அண்மைய செய்திகள்

recent
-

வட,கிழக்கில் இராணுவ அழுத்தங்களை போக்க வேண்டும்!


இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர்.

எனினும், அரசியல்வாதிகள் முதல் ஆயுததாரிகள் வரை பல்வேறு தரப்பினரும் மேற்கொள்ளும் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் இனங்களுக்கிடையே அமைதியின்மையைத் தோற்றுவித்து வருவதுடன் எந்நேரமும் ஓரினம் மற்றுமொரு இனத்தைச் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலைமையினையே தோற்றுவித்துள்ளது.

இதன் விளைவாகவே கடந்த காலங்களில் இனங்களுக்கிடையே மோதல்களும் முறுகல் நிலையும் ஏற்பட நேர்ந்தது மட்டுமன்றி இனக்கலவரங்களும் வெடித்தன.

இறுதியில் இனப்பிரச்சினை ஆயுத மோதலாக உருவெடுத்து மூன்று தசாப்த காலம் இந்த நாட்டை சீரழித்தது. இறுதியில் யுத்தம் முடிவுக்கு வந்தும் கூட அதற்கு மூல காரணமாக இருந்த பிரச்சினைகள் தொடர்ந்தும் நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வருகின்றன.

இதேவேளை, புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கம் நேர்மையான முறையில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

எனவே எமது அர்ப்பணிப்பில் தமிழ் பேசும் மக்கள் நம்பிக்கை வைக்கலாம் என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்பொழுது மத மற்றும் இன நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் நோக்கில் என்றுமில்லாதவாறு செயற்பாடுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வகையில் வடக்கு மற்றும் தெற்கு மக்கள் அச்சமின்றி வாழும் சூழலை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

வாக்குறுதிகள் மாத்திரம் போதாது அவை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே தமிழ் பேசும் மக்களின் ஒரே எதிர்ப்பார்ப்பாகும்.

மாறி மாறிப் பதவியேற்கும் ஒவ்வொரு அரசாங்கமும் வாய் நிறைந்த வாக்குறுதிகளை வழங்கும் அதேவேளை, அவற்றை நடைமுறைப்படுத்த தவறிவிடுகின்றன.

இதனால் பல தசாப்த காலமாக ஏமாற்றமொன்றையே தமிழ் மக்கள் சந்தித்து வந்துள்ளனர். இதுவே எந்தவொரு அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைக்க அவர்கள் தயங்குவதற்கான பிரதான காரணமாகும்.

குறைந்த பட்சம் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளையேனும் தீர்த்து அவர்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பது மிகவும் அத்தியாவசியமாகும்.

யுத்தத்தால் தமிழ் மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் அதிலிருந்து மீண்டெழ முடியாதவர்களாகவே தொடர்ந்தும் இருந்து வருகின்றனர்.

எனவே எந்தவிதமான அடக்கு முறைகளையும் அவர்கள் மீது திணிக்காதிருப்பதை உறுதி செய்வது மிகவும் இன்றியமையாததாகும்.

இதேவேளை, வடமாகாணத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி காலத்திலும் சிவில் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மஹிந்த ஆட்சிக்கு ஒப்பான இராணுவ ஆட்சியே நடைபெற்று வருகின்றது.

வடக்கில் சிங்கள பௌத்த மயமாக்களுக்கே முப்படையினரும் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சபையில் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிக் குடியேறியுள்ள தென்பகுதி கடற்றொழிலாளர்கள் தொடர்பிலும் வடமாகாண விசேட அமர்வில் பேசப்பட்டதுடன் முல்லைத்தீவு கரையோரங்களில் அனுமதியின்றித் தங்கியிருந்து மீன்பிடிப்பது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பகுதியில் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தொடர்பில் தகவல் சேகரிக்க சென்ற கிராம அலுவலர் ஒருவர், குறித்த மீனவர்களால் தாக்கப்பட்டுள்ளதுடன் மீனவர்களின் தகவலைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு விரைந்து வந்த இராணுவத்தினரால் குறித்த கிராம அலுவலர் மிகவும் தரக்குறைவாக நடத்தப்பட்டதாகவும் மாகாண சபை உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வடக்கில் சிவில் நிர்வாகமா? அல்லது இராணுவ ஆட்சியா நடைபெறுகின்றது என வடமாகாண சபை அமர்வின் போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மக்களைப் பொறுத்தமட்டில் பெரும்பாலானவர்கள் கடற்றொழிலையும், விவசாயத்தையும் நம்பியே தங்கள் வாழ்கையை நகர்த்துகின்றனர்.அதுவும் நீண்டதோர் இடைவெளிக்குப் பின்னரே அவர்கள் மீண்டும் கடற்றொழிலில் இறங்கியுள்ளனர்.

