நாட்டை பிரிக்கும் எண்ணம் இல்லை, சந்தர்ப்பத்தை தவறவிட்டால் நாடு சீரழியும்; சி.வி. எச்சரிக்கை....
நாட்டைப் பிரிக்க வேண்டும் என்ற எண் ணம் எமக்கில்லை. சமஷ்டி என்ற முறையில் நாங்கள் நாட்டை இணைத்துக் கொள்ளப் பார்க்கின்றோம். நாம் பிரிந்து செல்ல விரும்பாது ஒருங்கிணைந்து வாழ முன்வந்துள்ளமையால் சிங்கள மக்கள் எங்களுக்கு சகல ஒத்துழைப்பையும் இசைவையும் நல்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை கைநழுவ விட் டால் நாடு சீரழிந்து போகும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எச்சரித்துள்ளார்.
சமஷ்டி என்ற முறையில் நாங்கள் நாட்டை இணைத்துக்கொள்ளப் பார்க்கின்றோம். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசியல் யாப்பை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. இதனால்தான் எங்களுடைய அரசியல் தீர்வு முன்மொழிவினை முன்வைத்திருக்கிறோயொழிய நாட்டைப் பிரிக்க வேண்டும் என்ற எந்தவிதமான எண்ணங்களும் எமக்கில்லை என்றும் முதமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான கொள்கை வரைவு முன்மொழிவுக்குரிய விசேட சபை அமர்வு நேற்றைய தினம் கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகக் கட்டடத்தில் நடைபெற்றது. இதன்போது முன்மொழிவுகளை அறிமுகப்படுத்தியும் உறுப்பினர்களின் உரைகளுக்கு பதிலளித்தும் உரையாற்றியபோதே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது வடமாகாண சபை எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிங்கள உறுப்பினர்கள், வடமாகாண சபையின் அரசியல் தீர்வு முன்மொழிவானது நாட்டில் பிரிவினைகள், பிரச்சினைகளை தோற்றுவிக்கும் நிலையை உருவாக்கவுள்ளது என்ற அடிப்படையில் உரையாற்றியிருந்தனர். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே நாட்டைப் பிரிக்கும் எண்ணம் எமக்கில்லை என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
உறுப்பினர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் பதிலளித்த முதலமைச்சர்,
நாடு இப்பொழுது பல பிரிவுகளுக்குள் தான் அடங்கியிருக்கின்றது. மாகாண சபைகளை பார்க்கும்போது பல பிரிவுக்குள்தான் இருக்கின்றது என்ற எண்ணம் தோன்றியுள்ளது. வடகிழக்கு மாகாணங்கள் ஒருமித்து செயற்பட்டமை கிட்டத்தட்ட 18 வருடங்கள் என நான் நினைக்கின்றேன்.
தமிழ்பேசும் மக்களினுடைய இடங்களை ஒன்று சேர்த்து அவர்கள் தமிழிலேயே தங்களுடைய செயற்பாடுகளை வழிநடத்திச் செல்வதற்கும் பிரச்சினைகளை தாங்களே தீர்த்துக்கொள்வதற்கும் வழிமுறைகளை வழங்குவது எந்தவிதமான வகையிலும் பிரிவினையாக அமையாது.
நாங்கள் நாட்டைப் பிரிகின்றோம் என்று கூறும்போது, நாங்கள் பிரிந்து செல்வதாக ஒவ்வொருவரும் பேசுகிறார்கள். ஐந்தாறு வருடங்களாக எவ்வித பிரச்சினைகளுமில்லாமல் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம் என கூறும் உறுப்பினராகிய நீங்கள், வடமாகாண சபையின் அரசியலமைப்பின் ஊடாக பிரச்சினைகள் ஏற்படப்போகின்றது எனக் கூறுவது அர்த்தமில்லாத பேச்சாகும். ஏனென்றால் இந்த ஐந்தாறு வருடங்கள் இளைஞர்கள் பல்வேறு வகையான துன்பங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள்.
