வித்தியா வழக்கு! பிரதேசத்தைவிட்டு வெளியேறியவர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்துமாறு உத்தரவு...
புங்குடுதீவு வித்தியாவின் படுகொலை இடம்பெற்றதன் பின்னர் அப் பிரதேசத்திலிருந்து வெளியேறிச் சென்றவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டு மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி வை.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார்.
புங்குடுதீவு பாடசாலை மாணவியான வித்தியா கடந்த வருடம் பாடசாலை செல்லும் போது கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணையானது ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்றைய வழக்கு விசாரணையின் போதே நீதிவான் இவ் உத்தரவை பிறப்பித்திருந்தார்.
மேலும் நேற்றைய வழக்கு விசாரணையின் போது,குற்றப்புலனாய்வு பிரிவினர் இவ் வழக்கு தொடர்பான பூரண விசாரணைகளை மேற்கொள்வதற்கு கால அவகாசம் தேவையெனவும் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த நீதிவான் குறித்த படுகொலை சந்தேக நபர்களை கைது செய்து விளக்கமறியலில் வைத்திருக்கும் காலம் ஒருவருடத்தை எட்டுவதனால் தொடர்ந்தும் அவர்களை ஒருவருடத்திற்கும் மேலாக நீதிவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் தடுத்து வைத்திருக்க முடியாது எனவும் அதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தினுடாக மேல் நீதிமன்றத்தின் அனுமதியினை பெற வேண்டும் எனவும் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அறிவித்தார்.
குறித்த படுகொலை சந்தேக நபர்களில் 5ஆவது மற்றும் 6ஆவது சந்தேக நபர்கள் சார்பாக மன்றில் முன்னிலையாகியிருந்த வழக்கறிஞர் இருவரையும் இவ் வழக்கு தொடர்பாக தாம் சந்திக்க வேண்டும் அதற்கு அனுமதிக்குமாறு நீதிமன்றில் கோரியிருந்த போதிலும் நீதிவான் அதனை நிராகரித்திருந்தார்.
அத்துடன் வித்தியாவின் படுகொலை இடம்பெற்றதன் பின்னர் அப் பகுதியிலிருந்து வெளியேறி சென்றவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டு மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதேவேளை நேற்றைய தினமும் மரபணு அறிக்கை மற்றும் கொலை நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட தடயங்கள் தொடர்பாக பகுப்பாய்வுக்கு அனுப்பட்ட எந்தவித அறிக்கைகளும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் இவ் வழக்கு விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிவான் நீதிமன்ற நீதிவான் வை.எம்.எம்.றியால் உத்தரவிட்டார்.
வித்தியா வழக்கு! பிரதேசத்தைவிட்டு வெளியேறியவர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்துமாறு உத்தரவு...
Reviewed by Author
on
March 29, 2016
Rating:

No comments:
Post a Comment