பிள்ளைகளின் பாதுகாப்புக்கு பெற்றோரே பொறுப்பானவர்கள்!
கொட்டதெனியாவ—படல்கம பகுதியைச் சேர்ந்த சிறுமி சேயா செதவ்மியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திப் படுகொலை செய்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளிக்கு மரண தண்டனையும், 60 வருட கடூழிய சிறைத் தண்டனையும் நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் எதிரி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட நிலையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த தீர்ப்பை அறிவித்த நீர்கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன சிறுமி சேயாவின் பெற்றோரை அழைத்து மிகப்பெரிய அறிவுரையொன்றையும் வழங்கியிருக்கிறார்.
தீர்ப்பை வழங்க முன்பதாக பெற்றோரை தன் எதிரே அழைத்த நீதிபதி அவர்களிடம் சிறுகுழந்தைகளை பெற்றோர் எந்தளவு தூரம் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுரை விடுத்திருக்கிறார்.
அதாவது உங்கள் இருவரின் நடவடிக்கைகளையும் பெற்றோர் ஒருவருக்குரிய நடவடிக்கைகளாக நான் காணவில்லை. உங்களின் பராமுகம் குற்றவாளிக்கு அத்தகைய குற்றத்தைச் செய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
எனவே பிள்ளைகளின் பாதுகாப்புக்கு பெற்றோரே பொறுப்பானவர்கள். நடந்த இந்த கொடூரத்துக்கு நீங்களும் பதில் சொல்ல வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
குற்றவாளி இந்த குற்றத்தில் ஈடுபட உங்கள் கவனயீனமும் அவருக்கு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. மன்றில் அளிக்கப்பட்ட சாட்சியங்களில் அதனை நாம் தெளிவாக விளங்கிக் கொண்டோம். சுதந்திரம், சூழல் ஆகியவற்றை அறிந்து பெற்றோர் தமது பிள்ளைகள் விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.
பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோருக்கு பாரிய பொறுப்பு உள்ளது. வீட்டினுள்ளும் வீட்டுக்கு வெளியேயும் பாதுகாப்பற்ற நிலைமைகள் தற்காலத்தில் உருவாகியுள்ளன. இதனை நாம் அன்றாடம் காண்கிறோம் எனவும் நீர்கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி எடுத்துரைத்திருக்கிறார்.
இந்தச் சம்பவத்தை எடுத்துப் பார்க்கும் போது இந்தவிடயத்தில் பெற்றோர் முழுமையாக கவனயீனமாக இருந்துள்ளனர். அதனால் அதனை குற்றவாளி வாய்ப்பாக்கிக் கொண்டுள்ளார்.
தாய் என்ற வார்த்தைக்கு அர்த்தம் ஆழமானது. அதனை விபரிக்க முடியாது. ஆனாலும் இன்று பலர் இரவு 10.00 மணி வரையிலும் தொலைக் காட்சியில் சின்னத்திரைகளில் மூழ்கிவிடுகின்றனர். இதன் போது பிள்ளைகள் தொடர்பில் அவர்கள் பராமுகமாக இருக்கின்றனர். இத்தகைய சந்தர்ப்பங்கள் இலக்கை அடைய காத்திருக்கும் வெளியாருக்கு சந்தர்ப்பமாகி விடுகின்றது என்றும் நீதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.
அதுமட்டுமன்றி இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது சாட்சியங்கள் ஊடாகத் தெளிவாகியிருக்கின்றது. இதனை பாடமாக கொண்டு பெற்றோர் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புடன் செயற்பட வேண்டும்.
பெற்றோர்கள் பிள்ளைகள் விடயத்தில் இவ்வாறு பராமுகமாக இருந்தால் இத்தகைய சம்பவங்களின் போது ஒரு வகையில் அவர்களும் குற்றவாளிகளாகி விடுகின்றனர்.
எனவே பிள்ளைகளின் பாதுகாப்புக்கு பெற்றோரே பொறுப்பு என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்று நீர்கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி, சிறுமி சேயாவின் பெற்றோருக்கு அளித்த அறிவுரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.
உண்மையில் தற்போதைய நிலைமையில் நாட்டுக்கு மிகவும் அவசியமான மற்றும் பெற்றோர் தமது குழந்தைகள் விடயத்தில் உணர்ந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான அறிவுரைகளை நீதிபதி எடுத்துரைத்திருக்கின்றமை ஆறுதல் அளிக்கின்றது.
விசேடமாக சிறுமி சேயா படுகொலைச் சம்பவமானது முழுநாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்று கூறலாம். பிஞ்சுக் குழந்தையொன்று நாசமாக்கப்பட்டு காமுகன் ஒருவரால் கொலை செய்யப்பட்டிருந்தமை நாட்டு மக்கள் மத்தியில் பாரிய பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விடயத்தில் நீதி நியாயம் வழங்கக் கோரி மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தியிருந்தனர். அதுமட்டுமன்றி இந்த விடயத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் செயற்பாடுகள் தொடர்பிலும் கடந்த காலங்களில் விமர்சனங்கள் பாரிய அளவில் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையிலேயே தற்போது இந்த சிறுமி சேயா படுகொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமைகளினால் சேயா மீண்டுவரப் போவதில்லை.