இவ்வாறான சூழலில் கடல் கடந்து வரும் இந்திய மீனவர்கள் மற்றும் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வரும் தென்னிலங்கை மீனவர்களின் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் அவர்கள் காணப்படுகின்றனர்.

இது அவர்களின் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதிப்பதாக இருந்து வருகின்றது.இராணுவத்தினரது ஒத்துழைப்புடனேயே தென்னிலங்கை மீனவர்கள் தமது எல்லைக்குள் புகுந்து மீன்பிடியில் ஈடுபடுவது மாத்திரமின்றி நிம்மதியாக தொழில் செய்ய முடியாத சூழ்நிலையே அங்கு காணப்படுவதாகவும் தொடர்ச்சியாக அப்பிரதேச கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

முன்னைய அரசின் காலத்திலும் இராணுவத்தினரதும் கடற்படையினரதும் அச்சுறுத்தல்கள் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளர்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டனர்.

அது தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, வடபகுதி கடற்றொழிலாளர்கள் மீதான அழுத்தங்களே அதிகரிக்கப்பட்டன.

அந்த நிலைமை இந்த நல்லாட்சியிலும் தொடர இடமளிக்கக் கூடாது என்பதே தமிழ் மக்களின் ஏகோபித்த விருப்பமாகும்.

வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் யுத்தத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டதுடன் குறித்த மக்களும் யுத்தத்தால் பல்வேறு அவலங்களை சந்தித்ததுடன் அந்த வேதனைகளைச் சுமந்தவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர் என்ற யதார்த்தத்தை தென்பகுதி அரசியல்வாதிகள் உணர்வது அவசியமாகும்.

அதனை விடுத்து வெறுமனே இன ரீதியான கண்ணோட்டத்துடன் கருத்துக்களைத் தெரிவிப்பதும் சிறுபான்மை இனங்களை அடக்கியாள வேண்டும் என்ற சிந்தனையுடன் செயற்படுவதும் நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்க ஒருபோதும் உதவாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வடக்கு, கிழக்கு மக்களின் துயரங்களை எடுத்துக்கூறி அவற்றுக்கு நிவாரணம் தேட முனையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவற்றுக்கு புலிமுத்திரை குத்தி அவற்றை நடைமுறை செய்யாமல் தடுத்து நிறுத்துவதே தென்பகுதி கடும் போக்காளர்களினதும் ஒரு சில அரசியல்வாதிகளினதும் போக்காக இருந்து வருகின்றது.

இந்த விதமான மனப்போக்கு மாற்றமடையாத வரையில் தமிழ்ப் பேசும் மக்கள் எதிர்நோக்கும் எந்தவிதமான கஷ்டங்களும் நீங்கப் போவதில்லை என்பதே யதார்த்தமாகும்.

இவற்றைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் முதலில் வடகிழக்கு மக்கள் எதிர்நோக்கும் இராணுவ ரீதியான அழுத்தங்களைப் போக்கவும், ஏனைய பிரதேச மக்கள் போன்று சகஜ வாழ்க்கை வாழவும் கூடிய இயல்பான சூழலை உருவாக்க முன்வர வேண்டும்.

அதுவே இன்றைய அவசர தேவை என்பதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

வட,கிழக்கில் இராணுவ அழுத்தங்களை போக்க வேண்டும்! Reviewed by Author on April 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.