தமிழினியை பயன்படுத்தி ஜெயக்குமாரன் புலி எதிர்ப்பு அரசியல் செய்கிறார்! தீபச்செல்வன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை மகளிர் பொறுப்பாளர் தமிழினியின் கணவர் ஜெயக்குமாரன் தமிழினியின் பெயரை வைத்து புலி எதிர்ப்பு அரசியல் செய்வதாக கவிஞர் தீபச்செல்வன் குறிப்பிடுகிறார்.
தமிழினியைப் போலவே சில போராளிகள் புற்றுநோயால் இறந்துள்ளார்கள் என்றும் அவர்களின் மரணங்கள் திட்டமிட்ட அழிப்பா என்ற சந்தேகத்திற்குரியது என்றும் தீபச்செல்வன் தன் முகப்புத்தகத்தில் எழுதியிருந்தார்.
தமது அரசியலுக்காகவும் வயிற்றுப் பிழைப்புக்காகவுமே இவ்வாறான சந்தேகங்கள் உலாவ விடப்படுகின்றன என்றும் இதனால் புலம்பெயர் புலிகளின் உண்டியல் நிறையும் என்றும்,
தமிழினி விடுதலைப் புலிகள் காலத்தில் ஓய்வின்றி உழைத்தமையினாலேயே புற்றுநோய் தாக்கத்திற்கு ஆளானார் என்றும் ஜெயக்குமாரன் தனது முகப்புத்தகத்தில் எழுதினார்.
இந்த நிலையில் போராளிகளின் மரணங்கள் இன அழிப்புச் சார்ந்தவை என்று சந்தேகிப்பதை கண்டு ஜெயக்குமாரன் ஏன் பதற்றமடைய வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ள தீபச்செல்வன் தமிழினியை பயன்படுத்தி ஜெயக்குமாரன் புலி எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
தீபச்செல்வன் மேலும் தெரிவித்திருப்பதாவது,
ஐயோ! தமிழினிக்கு என்ன நடந்தது? உவங்கள் தான் (இலங்கை அரசு) ஏதோ செய்து போட்டாங்கள்.. என்று தமிழினி அக்காவின் மரணம் அறிவிக்கப்பட்ட நாளில் எங்கள் சனங்கள் எல்லாம் கொந்தளித்ததைப் பார்த்திருக்கிறேன்.
அவர்கள் தங்கள் அரசியலுக்காகவும் வயிற்றை நிரப்பவுமா இப்படி பேசினார்கள்?
தமிழினி அக்கா குறித்த என்னுடைய கவிதையில் "வாதையின் பிணியே சூழ்ச்சியாய்/ தன் புதல்வியை தின்றதென/ புலம்புகிறாள் தாயொருத்தி/ நெஞ்சில் மூண்ட காலத் தீயே/ தன் தலைவியை உருக்கியதென/ துடிக்கிறாள் சேனைத் தோழியொருத்தி" என்று அன்றைய நாட்களில் எழுதியதற்கு இதுதான் காரணம்.
போராளிகளின் மரணங்கள் இன அழிப்புடன் தொடர்புடையவை என சந்தேகிப்பதை கண்டு அண்ணன் ஜெயக்குமாரன் ஏன் பதற வேண்டும்?
புலிகள் இயக்கத்தில் ஓய்வின்றி வேலை செய்ததினால் தான் தமிழினி அக்காவுக்கு புற்றுநோய் வந்ததாகவும் தடுப்பில் இருந்தவர்கள் எல்லாம் நலமாக இருக்கிறார்கள் என்றும் இவர் அடித்துச் சொல்வதன் காரணம் என்ன?
ஜெயக்குமாரன் தன்னுடைய புலி எதிர்ப்பு அரசியலின் முதலீடாக தமிழினி அக்காவைப் பயன்படுத்துகிறார்.
தமிழ் அரசியல் தலைவர்களையும் புலம்பெயர் தமிழர்களையும் குற்றம் சாட்ட தமிழினி அக்காவை ஆயுதமாக கையாளுகிறார்.
எப்படியிருப்பினும் பொதுவாழ்வில் இருந்த போராளிகளின் தொடர் மரணங்கள் குறித்து கேள்வி கேட்கும் உரிமையை, கருத்துச் சொல்லும் சுதந்திரத்தை மறுப்பதன் நோக்கம் என்ன?
மனித குலத்திற்கு விரோதமாக நடந்த இன அழிப்பு தொடர்பில் ஆராயும் உரையாடும் செயற்பாட்டை எவரும் தடுக்க இயலாது.
அது ஒட்டுமொத்த ஈழ மக்கள் சார்ந்த விவகாரம். புலி ஆதரவாளர்களின், தமிழ் அரசியல் தலைவர்களின் “அரசியல் இது” என்று சொல்லிக் கொண்டு தமது அரசியல் உள் நோக்கங்களுக்காக இன அழிப்பை மறைப்பது மனித குலத்திற்கு விரோதமானது.
அத்துடன் தமிழினி அக்காவின் புத்தக வெளியீட்டு மேடையை பொன்.காந்தன், தன்னுடைய அரசியல் தனிமையின் புலம்பலை வெளிப்படுத்தும் அரங்காக பாவித்தார்.
ஆனந்தசங்கரி தன்னுடைய அரசியல் தோல்வியை புலம்பும் அரங்காக உபயோகித்தார். இப்படியெல்லாம் தாம் அரசியல் செய்து கொண்டு, தம்மை விமர்சிப்பவர்களை நோக்கி வசைக் கற்களை வீசுவதன் நோக்கம் தான் என்ன?
தமிழினியை பயன்படுத்தி ஜெயக்குமாரன் புலி எதிர்ப்பு அரசியல் செய்கிறார்! தீபச்செல்வன்
Reviewed by NEWMANNAR
on
April 15, 2016
Rating:

No comments:
Post a Comment