அத்துடன் சிறைகளிலும் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது விடுதலை தொடர்பாக இதுவரை எவ்விதமான முன்னெடுப்புக்களும் எடுக்கப்படவில்லை. மேலும் கடந்த ஏழு வருடங்கள் முடிவடைந்த நிலையிலும் காணாமல்போனவர்கள் தொடர்பில் எத்தகைய உறுதிமொழிகளும் வழங்கப்படவில்லை. அத்துடன் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் சொந்த நிலங்களில் இராணுவத்தினர் இருந்து வருகின்றனர். சுமார் 1 1ஃ2 இலட்சம் இராணுவத்தினர் வடக்கில் இருக்கிறார்கள். இதனால் எமது மக்களின் வாழ்வாதாரம் முற்றுமுழுதாகப் பாதிக்கப்படுகிறது.
இத்தகைய பிரச்சினைகள் குறித்து கடந்த ஏழு வருடங்களில் எவ்விதமான ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே நீங்கள் கூறுவது அர்த்தமற்ற பேச்சாகும்.
நாங்கள் தமிழ் மக்கள் இடங்களை ஒன்றாக்கவேண்டும் எனக் கூறுவதை நாட்டை பிரிக்கப் பார்க்கிறார்கள், பிரச்சினையை ஏற்படுத்தப் போகிறார்கள் என்று நீங்கள் கூறுவது மன வருத்தத்தைத் தருகிறது.
இத்தகைய பிரச்சினைகளைத் தீர்த்து அவரவர் தமது பிரச்சினைகளுக்கு முடிவு காணும் வகையில் அரசியல் யாப்பை மாற்றவேண்டிய அவசியம் உள்ளது. இதனால்தான் எங்களுடைய முன்மொழிவை முன்வைத்திருக்கின்றோமேயொழிய நாட்டைப் பிரிக்கவேண்டும் என்ற எந்தவிதமான எண்ணங்களும் எமக்கில்லை. நாங்கள் நட்டை இணைத்து வைப்பதற்கான எல்லா விதமான நடவடிக்கைகளையுமே எடுத்து வருகின்றோம்.
சமஷ்டி என்ற முறையில் நாங்கள் நாட்டைச் இணைத்துக் கொள்ளப்பார்கின்றோம். நாங்கள் பிரிவினைக்கான எந்தவிதமான எதிர்கேள்விகளையோ அல்லது எவ்விதமான நடவடிக்கைகளையுமோ எடுக்கவில்லை என்பதைத் திட்டவட்டமாக கூறிக்கொள்கின்றேன். அந்த அடிப்படையில் தான் குறித்த முன்மொழிவுகளை தயாரித்து இருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.
நாம் பிரிந்து செல்ல விரும்பவில்லை அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான கொள்ளை முன்மொழிவுகளை அறிமுகப்படுத்தி உரையாற்றிய முதலமைச்சர் தெரிவித்ததாவது,
பல நாட்களின் பிரயத்தனங்களின் பின்னர் இக் கொள்கை முன்மொழிவை உங்கள் முன் சமர்ப்பிக்கக் கூடியதாக இருப்பதையிட்டு மகிழ்வடைகின்றேன். குறைமாதக் குழந்தைபோல நாங்கள் உங்கள் முன் சமர்ப்பித்த ஆரம்ப சமர்ப்பணங்கள் நாடுபூராகவும் பவனிவந்து பலத்த விமர்சனங்களை ஏற்கனவே எதிர்நோக்கியுள்ளன. இவ் ஆவணமானது எம் எல்லோரின் எதிர்பார்ப்பையும் எடுத்தியம்பும் ஆவணமென்றே கூற வேண்டும்.
மூன்று குழுக்கள் அமைத்து அவற்றின் சமர்ப்பணங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதே இந்த வரைவு. ஆகவே நாம் யாவரும் அதன் ஆக்கியோரே. இது தனிப்பட்ட ஒருவரின் வரைவாகாது. நேற்றிரவு கூட எம்முள் மூவர் இரவு வெகுநேரம்வரை வரைவை சரிபிழை பார்த்துக் கொண்டுருந்தோம். எங்கள் வரைவை நீங்கள் யாவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
ஒருவரின் சமர்ப்பணங்களை நாங்கள் கைவிட வேண்டியதாய் இருந்தது. அவர் எமது இறையாண்மை பற்றி ஆவணத்தில் இடப்பெறச் செய்ய வேண்டும் என்று வாதாடினார். இறையாண்மை என்ற கருத்து பல்வேறு கருத்து வேற்றுமைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளடக்கப்பட்டதொன்று. போர்த்துக்கீசர் எம்மை வெற்றி கொண்டபோது எமது இறையாண்மை இல்லாதொழிந்தது. பின்னர் டச்சுக்காரர், ஆங்கிலேயர் என்று பலரின் அதிகாரத்தினுள் எமது இறையாண்மை சிக்கிக் கொண்டது. ஆனால் நாடு சுதந்திரம் அடைந்தபோது நாம் எமது இறையாண்மையைத் தனித்துவமாகக் கோராமல் மற்றைய மக்களுடன் கூட்டமாகச் சேர்ந்துஇலங்கை மக்களுக்கான இறையாண்மை என்ற கோரிக்கையினுள் அமிழ்த்திவிட்டோம்.
