அண்மைய செய்திகள்

recent
-

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம்.....


அன்னை தெரசாவுக்கு வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி “புனிதர்’ பட்டம் வழங்கப்படவுள்ளதாக, ரோமானிய கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஃபிரான்சிஸ் முறைப்படி நேற்று அறிவித்தார்.

அன்னை தெரசா இறந்து 19 ஆண்டுகள் கழித்து, தற்போது அவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படவுள்ளது. இதையொட்டி, ரோம் நகரில் நடைபெறவுள்ள (செப்.4) விழாவில், மிஷனரி ஆஃப் சாரிட்டியின் சகோதரி பிரேமா, பேராயர் டிசோசா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

தனது வாழ்நாள் முழுவதையும் ஏழைகள் மற்றும் நோயாளிகளுக்காக அர்ப்பணித்தவரான அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கான முதல்படியாக, “அவர் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்’ என, போப் இரண்டாம் ஜான் பால், கடந்த 2003ஆம் ஆண்டு அறிவித்தார்.

“மேற்கு வங்கத்தில் கடந்த 1998ஆம் ஆண்டு, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கியிருந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மறைந்த அன்னை தெரசாவின் அருளால் உடல் நலம் பெற்ற அற்புத நிகழ்வு நடந்துள்ளது. இதனால் தெரசாவை இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்’ என்று அறிவிப்பதாக போப் இரண்டாம் ஜான் பால் தெரிவித்தார்.

இதேபோன்று, கடந்த 2008ஆம் ஆண்டு, மூளைக் கட்டி நோயால் (பிரைன் ட்யூமர்) பாதிக்கப்பட்டிருந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், அன்னை தெரசாவின் இறையருளால் நோயிலிருந்து மீண்ட அற்புதமும் நிகழ்ந்துள்ளதாக, வாட்டிகன் கத்தோலிக்க திருச்சபை, கடந்த ஆண்டு அறிவித்தது.

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான மாசிடோனியாவில், கடந்த 1910ஆம் ஆண்டு பிறந்த அன்னை தெரசா, தனது 18 வயது வரை அங்கு வாழ்ந்தார். அதன் பின்னர் சில ஆண்டுகள் அயர்லாந்தில் தங்கியிருந்த அவர், 1929ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார்.

1950ஆம் ஆண்டு, கொல்கத்தாவில் “மிஷனரி ஆஃப் சாரிட்டி’ எனும் தொண்டு அமைப்பை நிறுவிய அன்னை தெரசா, அதன் வாயிலாக கிறிஸ்தவ மதப்பணியுடன், கொல்கத்தாவில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏழைகள் மற்றும் நோயாளிகளின் துயர்துடைக்க 45 ஆண்டுகளுக்கு மேலாகத் தொண்டாற்றினார்.

கடந்த 1979இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா, 1997ஆம் ஆண்டு, தனது 87ஆவது வயதில், கொல்கத்தாவில் காலமானார்.

மேலும், அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், மிஷனரி ஆஃப் சாரிட்டி மற்றும் பிற கிறிஸ்தவ அமைப்புகளின் சார்பில், வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி, கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் விழா நடத்தப்படவுள்ளது.

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம்..... Reviewed by Author on March 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.