எமது இளைஞர் யுவதிகள் அரச வேலைகளை மட்டும் எதிர் பார்த்திருக்காது சுய தொழில் சார்ந்த துறைகளை தெரிவு செய்ய வேண்டும்-சி.வி.விக்னேஸ்வரன்.-படம்
விவசாய நடவடிக்கைகளின் போது முறையற்ற விதத்தி பயன்படுத்தப்படும் அதிகளவு 'யூரியா' தேவைக்கு அதிகமாகி நிலத்தடி நீரில் கலந்து கொண்டு நீரின் 'நைத்திரேற்று' அளவுகளை அதிகரிக்கச் செய்து விடுகின்றது. இந்த நீரை நாம் தொடர்ந்து பருகி வருகின்ற போது எமது உடலில் பாரிய தாக்கங்களை அந்தநீர் ஏற்படுத்துகின்றது. எனவே செயற்கை உரப்பாவனைக்குப் பதிலாக இயற்கைக் கூட்டுப்பசளைகளை நாம் கூடுதலாகப் பயன்படுத்த வேண்டும்.என வடமாகாண முசலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடமாகாண விவசாயக் கண்காட்சி இன்று திங்கட்கிழமை காலை மன்னார் உயிலங்குளம் விவசாய பயிற்சி நிலையத்தில் இடம் பெற்றது.
-இதன் போது குறித்த கண்காட்சியை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்த பின் உரையாற்றுகையிலேயே வடமாகாண முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் உரையாற்றுகையில்,,,
-வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் ஆரம்பமான குறித்த விவசாய கண்காட்சி இன்று திங்கட்கிழமை முதல் புதன் கிழமை வரையிலான மூன்று தினங்கள் இடம் பெறவுள்ளது.
உயிலங்குளம் பகுதியில் அமைந்திருக்கும் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இன்று திங்கட்கிழமை தொடக்கம் எதிர் வரும் புதன் கிழமை வரை மூன்று நாட்கள் நடை பெறவிருக்கும் இவ் விவசாயக் கண்காட்சியை வைபவ ரீதியாகத் திறந்து வைத்து உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.
பொ.ஐங்கரநேசன் அவர்கள் வடமாகாண விவசாய அமைச்சராகக் கடமைகளை பொறுப்பேற்ற தினத்தில் இருந்து ஒவ்வொரு வருடமும் அவரின் அமைச்சு மூலமாக வட பகுதியின் வௌ;வேறு இடங்களில் விவசாயக் கண்காட்சிகளை நடாத்தி விவசாயிகளை ஊக்குவித்து வருகின்றார்.
அந்த வகையில் 'சந்தையை நோக்கிய சூழல்; நேயமான விவசாயம்' என்ற கருப்பொருளுடன் கூடிய இந்த விவசாயக் கண்காட்சியை உயிலங்குளம் பகுதியில் அமைந்துள்ள மன்னார் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் அமைத்திருப்பதன் மூலம் இப்பகுதி மக்கள் பயன்பெறுவார்கள் என எண்ணுகின்றேன்.
வுட பகுதியில் அமைந்துள்ள இரண்டு பெரிய குளங்களில் இராட்சத குளம் என அழைக்கப்படும் கட்டுக்கரைக் குளம் இப்பகுதியில் அமைந்திருப்பதால் இசைமாலைத்தாழ்வு தொடங்கி பரப்புக்கடந்தான் வரையான மிக நீண்டு பரந்துள்ள நிலப்பரப்புக்களில் பெரிய நாவலடி, நாகதாழ்வு,மாளிகைத்திடல்,உயிலங்குளம்,முருங்கன்,நானாட்டான்,அரிப்பு ஆகிய கிராமங்கள் வரையுள்ள பிரதேசங்களில் நெற்பயிர்ச்செய்கை மிகவும் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே.
சுமார் 15 கிலே மீற்றம் நீளம் வரை நீண்டு பரந்து கிடக்கும் இக்குளக்கட்டுக்களையும்,சீரான நீர் விநியோகத்தினையும் உறுதி செய்வதற்கும் முகாமைத்துவம் செய்வதற்குமெனத் தனியானதொரு பொறியியற் பிரிவு அந்தக் காலத்தில் இருந்தே இப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்றது என்று அறிகின்றேன்.
இக்குளத்தின் நீர் மட்டங்கள் முறையாகப் பராமரிக்கப்படுகின்ற காரணத்தினால் தண்ணீருக்கு பஞ்சமில்லாமல் பயிர்ச் செய்கைகளை மூன்று போகங்கள் கூட மேற்கொள்ளக் கூடியதாகவுள்ளது.
ஆதிக விளைச்சலைக் கொடுக்கக் கூடியதும் கூடிய சந்தைப் பெறுமதியைக் கொண்டுள்ளதுமான 'கீரிச்சம்பா நெல்' இனங்களையே இப்பகு திமக்கள் பயிரிடுகின்றனர்.