ஆகவே அது பற்றிப் பேசாமல் சர்வதேச ஒப்பந்தங்களில் காணுமாறு மக்கட் குழாம் தனது தனித்துவத்தைப் பேண எந்தவாறான தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் எமது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியே இந்த ஆவணத்தைத் தயாரித்துள்ளோம். கூடியவாறு முரண்பாடுகளையும் தீவிரப் போக்குகளையும் கட்டுப்படுத்தியுள்ளோம். தீவிரப் போக்கு என்பது நாம் எந்தக் கோணத்தில் இருந்து பார்க்கின்றோம் என்பதையொத்தது. எம்மைப் பொறுத்தவரை மிகவுஞ் சாதாரண கருத்து வௌியிடலாக உள்ள இந்த ஆவணம் தெற்கில் பலரைப் பேயாட்டம் ஆட வைத்துள்ளது. முதலமைச்சரைக் கைது செய்ய வேண்டும் என்று கோருகின்றது ஒரு கட்சி.
ஒரு பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்றால் முதலில் பிரச்சனையின் சகல பரிமாணங்களையுந் தெரிந்து கொள்ள வேண்டும். அறிவு பூர்வமாக அதனை அணுக வேண்டும். உணர்ச்சி பூர்வமாக அணுகுவதால் பிரச்சனைகள் மேலும் வலுவடைவன.
நாங்கள் எங்கள் ஆவணத்தில் கூறியிருக்கும் விடயங்கள் எவையும் புதியவையல்ல. காலஞ் சென்ற தந்தை செல்வா போன்றவர்கள் கூறியதையே நாங்கள் இங்கு வலியுறுத்தியுள்ளோம். பிரிவினைக்கு எதிர்மாறான ஒரு கருத்தையே முன்வைத்துள்ளோம். நாட்டினுள் அதிகார அலகுகளை உண்டாக்குவது அந்தந்த மக்கட் கூட்டங்கள் தத்தமது இடங்களில் தங்கள் விடயங்களைத் தாங்களே கையேற்று நிர்வகிக்கவே. இதுவே ஜனநாயகம்.
அண்மையில் திரு.தினேஸ் குணவர்த்தன அவர்கள் கூறிய ஒரு கூற்றுக்குச் சிங்களத்திலும் தமிழிலும் பதில் அளித்திருந்தேன். சமஷ்டி என்ற கருத்தை ஏதோ தடைசெய்யப்பட்ட ஒரு கருத்தாக அவர் கூறியமையினால் அவருக்கு சமஷ்டி என்பதற்கான ஒரு சிறிய உதாரணத்தைக் கொடுத்திருந்தேன். அவரின் தந்தை திரு.பிலிப் குணவர்த்தனாவை நான் தெரிந்திருந்தேன். திரு.பிலிப் குணவர்த்தனாவின் பாரம்பரிய வீட்டில் இந்திகஇ தினேஷ் போன்ற பிள்ளைகள் வளர்ந்து வந்திருப்பார்கள்.
அவர்கள் திருமணம் செய்த பின்னரும் அதே பாரம்பரிய வீட்டில் இருப்பது சரியில்லை என்று குறித்த பாரம்பரிய வீட்டுக் காணியில் தனி வீடுகள் கட்டிக் கொடுத்து சகோதரர்களில் ஒருவரான திரு.தினேஷ் அவர்களை தமது குடும்பத்துடன் அங்கொரு வீட்டில் குடியேற விடுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதனைப் பிரிந்து செல்வதாக எவரும் சொல்ல மாட்டார்கள். ஒரே பாரம்பரிய வீட்டில் தாய் தந்தையருடன் பிள்ளைகள் சுதந்திரமாய் வாழ்வதை எவரும் வரவேற்பார்களே ஔிய அதைப் பிரிவினை என்று கூற மாட்டார்கள். சமஷ்டியும் அவ்வாறுதான். நாட்டைப் பிரிக்காது நாம் தனித்து வாழும் அதே நேரம் சகல மக்களுடனும் சேர்ந்தே வாழ நாம் ஆசைப்படுகின்றோம். அதனை வலியுறுத்தியே எமது வரைவை நாம் யார்த்திருக்கின்றோம்.
