அண்மைய செய்திகள்

recent
-

மதுரையில் அழகிரியை விமர்சிக்காத ஜெயலலிதா; ஒதுங்கி நின்ற ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன்


முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற விருத்தாசலம், சேலம் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் வெயிலில் மயங்கி 5 பேர் பலியான சம்பவம் மனித உரிமை ஆணையம் வரை சென்றது. அதனால், திருச்சியை தொடர்ந்து மதுரையிலும் நேற்று மாலை 6 மணிக்கு ஜெயலலிதா பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் ஆரம்பத்தில் திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த 24 அதிமுக வேட்பாளர்களை மட்டும் ஆதரித்து பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

 ஆனால் ஹெலிபேட், தனி விமானம் என பிரச்சார செலவு அதிகமானதால் அது வேட்பாளர் கணக்கில் சேர்ந்துவிடும் என்பதால் நேற்று திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தஞ்சாவூர், தருமபுரி மாவட்டங்களில் புதிதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களையும் சேர்த்து 47 வேட்பாளர்கள் அறிமுகப் படுத்தப்பட்டனர்.

பிரச்சாரக் கூட்டத் துளிகள்…

* ஜெயலலிதா நேற்று மாலை 5.15 மணிக்கு தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து கார் மூலம் பிரச்சார மேடைக்கு 5.45 மணிக்கு வந்தார். 5.50 மணிக்கு பேச ஆரம்பித்தார்.

* கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தென் மாவட்டங்களில் திமுகவின் தேர்தல் பிரச்சார ஏற்பாடுகளை அக்கட்சியின் தென் மண்டல அமைப்பு செயலராக இருந்த மு.க.அழகிரி முன்னின்று செய்தார். அப்போது மதுரையில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா மு.க.அழகிரியை விமர்சித்தார். மு.க.அழகிரியும், அவருடன் இருந்த பொட்டு சுரேஷ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களும் மதுரையை தலைமையிடமாக வைத்து தென் மாவட்டங்களில் தனி அரசாங்கமே நடத்துகின்றனர் என்றார்.

* பேரவை தேர்தலில் மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகள் உட்பட தென் தமிழகத்தில் திமுக தோல்வியடைந்தது. அதனால், திமுகவில் இருந்து மு.க.அழகிரி படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று ஜெயலலிதா மு.க.அழகிரியை விமர்சிக்கவில்லை. தற்போது திமுகவையும், மு.க.ஸ்டாலினையும் மு.க.அழகிரி கடுமையாக விமர்சித்து வருவதால் அவரை விமர்சிப்பதை ஜெயலலிதா தவிர்த்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

* கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் பற்றியும், கடந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்காத கருணாநிதியைப் பற்றியும் விமர்சித்த ஜெயலலிதா, கிரானைட் தொடர்பாக பல வழக்குகளில் கைதான பி.ஆர்.பி.யை பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

* கடந்த இரு மாதங்களுக்கு முன் வரை ஜெயலலிதா பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் முன்னின்று ஏற்பாடுகளை செய்த அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் ஆர்.விஸ்வநாதன் இறுகிய முகத்துடனே கலந்துகொண்டனர். இருவரையும் ஜெயலலிதா கண்டுகொள்ளவில்லை. இருவரும் முதல்வர் வருவதற்கு முன் ஓரமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது முதல்வர் பாதுகாப்பு பிரிவு போலீஸார் இருவரையும் அவர்களுக்கான வேட்பாளர் இருக்கையில் போய் அமரும்படி தெரிவித்தனர்.

* ஜெயலலிதா பேச்சை கேட்கும் வகையில் முக்கிய இடங்களில் எல்இடி டிவிக்கள் வைக்கப்பட்டிருந்தன.

* நடிகர் சங்க தேர்தலில் எதிர்எதிர் துருவங்களாக இருந்த நடிகர்கள் சரத்குமார், கருணாஸ் நேற்று ஒரே மேடையில் அதிமுக வேட்பாளர்களாக அமர்ந்திருந்தனர். ஜெயலலிதா வருவதற்கு முன் வரை அவர்கள் ஒருவரை ஒருவர் பரஸ்பர நலம் விசாரித்து பேசிக்கொண்டனர். பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கூட்டத்தினரை போலீஸார் கண்காணித்தனர்.

ஓடிய பெண்களை தடுத்த போலீஸார்

மதியம் முதலே ஆண்கள், பெண்களை போலீஸார் கூட்டம் நடந்த இடத்தில் அனுமதித்தனர். அப்போது வெயில் கடுமையாக அடிக்கத் தொடங்கியதும் உள்ளே சென்றவர்கள், நாங்கள் அம்மா வரும்போது வருகிறோம் என வெளியே வந்தனர். போலீஸார் அவர்களிடம் உள்ளே சென்றால் வெளியே அனுப்பமாட்டோம் என திருப்பி உள்ளே அனுப்பினர்.

நேற்று காலை முதலே போலீஸார் பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் நிறுத்தப்பட்டனர். அவர்களுக்கு மாலை 4 மணிக்குத்தான் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. அதனால், கடும் வெயிலில் காலை முதலே மாலை வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார் சோர்வடைந்து ஆங்காங்கே கட்டிடங்கள், பேனர்கள் கீழே நிழலைத் தேடி அலைந்தனர். சிலர் தரையில் படுத்து உறங்கினர். நேற்று கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள், ஆண்களுக்கு ரூ.150 வழங்கி அதிமுகவினர் அழைத்து வந்தனர். மாலை கூட்டம் நடந்ததால் சாப்பாடு வழங்கவில்லை.


மதுரையில் அழகிரியை விமர்சிக்காத ஜெயலலிதா; ஒதுங்கி நின்ற ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் Reviewed by NEWMANNAR on April 28, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.