ஆனால் இதன் பின்னர் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு எடுகோளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நாட்டில் அண்மைக்காலமாக சிறுவர், சிறுமிகள் மீதான துஷ்பிரயோகங்கள் அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.
யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியில் மாணவி வித்தியா துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் வவுனியா, உக்குளாங்குளத்தில் மாணவி ஹரிஸ்ணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் என்பன நாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்தன.
அதுமட்டுமன்றி மாவத்தகமையில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும் அண்மையில் பதிவாகியது. இவ்வாறு மனித பண்புகளுக்கு அப்பாற்பட்ட, மனிதாபிமானத்தையே கேள்விக்குட்படுத்தும் அசம்பாவிதங்கள் நாட்டில் ஆங்காங்கே இடம்பெற்றிருக்கின்றமை பாரிய வேதனைக்குரிய விடயமாகும்.
ஆறறிவு படைத்த மனிதன் இவ்வாறு மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்டும் மனிதப் பண்புகளை மீறியும் தமது காம இச்சைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு இளம் பிஞ்சுகளை இரையாக்கும் நிலைமையானது எமது சமூகம் எதனை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது என்ற கேள்வியை எழுப்புவதாக அமைந்திருக்கின்றது.
விசேடமாக யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது முழு உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தக்கோரியும் நாடுமுழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில் இவ்வாறான மிலேச்சத்தனமான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். பிள்ளைகளின் பாதுகாப்பு விடயத்தில் நீர்கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டுள்ளதைப் போன்று பெற்றோரின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துமிக்கதாக காணப்படுகின்றது.
தமது குழந்தைகளின் செயற்பாடுகள், அவர்களின் நடவடிக்கைகள் என்பன தொடர்பில் பெற்றோர் மிகவும் அக்கறையுடனும் கவனமாகவும் இருக்கவேண்டியது அவசியமாகும். பிள்ளைகள் விடயத்தில் எக்காரணம் கொண்டும் பெற்றோர் அலட்சியப்போக்கில் இருந்துவிடக்கூடாது.
குறிப்பாக சிறு பிள்ளைகள் கூறுகின்ற விடயங்களை பெற்றோர் மிகவும் அவதானத்துடன் செவிமடுக்கவேண்டியது அவசியமாகும். தற்போதைய நிலைமையில் எமது சமூகத்தைப் பொறுத்தவரையில் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பில் பெற்றோரே முதன்மை பொறுப்பை ஏற்கவேண்டியுள்ளது.
சட்ட பாதுகாப்பு, மற்றும் சமூக பாதுகாப்புக்களைத் தாண்டி இக்காலத்தில் குற்றச்செயல்கள் இடம்பெற்றுவருவதால் பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் பெற்றோரே அதிக கவனம் செலுத்தவேண்டியுள்ளது. இதனை அனைவரும் நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும்.
சிறுமி சேயாவின் சம்பவத்தில் கூட பெற்றோர் பிள்ளைகள் விடயத்தில் பொறுப்புடன் அன்றைய தினம் நடந்துகொண்டிருந்தால் இந்த அசம்பாவிதத்தை தடுத்திருக்கலாம். எனவே இவ்வாறான சம்பவங்களை முன்னுதாரணமாக கொண்டு இதன் பின்னராவது பெற்றோர் தமது பிள்ளைகள் விடயத்தில் கூடிய அக்கறையுடன் செயற்படுவது அவசியமாகும்.
தற்போது மிகவும் வேலைப்பளுமிக்க உலகத்தில் குடும்பமொன்றில் தாயும் தந்தையும் தொழில் செய்கின்ற போது பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் கேள்வி எழுகின்றது.
கணவன், மனைவி இருவரும் தொழில் நிமித்தம் வெளியேறிய பின்னர் குழந்தைகளைப் பார்த்துக்கொள்கின்றவர்களே பிள்ளைகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் மிகவும் வேதனைக்குரிய சம்பவங்களைக்கூட கடந்த காலங்களில் கேள்வியுற்றிருக்கின்றோம்.
அதுமட்டுமன்றி கணவனும், மனைவியும் தொழில் முடிந்து வீடு வரும்வரை பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியான நிலைமையிலேயே காணப்படுகின்றது.
எனவே அரசாங்கமும் இந்த குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பில் கூடிய அக்கறை செலுத்தி விசேட பாதுகாப்பு நடைமுறைகளை அமுலுக்கு கொண்டுவர வேண்டியது அவசியமாகும்.
எவ்வாறெனினும் தமது பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர் அதிக கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதனை மிகவும் வலுவான முறையில் வலியுறுத்த விரும்புகின்றோம்.
பிள்ளைகளின் பாதுகாப்புக்கு பெற்றோரே பொறுப்பானவர்கள்!
Reviewed by Author
on
March 17, 2016
Rating:
No comments:
Post a Comment