நாம் பிரிந்து செல்ல விரும்பாது ஒருங்கிணைந்து வாழ முன்வந்துள்ளமையால் சிங்கள மக்கள் எங்களுக்குச் சகல ஒத்துழைப்பையும் இசைவையும் நல்க வேண்டும். முன்னர் 1958ல் சேர்ந்து வாழ ஒரு வழி அமைக்கப்பட்டது. பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்று கூட அன்று போல் எம்மையே முதலுதாரணமாகச் சிங்கப்பூர் போன்ற நாடுகள் எடுத்துக் காட்டியிருப்பன. லீ குவான் யூ அவர்கள் தான் சிங்கப்பூரை இலங்கை போல் மாற்றுவேன் என்று அன்று சூளுரை உரைத்திருந்தார்.
இன்று இந்த ஒரு சந்தர்ப்பத்தை நாங்கள் நழுவ விட்டால் இந்த நாடு சீரழிந்து போகும். சின்னாபின்னமாகி விடும். இது வெறும் வாய்ச்சொல் அல்ல. எந்த ஒரு இனமும் தொடர்ந்து அடிமைப்பட்டிருக்க விரும்ப மாட்டாது. யார் இல்லை என்றாலும் நாங்கள் இன்று ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் இராணுவத்தினரின் மேலாண்மையின் கீழ்த்தான் வாழ்கின்றோம். இந்தியாவின் அனுசரணையால் வடமாகாணசபை என்று ஒன்று கிடைத்தாலும் எம்மால் எம்மைச் செவ்வனே ஆள சட்டம் இடங் கொடுக்கவில்லை என்பதே யதார்த்தம். எனவே எமது மொழிஇ இடங்கள்இ மதங்கள்இ கலாசாரப் பின்னணி என்பன மற்றையோரால் சூறையாடப்படாமல் அவற்றைப் பாதுகாத்து சுமூகமாக எல்லோருடனும் சகஜ வாழ்வு வாழக்கூடிய விதத்திலேயே எமது வரைவை முன்வைத்துள்ளோம்.
அதனை முழுமையாக வாசிக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கின்றேன். ஏற்கனவே பிரதிகள் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிகின்றேன். உங்கள் கருத்துக்களைஇ ஆவணத்திலுள்ள ஏதேனும் முரண்பாடுகளை நீங்கள் எடுத்துக் கூறுங்கள்.
ஆங்கிலத் தமிழ் கருத்துருக்கள் அனுப்பப்பட்டாலும் சிங்கள மொழிபெயர்ப்புக்கள் இன்னமும் முடிந்த பாடில்லை. சிங்கள உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.
இதனை யாவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எமக்குண்டு. தமிழிலான கருத்துருவையும் ஆங்கிலத்திலான கருத்துருவையும் உங்கள் முன் இத்தால் சமர்ப்பித்து அரசாங்கத்தினிடம் கையளிக்க சபையின் அங்கீகாரத்தை வேண்டி நிற்கின்றேன்.
30ஆம் திகதி சம்பந்தனிடம் கையளிக்கப்படும்
இதேவேளை குறித்த வடமாகாண சபையின் அரசியல் தீர்வு முன்மொழிவானது நேற்றையதினம் வடமாகாண சபை அமர்வில் திருத்தங்களுக்காக முன்வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் குறித்த முன்மொழிவை எதிர்வரும் 30 ஆம் திகதி எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் வடமாகாண முதலமைச்சர்இ வடமாகாண சபையின் அவைத்தலைவர்இ வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இணைந்து வடமாகாண சபை உறுப்பினர்களின் முன்னிலையில் கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த முன்மொழிவுகள் ஜனாதிபதிஇ பிரதமர்இ சபாநாயகர் ஆகியோரிடமும் ஒப்படைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டை பிரிக்கும் எண்ணம் இல்லை, சந்தர்ப்பத்தை தவறவிட்டால் நாடு சீரழியும்; சி.வி. எச்சரிக்கை....
Reviewed by Author
on
April 23, 2016
Rating:

No comments:
Post a Comment