புனித வாரம் வெள்ளி....
புனித வாரம் வெள்ளி
''இயேசு, 'எல்லாம் நிறைவேறிற்று'
என்று கூறித்
தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்'' (யோவான் 19:30)
-- இயேசு சிலுவையில் அறையப்பட்டு ஒரு குற்றவாளியைப் போல இறந்தார். சிலர் அவரை அரசியல் குற்றவாளியாக, சமயக் கொள்கைகளை மறுத்த துரோகியாகப் பார்த்தார்கள். நாட்டிற்கும் சமயத்திற்கும் எதிராகச் செயல்படுவோர் சரியான தண்டனை பெறவேண்டும் எனக் கருதியோர் இயேசுவின் சாவு பற்றி அதிகம் கவலைப்பட்டிருக்கமாட்டார்கள். ஆனால் இயேசுவின் வரலாற்றில் மனித ஆட்கள் மட்டுமே செயல்படவில்லை. இயேசுவின் வரலாறு கடவுள் இவ்வுலகில் மக்களோடு செய்துகொண்ட அன்பு உடன்படிக்கையின் தொடர் வரலாறு. எனவே, கடவுளிடமிருந்து வந்த இயேசு தம் சொந்த விருப்பப்படி செயல்படாமல் தம்மை அனுப்பிய தந்தையின் விருப்பப்படியே செயல்பட்டார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிய இயேசு தம் சொல், செயல், பணி வழியாக மக்களுக்கு நன்மை செய்துகொண்டே போனார். அவருடைய அன்பையும் இரக்கத்தையும் அனுபவித்து உணர்ந்த மனிதர் பலர் இருந்தனர்.
இயேசு யார் என்பதை அவர்கள் படிப்படியாக அறிந்துகொண்டார்கள். இயேசு ஆற்றிய பணியின் இறுதிக்கட்டம் அவருடைய சிலுவைச் சாவு ஆகும். அதே நேரத்தில் இயேசுவின் பணி முழுமைபெற்றதும் சிலுவையில்தான். எனவே, ''எல்லாம் நிறைவேறிற்று'' என இயேசு சிலுவையில் தொங்கியபோது கூறிய சொற்களை நாம் இரு விதங்களில் புரிந்துகொள்ளலாம். கடவுள் வகுத்த திட்டத்தை இயேசு நிறைவுக்குக் கொணர்ந்தார்
என்பது ஒரு பொருள். இயேசு ஆற்றிய பணி தன் முழுமையை எய்தியது சிலுவையில் என்பது மறு பொருள். ஆக, இயேசு நிறைவேற்றிய பணி தன்னிலே முழுமைபெற்றது என்றாலும் அதன் பயன்கள் நம்மை வந்தடைய வேண்டும் என்றால் நாமும் இயேசுவின் பணியோடு நம்மை இணைத்துக்கொள்ள வேண்டும்.
-- சிலுவைச் சாவு இயேசு பெற்ற புதுவாழ்வுக்கு வழியாக அமைந்தது. எனவே, சிலுவையில் உயிர்துறந்த இயேசு ஏதோ ஒன்றை இழந்தவர்போல அல்லாமல் நமக்குத் தம்மையே மனமுவந்து கையளித்தார் என்பதே பொருத்தம். தம்மை நமக்குக் கையளித்த இயேசு தம் ''ஆவியை ஒப்படைத்தார்''. ஆவி என்பது உயிர்மூச்சைக் குறிக்கும். நாம் மூச்சுவிடும்போது உயிரோடு இருக்கிறோம் என்பது பொருள். மூச்சு நின்றுபோகும் வேளையில் உயிரும் நம்மைவிட்டுப் பிரிந்துவிடுகிறது. எனவே, இயேசு நமக்கு வழங்குகின்ற ''ஆவி'' அவர் நமக்குத் தருகின்ற உயிரைக் குறிக்கிறது. இயேசுவின் ஆவியைப் பெற்ற நாம் உயிர் வாழ்கிறோம். நமக்குப் புது வாழ்வு வழங்கப்பட்டது. எனவே இயேசுவின் சாவு குறித்து நாம் துயரப்படுவதற்குப் பதிலாக மகிழ்ச்சியடைய வேண்டும் எனலாம். நாம் பெற்ற வாழ்வைப் பிறரோடு பகிர்வது நம் பொறுப்பு.
இறைவா, உம்மிடமிருந்து நாங்கள் பெற்ற புதுவாழ்வுக்கு நன்றி!
புனித வாரம் வெள்ளி....
Reviewed by Author
on
March 26, 2016
Rating:

No comments:
Post a Comment