அண்மைய செய்திகள்

recent
-

தமிழகத்தைத் தமிழன் ஆள வேண்டும்! கடலூரைக் கலக்கும் நாம் தமிழர் கட்சியினர்...

கடலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகக் களம் இறங்கி, பிரசாரத்தில் மற்ற கட்சியினரை மிரட்டிக் கொண்டிருக்கிறார் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான். பொதுக்கூட்டம், தெருமுனைப் பிரசாரம், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம், சுவர் விளம்பரங்கள் என பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறார்கள், நாம் தமிழர் கட்சியினர்.

கடலூர் முதுநகரில் சீமானை ஆதரித்து கடந்த 25-ம் தேதி பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. சீமான் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கட்சியின் சின்னமான ‘இரட்டை மெழுகுவத்தி’யைக் கையில் ஏந்தியவாறு தொண்டர் ஒருவர், கூட்டத்தை வலம் வந்தார். நிர்வாகிகள் பேசுவதை மேடையில் அமர்ந்தவாறு ரசித்துக்கொண்டிருந்தார் சீமான்.

கூட்டத்தில் திடீரென ஒரு சலசலப்பு. மதுபோதையில் மேடையை நோக்கித் தள்ளாடிக்கொண்டு வந்தார், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர். “யார் நீங்க? இங்கே எதுக்கு கூட்டம் போட்டுருக்கீங்க?” என்று சொல்லிக்கொண்டே, மேடையில் அமர்ந்திருந்த மாநில ஒருங்கிணைப் பாளரான வழக்கறிஞர் தடா சந்திரசேகரைப் பார்த்து, “கீழே இறங்குய்யா” என்றார். அந்த ஆசாமியை அப்படியே அள்ளிக்கொண்டு போனது நாம் தமிழர் தொண்டர்கள் படை. அதுவரை மேடையில் சிரித்துக் கொண்டிருந்த சீமான், இந்தச் சலசலப்பால் அமைதியாகிவிட்டார்.



தொடர்ந்து நிர்வாகிகள் பேசினர். கடைசியாக மைக் பிடித்தார் சீமான். “எனது சொந்த ஊர் சிவகங்கை. இங்கு வந்து ஏன் நிற்கிறேன் என்று தெரியுமா? சுனாமி, தானே, வெள்ளம் என இயற்கை இடர்பாடுகளால் அதிகம் பாதிக்கப்படுவது இந்தக் கடலூர்தான். ஆட்சியாளர்கள் யாரும் அதைப்பற்றி கவலைப்படுவதே இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிற்பவன்தான் போராளி. நான் போராளி. அதற்காகத்தான் இங்கு வந்து நிற்கிறேன். அதுமட்டுமில்லை. தமிழ் உணர்வாளர்கள் அதிகமாக இருப்பதும் இங்குதான்” என்று குரலை உயர்த்திப் பேசினார். இளைஞர்களின் ஆரவாரம் அடங்க வெகு நேரமாகியது.

தொடர்ந்து பேசிய சீமான், “தமிழ் மொழிதான் உலக மொழிகளுக்கு மூத்த மொழி. அந்தத் திமிர் நமக்கு வரவேண்டும். சாதி, மத திமிர் தேவையில்லாத ஒன்று. சந்தனக் கடத்தல் வீரப்பன், காட்டில் சாராயம் காய்ச்சவில்லை. ஆனால், நாட்டில் உள்ள தலைவர்கள்தான் சாராயம் காய்ச்சி விற்கிறார்கள். முதல்வராக வேண்டும் என்று சொல்லும் விஜயகாந்த்துக்கு மொழிப்போர் தியாகிகளைப்பற்றி தெரியுமா? அவர் ‘கிங்’கும் இல்லை, ‘கிங்மேக்கரு’ம் இல்லை. ‘கிங்ஃபிஷர்’தான். எந்தத் திராவிட கட்சிகளிலாவது தமிழன் தலைவராக இருக்கிறானா? கேரளாவைக் கேரளாக்காரன் ஆளுகிறான். கர்நாடகாவைக் கர்நாடகாக்காரன் ஆளுகிறான். தமிழகத்தை ஒரு தமிழன் ஆளக் கூடாதா?” என்று கேள்வியோடு முடித்தார்.

மறுநாள் காலை ஆறு மணிக்கு மீன்பிடித் துறைமுகத்துக்குச் சென்றார் சீமான். அங்கிருந்த மீனவர்களின் படகுகளில் ஒவ்வொன்றாக ஏறி, இறங்கி மீனவர்களிடம் வாக்குச் சேகரித்தார்.



“எந்த அரசியல்வாதிகளும் இந்த இடத்துக்கு வந்து, இவ்வளவு காலையில் ஓட்டு கேட்டதில்லை. நீங்கள் வந்திருப்பது ஆச்சர்யமாக இருக்கு” என்று மீனவர்கள் சொன்னார்கள். அதற்கு, “உங்கள் துயரைத் துடைக்க எனக்கு ஒருமுறை அதிகாரத்தைக் கொடுங்கள். உங்களுக்கு நிரந்தரமான தீர்வைப் பெற்றுத் தருவதே எனது நோக்கம்” என்று அவர்களிடம் உறுதியளித்தார் சீமான்.

உழவர் சந்தை, மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட், மீன் மார்க்கெட் எனப் பல பகுதிகளில் கடை கடையாக ஏறி இறங்கினார். சீமானை பார்க்கவேண்டும் என்ற ஆவலில் பொதுமக்கள் அவரைச் சூழ்ந்துகொள்ள, “உங்களைப் பார்க்கத்தான் நான் வந்திருக்கேன். நீங்கள் அங்கேயே இருங்கள். நான் வருகிறேன்” என்று ஒவ்வொருவரையும் சந்தித்துப் பேசினார்.


பின்னர், ஒவ்வோர் உடற்பயிற்சிக் கூடமாகச் சென்று அங்கிருந்த இளைஞர்களைச் சந்தித்து வாக்குச் சேகரித்தார். அவர்களுடன் அமர்ந்து பேசிய சீமான், திராவிடக் கட்சிகள் தமிழனுக்குச் செய்த துரோகங்கள் பற்றி அவர்களுக்கு ஒரு வகுப்பே எடுத்தார். “மாற்றம் என்பது சொல் அல்ல, செயல். அந்தச் செயல் இளைஞர்களால் மட்டும்தான் முடியும். நீங்கள் ஒன்றுதிரண்டு தமிழுக்காகப் போராட வேண்டும்” என்றார்.

சீமானின் சூறாவளிப் பிரசாரத்தை மற்ற கட்சியினர் மிரட்சியோடு பார்க்கிறார்கள்.

- க.பூபாலன்
படங்கள்: எஸ்.தேவராஜன்

தமிழகத்தைத் தமிழன் ஆள வேண்டும்! கடலூரைக் கலக்கும் நாம் தமிழர் கட்சியினர்... Reviewed by NEWMANNAR on March 30, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.