அண்மைய செய்திகள்

recent
-

ஜெயலலிதாவின் பிரசாரம்: ஹெலிபேடுக்காக 40 ஏக்கர் விவசாய நிலங்கள் பாழ்!

காஞ்சிபுரம்: முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரத்தையொட்டி ஹெலிபேடு அமைப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 ஏக்கர் விவசாய நிலங்கள் பாழாக்கப்படுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்று பிரசாரம் செய்யும் வகையில் அவரது பிரசார பயணத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதற்காக அவர் செல்லும் இடங்களிலெல்லாம், ஹெலிபேடு அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து, ஏப்ரல் 18-ம் தேதி பிரசாரம் செய்யவுள்ள ஜெயலலிதா, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வேட்பாளர்களை அறிமுகப்படுத்த உள்ளார். காஞ்சி மேற்கு மாவட்டச் செயலாளர் ‘வாலாஜாபாத்’ கணேசன் தலைமையில், பிரசார கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வாலாஜாபாத்-படப்பைக்கு இடையே உள்ள வாரணவாசியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு, தாழையம்பட்டு எனும் கிராமத்தில் ஹெலிபேட் அமைக்கப்படுகின்றது. ஹெலிகாப்டர் இறங்குவதற்காக 150 அடிநீளம், 150 அடி அகலத்தில் ஹெலிபேட், அதைச்சுற்றி சுமார் 40 அடி அளவிற்கு தார் போடும் பணியும் நடைபெறுகின்றது. 45 அடி அகலமும், 75 அடி நீளமும், 23 அடி உயரமும் கொண்ட பிரம்மாண்ட மேடையும் அமைக்கப்பட்டு வருகின்றது. மேடைக்கும் ஹெலிபேடிற்கும் இடையே உள்ள 400 அடி தொலைவிற்கு புதிய சிமெண்ட் சாலை போடப்படுகின்றது.


இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படப்போகும் அந்த ஹெலிபேடு மற்றும் சாலைகளுக்கான செலவு, சுமார் 50 லட்சம் ரூபாய் என்று வாய் பிளக்க வைக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.







இவ்வாறு ஹெலிபேடு, பொதுக்கூட்ட மேடை, சிமெண்ட் சாலை என அனைத்தையும் அமைக்க துண்டு துண்டாக நிலம் பயன்படுத்தப்படுகிற போதிலும், அனைத்து பயன்பாடுகளுக்கும் சுமார் 40 ஏக்கர் நிலம் வளைக்கப்பட்டுள்ளது. பிரசார கூட்டம் முடிவடைந்த பின்னரும், சிமெண்ட் சாலைகள் அப்படியே இருக்கும் என்பதால் எதிர்காலத்தில் இந்த குறிப்பிட்ட பகுதியில் விவசாயம் செய்வது சாத்தியமின்றி போய்விடும்.

இவ்வாறு ஹெலிபேடு அமைப்பதற்காக சுமார் 40 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்படுத்தப்பட்டுள்ள தகவல் விவசாயிகளிடையே அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த இடத்திற்கு நாம் சென்றபோது, மிளகாய் பயிரிடப்பட்ட இடத்தில் டாராஸ் வண்டிகளில் ஜல்லியை கொட்டிக் கொண்டிருந்தார்கள். கேமராவை அந்தப்பகுதிக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. வாலாஜாபாத்திலிருந்து, தாம்பரத்திற்கு செல்லும் கூட்டுகுடிநீர் திட்டத்தின் நீர் உந்து நிலையம் (பம்பிங் ஹவுஸ்) தேவிரியம்பாக்கம் பகுதியில் உள்ளது. அங்கிருந்து ஹெலிபேடு அமைக்க டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. ஹெலிபேடு அமைப்பதற்காக விவசாய நிலங்கள் பயன்படுத்தப்படுவது விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது என்றால், குடிநீருக்காக செல்லும் குழாயில் இருந்து ஹெலிபேடு அமைப்பதற்காக தண்ணீர் எடுத்து செல்வது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிரசாரம் செய்ய வந்த ஜெயலலிதாவிற்கு நத்தப்பேட்டையில் ஹெலிபேடு அமைத்தார்கள். நத்தப்பேட்டை ஹெலிபேடு இப்போது உபயோகப்படுத்த முடியாத நிலையில் பாழடைந்து கிடக்கிறது.



தேர்தல் நேரத்தில் மட்டும் 34 இடங்களில் ஹெலிபேடுகள் உருவாக்கப்பட்டன. 34 இடங்களில் ஹெலிபேடு அமைப்பதற்காக 5 கோடியே 80 லட்சத்து 70 ஆயிரத்து 223 ரூபாயை செலவழித்திருப்பதாக மத்திய தேர்தல் ஆணையத்துக்கு அ.தி.மு.க தலைமைக் கழகத்தின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட செலவுக்கணக்கில் தெரிவித்திருந்தார்கள்.

ஹெலிபேடுக்கான செலவு ஒருபக்கம் என்றாலும், அதற்காக விளைச்சல் உள்ள விவசாய நிலங்களை பாழ்படுத்துவது விவசாயிகளிடையே வருத்தத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


விவசாய நிலங்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பில் இருப்பவரே அதை பாழ்படுத்தும் வேலையை செய்கிறாரே என வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

- பா.ஜெயவேல்
படங்கள்: தே.அசோக்குமார்
(மாணவ பத்திரிகையாளர்)
VIKATAN
ஜெயலலிதாவின் பிரசாரம்: ஹெலிபேடுக்காக 40 ஏக்கர் விவசாய நிலங்கள் பாழ்! Reviewed by NEWMANNAR on April 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.