அண்மைய செய்திகள்

recent
-

வீரமாமுனிவர் நினைவு விழாவில் தமிழ் நேசன் அடிகளாரின் சிறப்புரை....



“வீரமாமுனிவரும் எழுத்துச் சீர்திருத்தமும்”
  யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி வீரமாமுனிவர் நினைவுவிழா இடம்பெற்றது. யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபரும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவருமான அருட்திரு. ஜெறோ செல்வநாயகம் அடிகளார் இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். மன்னார் மறைமாவட்டத்தின் கலையருவி அமைப்பின் இயக்குனரும்ää மன்னார் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவருமாகிய அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் “வீரமாமுனிவரும் எழுத்துச் சீர்திருத்தமும்” என்ற தலைப்பில் பல்லூடகக் காணொளியை (Pழறநசீழiவெ Pசநளநவெயவழைn) பயன்படுத்தி சிறப்புரையாற்றினார். இச்சிறப்புரையில் வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் தமிழில் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தத்தையும் தமிழ் நேசன் அடிகளார் எடுத்து விளக்கினார்.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க குருவான கொண்ஸ்ரான்ரின் ஜோசவ் பெஸ்கி அடிகளாரே 'வீரமாமுனிவர்' என்று தமிழ் கூறும் நல்லுலகில் அறியப்படுகின்றார். 1710ஆம் ஆண்டு தமிழகத்துக்கு சமயப் பணி ஆற்ற வந்த இவர், 32 வருடங்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பணிசெய்தார். கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பும் நோக்கத்திற்காக முதலில் தமிழைக் கற்றுக்கொண்ட வீரமாமுனிவர் தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். வீரமாமுனிவரைப்போல எந்தத் தமிழ்ப் புலவரும் பல்வேறு இலக்கிய வகைகளில் நூல்களைப் படைக்கவில்லை.
இவ்வாறு மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு அருட்பணி மையமான கலையருவியின் இயக்குனரும், 'மன்னா' என்ற கத்தோலிக்க மாதாந்தப் பத்திரிகையின் ஆசிரியருமான அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வீரமாமுனிவர் நினைவு விழாவில்; 'வீரமாமுனிவரும் எழுத்துச் சீர்திருத்தமும்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றும்போதே அடிகளார் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது கூறியதாவது,
வீரமாமுனிவர் தமது பெயரினை 'தைரியநாதன்' என்று முதலில் மாற்றிக்கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தமது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் 'வீரமாமுனிவர்' என மாற்றிக்கொண்டார்.
வீரமாமுனிவர் தமிழகம் வந்தபின், சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்று, இலக்கியப் பேருரைகள் நடத்துமளவுக்கு தமிழில் புலமை பெற்றார். வீரமாமுனிவரைப்போல வேறெந்தப் புலவரும் பேரிலக்கியம், சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம், உரைநடை எனப் பல்வேறு இலக்கிய வகைகளில் நூல்களைப் படைக்கவில்லை. இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார்.
'தேம்பாவணி' என்ற காவிய நூல் வீரமாமுனிவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது. இயேசுக்கிறிஸ்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தேம்பாவணி காவியமாக எழுதியுள்ளார். தமிழில் அமைந்த காவியங்களிலேயே, தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு. 'தேம்பாவணி' என்ற இப்பெருங்காவியத்தை தமிழ்ப் பண்பாட்டிற்கு ஏற்ப இயற்றியுள்ளமை முக்கியமான விடயமாகும்.
தமிழ் நேசன் அடிகளாரின்  சிறப்புரையைத் தொடர்ந்து...

 “தமிழ் மொழியில் ஆற்றல் பெறுவதற்குப் பெரிதும் துணைசெய்வது எழுத்துப் பயிற்சியா? கேள்விப் பயிற்சியா? வாசிப்புப் பயிற்சியா?” என்ற பொருளில் மாணவர்களின் சொல்லாடுகளம் நிகழ்வு இடம்பெற்றது. மாணவர்கள் மூன்று அணியினராகப் பிரிந்து இந்த நிகழ்வில் பங்கேற்றனர். கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் பிரதி அதிபரும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளருமான திரு. ச. லலீசன் அவர்கள் இந்தச் சொல்லாடுகளம் நிகழ்வுக்கு நடுவராகப் பணியாற்றினார். புனித பத்திரிசியார் கல்லூரி ஆசிரியர் திரு. இ. வசீகரன் நன்றியுரை நிகழ்த்தினார்.
  ஏறக்குறைய முந்நூறு மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்கள் மட்டுமன்றி அயல் பாடசாலை மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். ஓய்வுநிலை பேராசிரியை திருமதி. மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் மற்றும் குருக்கள்ää அருட்சகோதரிகள்  ஆசிரியர்கள் தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்குகொண்டனர்.










வீரமாமுனிவர் நினைவு விழாவில் தமிழ் நேசன் அடிகளாரின் சிறப்புரை.... Reviewed by Author on March 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.