முன்னாள் போராளிகளின் கொழும்புக்கான அழைப்பு மே தினத்துக்கான ஆட்சேர்ப்பா? முன்னாள் எம்.பி.வினோ
முன்னாள் போராளிகளுக்கு உதவித் திட்டம் வழங்குவதாக கொழும்புக்கு அழைப்பது மே தினத்துக்கான ஆட்சேர்ப்பா என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கம் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இவ்விடையம் தொடர்பில் அவரிடம் கேட்ட போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை கொழும்புக்கு அழைத்திருப்பது போராளிகள் மத்தியில் அச்சத்தையும்,சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது.
முன்னாள் போராளிகள் கடத்தப்படுவதும், விசாரணைக்கு அழைத்துச்செல்லப்படுவதும் தொடர் கதையாகவே இருந்து வருகின்றது. தொழில் வாய்ப்புக்கள் இன்றி,பெரும் பொருளாதார சுமைககளுக்குள்,ஒரு வேளை உணவக்கு போராடும் இவர்களை அரசாங்கம் கைவிட்டு விட்டது.
உடல் ரீதியாகவும்,உளரீதியாகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் முன்னாள் போராளிகளும், அவர்களது குடும்பமும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளுக்கு சிக்கி, மூன்றாம் தர பிரஜைகளாக கூட மதிக்கப்படாதவர்களாக சீரளிக்கப்பட்டு வருகிறார்கள். வாழ்வாதாரம் ஒருபுறமிருக்க பாதுகாப்பற்ற, மன உழைச்சல் மிகுந்த, நிம்மதியை தொலைத்த நடைப்பிணங்களாக அவர்களின் வாழ்க்கைப் பாதை அமைந்துள்ளது.
இப்போராளிகளின் விடயத்தில் நிரந்தரமான தீர்வுகாண முடியாமல் எமது இனத்துக்கு நிரந்தர தீர்வு என்பது அடைய முடியாதது மட்டுமல்ல,எற்றுக்கொள்ளவும் முடியாது.
அரசாங்கம் முன்னாள் போராளிகளை பாதுகாக்கும் என்றோ,வாழ்வை மேம்படுத்தும் என்றோ, அன்றாடம் எதிர் நோக்கும் சவால்களை தீர்த்துவைக்கும் என்றோ நம்ப அவர்கள் தயாரில்லை.
எனவே வடகிழக்கில் உள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் வருடாந்த பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டினை முன்னாள் போராளிகளின் பொருளாதார, வாழ்வாதார, புனர்வாழ்வு திட்டங்களுக்கு முழுமையாக ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.
கடந்த 2014ம் ஆண்டு வரவு செலவுத்திட்ட விவாதத்திலும் நான் இக்கோரிக்கையை முன்வைத்தேன். குறைந்தது மூன்று வருடங்களுக்காவது இத்திட்டத்திற்கு அரசாங்கம் அனுமதித்தால் போராளிகள் பலரின் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வரமுடியும். அது மட்டுமல்லாமல் இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களும் தத்தம் நாடுகளில் வேலைவாய்ப்புக்களை வழங்கமுடியும்.
இன்று முன்னாள் போராளிகளுக்கு இலங்கை ஓர் பாதுகாப்பான நாடாக இல்லை. அவர்களுக்கு வேலைவாய்ப்போடு பாதுகாப்பையும் வழங்க சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னாள் போராளிகளின் பாதுகாப்பில் அக்கரையும்,ஆதரவும் வழங்க வேண்டிய கடமைப்பாடும் சர்வதேசத்துக்கு இருக்கின்றது.
முன்னாள் போராளிகள் என அடையாளப்படுத்தப்படுவதற்கு, யுத்தத்தை முடித்து வைத்த சர்வதேசத்தின் நேரடி,மறைமுக ஆதரவும் காரணம் என்பதும் வெட்ட வெளிச்சமானது.
முன்னாள் போராளிகளை எதிர்வரும் 30ம் திகதி கொழுமபுக்கு அழைத்து நிற்பதில் இன்னு மொருசந்தேகத்தினையும் கொண்டுவரச் செய்கின்றது.
அடுத்த நாள் முதலாம் திகதி மே தின ஊர்வலத்தில், கூட்டத்தில் போராளிகளை கலந்து கொள்ளச் செய்து கூட்ட எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்ய புனர்வாழ்வு அலுவலகம் பின்னணியில் செயற்படுகின்றதா வெனவும் சந்தேகப்பட வேண்டியுள்ளது.
மே தின நாளைத் தெரிவு செய்து உதவித்திட்டம் வழங்கும் கலந்துரையாடலை மாவட்ட மட்டத்தில் நடாத்தி போக்குவரத்து மற்றும் இதர செலவுகளை தவிர்க்க ஏன் புனர்வாழ்வு அலுவலகம் ஏற்பாடு செய்யக்கூடாது.
போராளிகளை அச்சமூட்டி மேதினக் கூட்டங்களில் கலந்து கொள்ளச் செய்வது அது அரசாங்கத்தின் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும் எனவும் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் போராளிகளின் கொழும்புக்கான அழைப்பு மே தினத்துக்கான ஆட்சேர்ப்பா? முன்னாள் எம்.பி.வினோ
Reviewed by NEWMANNAR
on
April 27, 2016
Rating:

No comments:
Post a Comment