உலகக் கிண்ணம்: நிகழப்போகும் சாதனைகள்....
இந்தியாவில் நடக்கும் 6ஆவது டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பல வீரர்கள் சாதனைகள் படைக்கவுள்ளனர்.
மேலும், இதுவரை படைக்கப்பட்ட பல்வேறு சாதனைகளும் முறியடிக்கப்படலாம்.
சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம்
இதுவரை 5 டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்கள் நடந்துள்ளது. ஆனால் சொந்த மண்ணில் களமிறங்கிய அணி இதுவரை சாம்பியன் பட்டம் வென்றதில்லை. இந்த தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்லும் பட்சத்தில் சொந்த மண்ணில் கிண்ணம் வென்ற முதல் அணி என்ற பெருமை கிடைக்கும்.
அதிக விக்கெட் சாதனை
டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியர்வர்கள் பட்டியலில் இலங்கை அணியின் லசித் மலிங்க (31 போட்டி, 38 விக்கெட்) முதலிடத்தில் உள்ளார்.
சஹித் அஜ்மல் (23 போட்டி, 36 விக்கெட்), அஜந்த மெண்டீஸ் (21 போட்டி, 35 விக்கெட்), உமர் குல் (24 போட்டி, 35 விக்கெட்), அப்ரிடி (30 போட்டி, 35 விக்கெட்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
காயத்தால் அவதிப்படும் மலிங்க இந்த உலகக் கிண்ண களமிறங்குவதில் சந்தேகம் தான். இதனால் பாகிஸ்தானின் அப்ரிடி, மலிங்கவின் சாதனையை முறியடிக்கலாம்.
2 முதல் 4 இடம் வரை உள்ள சஹித் அஜ்மல் , அஜந்தா மெண்டீஸ், உமர் குல் ஆகியோர் இந்த தொடரில் இடம்பெறவில்லை.
விக்கெட் காப்பாளர் சாதனை
டி20 உலகக் கிண்ண தொடரில் பாகிஸ்தான் விக்கெட் காப்பாளர் கம்ரான் அக்மல் 30 ஆட்டமிழப்பு (12 பிடியெடுப்பு, 18 ஸ்டம்பிங்) செய்து முதலிடத்தில் உள்ளார். ஆனால் அவர் தற்போதைய தொடரில் இடம்பெறவில்லை.
சங்கக்கார (12 பிடியெடுப்பு, 14 ஸ்டம்பிங்) 26 ஆட்டமிழப்புடன் 2ஆவது இடத்தில் உள்ளார். அவரும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இதனால் அதற்கு அடுத்த இடத்தில் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட் காப்பாா் டினேஷ் ராம்தின், இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் தோனி ஆகியோர் பழைய சாதனைகளை முறியடிக்கலாம். இருவரும் தலா 24 ஆட்டமிழப்பு செய்துள்ளனர்.
அதிக அரைச்சதம்
டி20 போட்டிகளில் அதிக அரைச்சதம் அடித்தவர்கள் பட்டியலில் நியுூசிலாந்தின் மெக்கலம் 15 அரைச்சதத்துடன் முதலிடத்தில் உள்ளார்.
அவர் தற்போது ஓய்வு பெற்றுவிட்டதால் கிறிஸ் கெயில் (14 அரைச்சதம்), விராட் கோஹ்லி (13 அரைச்சதம்), டில்ஷான் (13 அரைச்சதம்) இவர்கள் முந்தைய சாதனையை முறியடிக்கலாம்.
தொடர் வெற்றிகள்
டி20 போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றி பெற்ற அணிகளில் இந்தியா தற்போது 7 வெற்றிகள் பெற்றுள்ளது. அதேநேரம் இங்கிலாந்து, அயர்லாந்து 8 வெற்றிகளுடன் உள்ளது.
உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா முதல் 2 போட்டிகளில் வெற்றி பெறும்பட்சத்தில் அந்த அணிகளின் சாதனை முறியடிக்கப்படும்.
அதேவேளை தோல்வியை சந்திக்காமல் கிண்ணம் வெல்லும் பட்சத்தில் அவுஸ்திரேலியாவின் (தொடர்ச்சியாக 12 வெற்றி) சாதனையையும் முறியடிக்கலாம்.
உலகக் கிண்ணம்: நிகழப்போகும் சாதனைகள்....
Reviewed by Author
on
March 17, 2016
Rating:

No comments:
Post a Comment