300 மொழிகள் பேசப்படும் லண்டன்....
'உலக பாராளுமன்றங்களின் தாய்' என்று இங்கிலாந்து பாராளுமன்றம் சிறப்பித்து அழைக்கப்படுகிறது.
உலகின் புகழ் பெற்ற நகரங்களில் லண்டனுக்கு தனிச்சிறப்பு உண்டு. அருங்காட்சியகங்கள், நினைவாலயங்கள், பூங்காக்கள், கட்டிடங்கள் என சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும், அற்புதங்கள் நிறைந்த லண்டன் நகரத்தை பற்றி பார்ப்போம்..!
பாரம்பரியமான நகரம்
இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த லண்டன் நகரம் கி.பி. 43-ல் ரோமானியர்களால் கட்டப்பட்டது. ஆங்கிலேய பேரரசின் தலைநகரமான லண்டனில் கலை, இலக்கியம், பொருளாதாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளங்கள் ஏராளமாக இருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகால பழமையை பாதுகாத்து வரும் லண்டன் நகரத்தில், அதிகபட்சமாக 300 மொழிகள் பேசும் மக்கள் வசிக்கின்றனர்.
பாராளுமன்ற இல்லம்
ஐக்கிய அரசின் முக்கியமான அலுவலகங்கள் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் பகுதியில் உள்ள பாராளுமன்றத்தை சுற்றிலும் உள்ளன. இது 'உலகப் பாராளுமன்றங்களின் தாய்' என அழைக்கப்படுகிறது. வெஸ்ட் மினிஸ்டர் மாளிகை என்றழைக்கப்படும் லண்டன் பாராளுமன்றத்தில் பிரபுக்கள் சபை, மக்கள் பிரதிநிதிகள் சபை என்ற இரண்டு சபைகள் உள்ளன. இத்துடன் மணிக்கூண்டு கோபுரம், விக்டோரியா கோபுரம் ஆகியவையும் இங்குள்ளன. 1834-ம் ஆண்டு லண்டனில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த இந்தக் கட்டிடம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பழமையான கட்டமைப்புடன் புதிய பொலிவுடன் கட்டப்பட்டது.
பிக்பென் கடிகாரம்
லண்டன் நகரின் அடையாளங்களில் ஒன்றாக புகழ்பெற்ற 'பிக்பென்' கடிகாரம் விளங்குகிறது. ஸ்டீபன் கோபுரம் என்று அழைக்கப்பட்ட இது, இதில் நிறுவப்பட்ட மிகப்பெரிய மணியின் அடையாளமாக பிக்பென் என்ற பெயர் பெற்றது. பிரிட்டிஷ் பாராளுமன்றம் இரவில் நடைபெற்றால், அதனை குறிக்கும் விதமாக இந்தக் கோபுரத்தின் உச்சி விளக்கு எரிய விடப்படுகிறது.
லண்டன் கோபுரம்
பகைவர்களிடமிருந்து நகரை பாதுகாப்பதற்காக 1070-ம் ஆண்டு இந்த லண்டன் கோபுரத்தை கட்டமைத்தனர். இதில் வெள்ளைக் கற்களால் கட்டப்பட்ட வெள்ளைக் கோபுரம் உட்பட, இருபது கோபுரங்கள் உள்ளன. இங்கு மன்னர்கள் பயன்படுத்திய ஆடை, ஆபரணங்கள், அரசர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், போர்களில் கைப்பற்றிய அன்னிய நாட்டு ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
பக்கிங்ஹாம் அரண்மனை
லண்டன் சுற்றுலா வாசிகளை கவர்ந்திழுக்கும் இடங்களில் 'பக்கிங்ஹாம் அரண்மனை'யும் ஒன்று. இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு சொந்தமான அரண்மனைகளில் ஒன்றான இதன் ஒரு பகுதியில் பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
லண்டன் விழிகள்
பழமைகள் நிறைந்த லண்டன் நகரில் புதுமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வது பிரமாண்ட ராட்டினம். லண்டன் நகரின் அழகை வானில் இருந்து பார்க்க வழிவகை செய்யும் இதனை 'லண்டன் ஐ' என்று அழைக்கிறார்கள். 1,700 டன் இரும்பினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட ராட்டினத்தை ஓராண்டாக கட்டி முடித்துள்ளனர். இந்த ராட்டினத்தில் சுற்றும்போது லண்டன் நகரை முழுமையாக பார்க்கலாம்.
பசும்புல் நகரம்
விண்ணை தொடுமளவுக்கு மிக உயரமான கட்டிடங்களுக்கு மத்தியில் லண்டன் நகரில் 'பச்சை நகரம்' என்று அழைக்கப்படும்
பூங்காக்களும் அமைந்துள்ளன. அவற்றுள் ஹைட் பூங்கா, கென்சிங்டன் பூங்கா, பச்சைப் பூங்கா, ஜேம்ஸ் பூங்கா போன்றவைமிகச் சிறப்பானவை. ஹைட் பூங்கா ஓடுபவர்கள், நடப்பவர்கள், நீந்துபவர்கள் மற்றும் குதிரைச் சவாரி செய்பவர்கள் ஆகியோருக்கு மிகவும் விருப்பமானது. 360 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவை சுற்றிலும் ஏராளமான பூங்காக்கள் அமைந்துள்ளன.
கோபுர பாலம்
லண்டனில் அமைந்துள்ள கோபுர பாலம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதுவும் லண்டன் நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பிரமாண்டமான இரண்டு கோபுரங்களை இணைக்கும் விதமாக அமைக்கப்பட்டிருப்பதால் இதனை 'கோபுர பாலம்' என்று அழைக்கிறார்கள். 200 அடி நீளமுள்ள இந்த பாலம் பெரிய கப்பல்கள் கடக்க வேண்டிய தருணத்தில் பிரிந்து இணையும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
நினைவுச் சிலை
இங்கிலாந்து அரசு 1876-ம் ஆண்டு விக்டோரியா ராணியின் கணவர் ஆல்பர்ட் நினைவாக 175 அடி உயரம் உள்ள கட்டிடத்தில் 14 அடி உயர ஆல்பர்ட் சிலையை அமைத்துள்ளது.
'டிராபல்கர்' சதுக்கம்
லண்டனின் மையப்பகுதியில் உள்ள மிகப்பெரிய சதுக்கம் இது. இதன் மையத்தில் நெல்சன் தூண் அமைக்கப்பட்டுள்ளது. டிராபல்கர் போரில் பிரெஞ்சுப் படையை வீழ்த்திய தளபதி நெல்சனின் நினைவாக இந்த தூணை அமைத்திருக்கிறார்கள். 178 அடி உயரத்துடன் அமைக்கப்பட்டிருக்கும் இத்தூணின் உச்சியில் 18 அடி உயரமுள்ள நெல்சன் சிலை இடம்பிடித்துள்ளது. தூணின் பீடத்தை நான்கு சிங்கங்கள் தாங்கி நிற்கின்றன. இந்த சதுக்கத்தின் அருகில் தேசிய ஓவிய அரங்கு ஒன்றும் உள்ளது. இதில் லியோனார்டோ டாவின்சி போன்ற புகழ்பெற்ற ஓவியர்கள் வரைந்த 2,000-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
300 மொழிகள் பேசப்படும் லண்டன்....
Reviewed by Author
on
May 23, 2016
Rating:

No comments:
Post a Comment