வடபகுதி மக்கள் சிவப்பு அரிசிகளையே உண்ணும் பழக்கம் உடையவர்களாகையால் இவர்களின் நெல் விளைச்சலில் பெரும்பகுதி தென் இலங்கை வாழ் மக்களாலேயே கொள்முதல் செய்யப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றது.
இரணைமடுக் குளம்,கட்டுக்கரைக்குளம் ஆகிய இரண்டு இராட்சதக் குளங்களின் கீழும் விவசாயம் செய்யப்படுகின்ற நெல்லின் அளவு வட பகுதிமக்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கின்ற காரணத்தினால் இப்பகுதிமக்கள் உண்ணக்கூடியதும் அதிக விளைச்சலைக் கொடுக்கக்கூடியதுமான சிவப்பு நெல் இனங்களையும் விவசாயிகள் தெரிவு செய்யமுடியும்.
இது சந்தையைப் பொறுத்து எடுக்கப்பட வேண்டிய தீர்மானமாகும்.
இந்த விவசாயக் கண்காட்சியின் தொனிப்பொருளாக அமைந்திருக்கக்கூடிய'சந்தையை நோக்கிய சூழல்; நேயமானவிவசாயம்' என்ற கூற்றின் படி எமது விவசாய நடவடிக்கைகள் சந்தை வாய்ப்புக்களைக் கொண்டதாகவும் அதே நேரம் சூழலை மாசுபடுத்தாத முறைமையிலும் மேற்கொள்ளப்படுதல் அவசியம்.
நாங்கள் இப்பகுதிகளில் நிலத்தடி நீரையே அருந்துவதற்குப் பயன் படுத்துகின்றோம்.
விவசாய நடவடிக்கைகளின் போது முறையற்ற விதத்தி பயன்படுத்தப்படும் அதிகளவு யூரியா தேவைக்கு அதிகமாகி நிலத்தடி நீரில் கலந்து கொண்டு நீரின் நைத்திரேற்று அளவுகளை அதிகரிக்கச் செய்து விடுகின்றது. இந்த நீரை நாம் தொடர்ந்து பருகிவருகின்ற போது எமது உடலில் பாரிய தாக்கங்களை அந்தநீர் ஏற்படுத்துகின்றது. எனவே செயற்கை உரப்பாவனைக்குப் பதிலாக இயற்கைக் கூட்டுப்பசளைகளை நாம் கூடுதலாகப் பயன்படுத்த வேண்டும்.
இப்பகுதியில் உள்ள காடுகளில் தேவையான மர இலைச் சருகுகள் குவிந்து கிடக்கின்றன. மாட்டெரு சேகரிக்கப்படாது ஆங்காங்கே பரவிக் கிடக்கின்றது.
இவற்றை நாம் விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதன் மூலம் இயற்கைப் பசளைகளைப் பயன் படுத்தலாம்.
இரசாயன உரப்பாவனைகளின் அளவையும் குறைத்துக் கொள்ள முடியும்.
நான் கொழும்பில் உள்ள என் வீட்டின் மாடியில் தொட்டிகளிலேயே எனக்குத் தேவையான மரக்கறிவகைகளை உண்டாக்கி வந்தேன். ஒவ்வொரு நாளும் கிடைக்கும் இலை,கொழை,சருகுகளையும் சமயலறை எச்சங்களையும் கொம்போஸ்ட் எனப்படும் இயற்கை உர கலசங்களில் இட்டு மூன்று மாதத்திற்கு ஒரு முறை இயற்கை எருவை நானே தயாரித்து மரங்களுக்கு இட்டு வந்தேன்.
எனவே ஒவ்வொரு வீடும் இயற்கை உரப்பாவனைக்கு மாற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
செயற்கை உரங்கள் எமக்கு வேண்டாம் என்று கூறுமளவிற்கு நாம் வளர வேண்டும். திரும்பவும் இயற்கையோடு இணைந்த ஒரு வாழ்க்கைக்கு நாங்கள் எங்களை இட்டுச் செல்ல வேண்டும்.
இதே போன்று உப உணவு உற்பத்திகளிலும் நாம் கூடிய அளவு கவனம் செலுத்த வேண்டும். உழுந்து,பயறு,கௌபி,சோளம்,நிலக்கடலை,குரக்கன் போன்ற பயிர்வகைகளையும் மரக்கறிவகைகளையும் வெங்காயம்,மிளகாய் ஆகியவற்றின் உற்பத்தியிலும் அதிகளவு கவனம் செலுத்த வேண்டும்.
வுpவசாய மேம்படுத்தல் இரண்டு படிமுறைகளில் விரிவாக்கப்படலாம் என்று எண்ணுகின்றேன்.
