களை காணாமல் போகச் செய்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதிலும் முன்னேற்றம் காணப்படவில்லை'

உலக நாடுகளின் மனித உரிமை நிலவரங்கள் பற்றிய இந்த ஆண்டுக்கான வருடார்ந்த அறிக்கையை வெளியிட்டுள்ள அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு, இலங்கை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

'இலங்கையில் ஜனவரியில் பொறுப்பேற்ற புதிய அரசாங்கம் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை கொண்டுவந்தது. மனித உரிமைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னேற்றுவதாக உறுதியளித்திருந்தது.
ஆனால், எதேச்சாதிகார கைதுகள் மற்றும் தடுத்துவைத்தல்கள், சித்திரவதைகள், திட்டமிட்டு காணாமல்போகச் செய்யும் நடவடிக்கைகள், தடுப்புக்காவல் மரணங்கள் மற்றும் குறற்வாளிகள் நீதியின் பிடியிலிருந்து தப்பியிருக்கும் நிலை தொடருதல் என்று மனித உரிமைகளுக்கான பல்வேறு சவால்கள் இன்னும் தீர்க்கப்படாமலேயே தொடர்கின்றன' என்று அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு அதன் வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டம்
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட தமிழர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் சித்திரவதை உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கு காரணமாகின்ற அந்த சட்டத்தை நீக்குவதாக கடந்த செப்டெம்பரில் அரசாங்கம் உறுதியளித்திருந்ததாகவும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

217 கைதிகள் தொடர்ந்தும் அந்த சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும், புனர்வாழ்வு என்ற இன்னொரு வகையான எதேச்சாதிகார தடுப்புக்காவலிலிருந்து வேறு 45 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தடுப்புக்காவலில் இருப்போர் மீது சித்திரவதை, பாலியல் வன்முறைகள் பிரயோகிக்கப்படுவது தொடர்ந்து நடப்பதாகவும் கூறியுள்ள அம்னெஸ்டி, இவ்வாறான மனித உரிமை மீறல்கள் நடக்கக்கூடாது என்று பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் ஐநாவின் மனித உரிமைகள் பேரவைக்கு உறுதியளித்து சிறிது காலத்தில், 17 வயது பையனும் இன்னொருவரும் தடுப்புக் காவலில் வைத்து பொய்யான குற்ற ஒப்பதலை பெறுவதற்காக தாக்கப்பட்டதாகவும், உடைகளை களைந்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாகவும் அவர்களின் வழக்கறிஞரை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.

பொலிஸ் காவல் மரணங்கள்


'சூத்திரதாரிகள் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை'
பொலிஸ் தடுப்புக் காவலில் சந்தேகத்துக்கு இடமான மரணங்கள் தொடர்வதையும் கடந்த கால குற்றச்சம்பவங்களின் சூத்திரதாரிகள் நீதியின் பிடியில் சிக்காமல் இருப்பதையும் அம்னெஸ்டி இண்டர்நேஷனலின் இந்த ஆண்டுக்கான அறிக்கை கூறுகின்றது.

காணாமல்போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு 18.586 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் ஆனால், காணாமல்போனவர்களுக்கு என்ன ஆனது என்பதை கண்டறிவதிலும் அவர்களை காணாமல் போகச் செய்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதிலும் முன்னேற்றம் காணப்படவில்லை என்றும் சர்வதேச மனித உரிமைகள் பற்றி ஆராய்கின்ற அம்னெஸ்டி இண்டர்நேஷனலின் அறிக்கை தெரிவிக்கின்றது.

மே 19ம் திகதியை போரில் பலியானவர்களின் நினைவு தினமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தாலும், வடக்கில் பல இடங்களில் தமிழர்கள் பொதுவான நினைவு நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தாலும் வடக்கிலும் கிழக்கிலும் கடுமையான அளவில் பொலிஸ் குவிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பாக, முல்லைத்தீவு இப்படியான நினைவு நிகழ்வுகள் பாதுகாப்பு படையினரால் தடுக்கப்பட்டதாக கூறப்படுவதாகவும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கூறியுள்ளது.
குற்றவாளிகள் தண்டிக்கப்படாத போக்கு
கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மதச்சிறுபான்மை சமூகங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவில்லை என்பதை அம்னெஸ்டி இண்டர்நேஷனல் சுட்டிக்காட்டியுள்ளது.

2010ம் ஆண்டில் கிளிநொச்சியில் நடந்த கூட்டுப்பாலியல் வல்லுறவு தொடர்பில் நான்கு படைச் சிப்பாய்கள் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டது, குற்றவாளிகள் நீதி நடைமுறையிலிருந்து தப்பியிருக்கும் போக்குக்கு எதிரான சிறிய வெற்றியாக பார்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் நிலவரம்: இலங்கை மீது அம்னெஸ்டி விமர்சனம் Reviewed by NEWMANNAR on February 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.