உண்மையை ஒப்புக்கொண்டார் பிரித்தானிய பிரதமர் : பதவிவிலக எதிர்க்கட்சி அழுத்தம்...
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் தனது காலஞ்சென்ற தந்தையின் வெளிநாட்டிலான முதலீட்டு நிதியிலிருந்து வருமானங்களைப் பெற்றதாக ஒப்புக் கொண்டதையடுத்து பதவி விலகுவதற்கான கடும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானிய பிரதமர் 'ஐ.ரி.வி' தொலைக்காட்சி சேவைக்கு வியாழக்கிழமை இரவு அளித்த பேட்டியின் போது, தான் 2010 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்பதற்கு முன்னர் பஹமாஸை அடிப்படையாகக் கொண்ட பிளயர்மோர் நம்பிக்கை நிதியத்தில் தனது மறைந்த தந்தை அயன் கமெரோனிற்கு உடைமையாக இருந்த பங்குகளிலிருந்து வருமானத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார்.
பனாமாவை அடிப்படையாகக் கொண்ட மொஸாக் பொன்ஸேகா நிறுவனத்திடமிருந்தான 'பனாமா பேப்பர்ஸ்' இரகசிய ஆவணக் கசிவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கானோரில் அயன் கமெரோனும் ஒருவராவார்.
பனாமா பேப்பர்ஸ் ஆவணக் கசிவானது உலகிலுள்ள செல்வந்தர்களும் அதிகாரத்திலுள்ளவர்களும் வரி ஏய்ப்புச் செய்யும் முகமாக வெளிநாட்டு நிறுவனங்களில் தமது செல்வத்தை மறைத்து வைத்ததாக தெரிவிக்கிறது.
எனினும் தான் பதவியேற்பதற்கு 4 மாதங்களுக்கு முன்னர் அந்தப் பங்குகளை விற்று விட்டதாக டேவிட் கமெரோன் கூறினார்.
“நாங்கள் பிளயர்மோர் முதலீட்டு நம்பிக்கை நிதியத்தில் 5,000 பங்குகளை உடைமையாகக் கொண்டிருந்தோம். அவற்றை நாம் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விற்றுவிட்டோம். அதன் பெறுமதி சுமார் 30,000 ஸ்ரேலிங் பவுணாகும்" என கமெரோன் கூறினார்.
நான் எனக்குக் கிடைத்த வருமானங்கள் தொடர்பில் வருமான வரியைச் செலுத்தியுள்ளேன். அதில் மேலதிகமாக ஒரு இலாபம் கிடைத்தது. ஆனால் அது மூலதன வருமான வரி கொடுப்பனவை விடவும் குறைவாக இருந்ததால் நான் அதற்கு வரி செலுத்தவில்லை" என கமெரோன் தெரிவித்தார்.
டேவிட் கமெரோன் வியாழக்கிழமை இரவு வரையும் தனது தந்தையின் பங்குகளிலிருந்து தான் வருமானம் எதனையும் பெறவில்லை என வலியுறுத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டேவிட் கமெரோனின் இந்த அதிரடி அறிவிப்பு குறித்து அந்நாட்டு தொழிற் கட்சி பிரதித் தலைவர் ரொம் வாட்ஸன் கூறுகையில் மேற்படி பங்கு வருமானங்களைப் பெற்று வந்தமை தொடர்பில் டேவிட் கமெரோன் பதவி விலக வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
பனாமா பேப்பர்ஸ் ஆவணக் கசிவில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த ஐஸ்லாந்து பிரதமர் சிக்மன்டர் கன்லாகுஸன் ஏற்கனவே பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்த ஆவணங்களில் உலக நாடுகளைச் சேர்ந்த 12 தற்போதைய மற்றும் முன்னாள் தலைவர்களும் ஏனைய 143 அரசியல்வாதிகளும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
உண்மையை ஒப்புக்கொண்டார் பிரித்தானிய பிரதமர் : பதவிவிலக எதிர்க்கட்சி அழுத்தம்...
Reviewed by Author
on
April 09, 2016
Rating:

No comments:
Post a Comment