-அந்த வகையில் விவசாயத்தில் ஈடுபடுகின்ற பெரிய, நடுத்தர அளவிலான விவசாயிகளுக்கு ஊக்கமளிப்பதன் மூலம் அவர்களின் உற்பத்திகளை அதிகரிக்கச் செய்தலும்,சந்தை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்தல் இரண்டாவது வகை எந்த வித விவசாய முயற்சிகளிலும் ஈடுபடாதவர்களை வீட்டுத்தோட்டங்களை உருவாக்கத் தூண்டுதல். இதன் மூலம் ஒவ்வொரு குடும்பமும் தமது தேவைக்குரிய மரக்கறி வகைகளைத் தாமே உற்பத்தி செய்வதன் மூலமாக உரப்பாவனை,கிருமி நாசினி பயன்பாடுகளற்ற உடன் பறிக்கப்பட்ட மரக்கறிகளை உணவுத் தேவைகளுக்குப் பெற்றுக் கொள்ளமுடியும்.
ஜப்பானில் எல்லாம் தொடர் மாடி வீடுகளில் தமது மரக்கறிகளைத் தாN மஉண்டாக்கும் ஒரு பழக்கம் பலரையும் கவர்ந்துள்ளது.
வட பகுதியில் பெயர் பெற்ற பலபயிர்ச் செய்கையாளர்கள் பயிர்ச் செய்கைகளில் ஈடு பட்டுள்ளனர்.
இவர்களின் உற்பத்திக்கு இலங்கையின் மத்திய மரக்கறி பரிவர்த்தனை நிலையமாக விளங்கக் கூடிய தம்புள்ளை மார்க்கெட்டில் அமோக வரவேற்புக் கிடைக்கின்றது.
ஆனாலும் இவர்களின் உரப்பாவனை மற்றும் கிருமி நாசினி பயன்பாடு அளவுக்கு அதிகமாகவே காணப்படுகின்றது.
வாழைக்குலைப் பயிர்ச்செய்கையில் ஈடு படுபவர்கள் மிகச் சிறந்த இனங்களைப் பயிரிடுகின்ற போதிலும் அவற்றைப் பிஞ்சாக வெட்டி செயற்கை முறைகளில் பழுக்கச் செய்து விற்பனை செய்கின்றார்கள். இந்தப் பழங்கள் எந்தவித ருசியும் அற்றதாகவுள்ளன. ஏன் பிஞ்சாகவே வெட்டி எடுக்கின்றார்கள் என்பதற்குக் கூறப்படும் காரணம் கள்வர்கள் பயமாம்.
உண்மையில் எப்படியாவது பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணந்தான் இவர்களை இயக்குகின்றது.
எந்த விவசாயப் பொருட்களை எடுத்தாலும் அவை மக்களின் உடல் நலத்திற்கு ஊறுவிளைவிப்பனவாக இல்லாமல் ஊட்டச் சத்துகளை வழங்கக்கூடியனவாக இருக்கத்தக்க வகையில் உற்பத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இயற்கை உரத்தில் பயிர் செய்யப்படும் பயிர் வகைகளுக்கு வெளி நாட்டிலும் அதிக கிராக்கி இருக்கின்றது. வெளிநாட்டில் செயற்கை உரத்தைக் குறைத்து இயற்கை உரத்தையும் செயற்கைக் கிருமிநாசினிகளுக்குப் பதில் இயற்கை உயிரியல் கிருமிநாசினைகளையும் பாவிக்கத் தொடங்கியுள்ளார்கள். செயற்கை உரங்களும் செயற்கைக் கிருமி நாசினிகளும் பாவிக்காது பயிரிடப்பட்ட உற்பத்திகளைக் கூடிய பணம் கொடுத்து வாங்கு கின்றார்கள். ஆனால் பயிரிடுவோர் முறைப்படி சான்றிதழ் பெற்ற பின்னர் தான் இவ்வாறான உற்பத்திகளை வரவேற்றுக் கொள்முதல் செய்கின்றார்கள் வெளி நாட்டவர்கள்.
எமது இளைஞர் யுவதிகள் அரச வேலைகளை மட்டும் எதிர்பார்த்திருக்காது தமது கற்றல் நடவடிக்கைகளைத் தொழில் சார்ந்த துறைகளில் மேற்கொள்வதன் மூலம் சிறந்த உற்பத்தியாளர்களாகவும்,பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையை அடையக்கூடிய விதத்திலும் தம்மை மாற்றிக் கொள்ளலாம்.
அவ்வாறான நடவடிக்கைகளுக்கு இது போன்ற நிகழ்வுகள் வழிகாட்டியாக அமையும் என தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.
எமது இளைஞர் யுவதிகள் அரச வேலைகளை மட்டும் எதிர் பார்த்திருக்காது சுய தொழில் சார்ந்த துறைகளை தெரிவு செய்ய வேண்டும்-சி.வி.விக்னேஸ்வரன்.-படம்
Reviewed by NEWMANNAR
on
March 15, 2016
Rating:
No comments:
Post a Comment