அண்மைய செய்திகள்

recent
-

7 வது படித்தவர்... 210 பஸ்களுக்கு முதலாளி!


படித்து பட்டங்கள் பல பெற்றவர்கள்தான் புதுமையாக சிந்தித்து ,தொழிலில் வெற்றிபெறமுடியும் என்பதில்லை. பள்ளிக்கல்வியை முழுமையாக முடிக்காதவர்கள் கூட வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக விளங்குகிறார்கள் என்பதற்கு மற்றொரு உதாரணமாக வலம் வருகிறார் இந்த தொழிலதிபர்.

மூன்று ஆங்கில எழுத்துக்களை சொன்னாலே போதும், தமிழகம் மட்டுமல்ல தென்மாநிலங்களில் உள்ள மக்களுக்கும் அந்த சொகுப்பேருந்துகள்தான் நினைவுக்கு வரும். அந்தப் பேருந்துகளை இயக்கும் கே.பி.என். டிராவல்ஸ் அதிபர் கே.பி.நடராஜன், இன்றைய தேதியில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தலா ஒன்றரைக்கோடி ரூபாய் மதிப்புள்ள 210 சொகுசு பேருந்துகளுக்கு சொந்தக்காரர்.

அதோடு 300 பார்சல் லாரிகளும் நாடுமுழுவதும் சுமைகளை ஏற்றி இறக்கி வலம் வந்துகொண்டிருக்கின்றன. இவ்வளவு பெரிய போக்குவரத்து சாம்ராஜ்யத்தை நிறுவி, வெற்றிகரமாக நடத்திவரும் கே.பி.நடராஜன், பெரிய பிசினஸ் படிப்பு எதுவும் படித்தவர் அல்ல. இவர் படித்தது வெறும் ஏழாம் வகுப்பு மட்டும்தான். ஆனால், அடைந்த வெற்றிகள் ஏராளம்.

தனது வெற்றிக்கதையை சொல்கிறார் நடராஜன்....

'' நான் பிறந்து வளர்ந்தது சேலம், பெரியபுத்தூர் கிராமம். அப்பா பொன்மலைக்கவுண்டர் நாலரை ஏக்கர் நிலம் வைத்திருந்த சாதாரண விவசாயி. எனக்கு விவசாயத்தில் பெரிய நாட்டம் இல்லை. சிறு வயதில் இருந்தே மோட்டார் தொழிலில் ஈடுபடவேண்டும் என்கிற ஆசை எனக்கு அதிகம். ஏழாம் வகுப்பு தாண்டியதும் பள்ளிப்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். சில வருடங்கள் அப்பாவுக்கு துணையாக விவசாய வேலைகளை செய்தேன். ஒரு கட்டத்தில் என்னுடைய மோட்டார் தொழில் கனவு நிறைவேறும் சூழல் ஏற்பட்டது. 1968 ம் வருடம் எனது உறவினர்கள் சிலருடன் சேர்ந்து பஸ் ஒன்றை வாங்கினேன். அதுக்கு 'வெங்கடேஸ்வரா பஸ் சர்வீஸ்' என்று பெயர் வைத்து கோவை டூ பெங்களூரு ட்ரிப் அடித்தேன்.

அந்த ஒற்றைப் பஸ்ஸின் ஓட்டுநரும் நான்தான், கிளீனரும் நான்தான். இப்படியாக தனி ஒருவனாக பஸ் போக்குவரத்தை நடத்தினேன். அடுத்த சில வருடங்களில் பங்குதாரர்கள் தங்கள் பங்கை பிரித்துக்கொண்டு வேறு தொழில்களுக்கு போய்விட்டார்கள். எனக்கு மோட்டார் தொழிலை விட மனதில்லை. என்னிடம் இருப்பில் இருந்த பணம் போதவில்லை. வெளியில் தெரிந்தவர்களிடம் கொஞ்சம் கடன் வாங்கி 1969 ல் ஒரு புதிய பஸ் ஒன்றை வாங்கினேன். எனது நெருங்கிய உறவினரின் குழந்தை பெயர் சிவக்குமார். அந்த குழந்தையின் பெயரையே புதிய பஸ் கம்பெனிக்கு வைத்தேன். 'சிவக்குமார் பஸ் சர்வீஸ்' என்கிற பெயரில் இயங்கிய அந்தப் பஸ்ஸின் டிரைவரும் நான்தான்.

மதுரை டூ பெங்களூரு ரூட்டில் பேருந்தை இயக்கி, அந்த பஸ் கம்பெனியை 3 வருடங்களாக வெற்றிகரமாக நடத்தினேன். கிடைத்த லாபத்தில், தொடர்ந்து இன்னொரு பஸ் வாங்கினேன். எனது தாத்தா குப்பண்ணகவுண்டர் பெயரின் முதல் எழுத்தான 'கே' இன்ஷியலையும், எனது தகப்பனார் பொன்மலைக்கவுண்டர் பெயரில் இருந்து 'பி' எழுத்தையும், என்னோட பெயரில் இருந்து 'என்' ஆங்கில எழுத்தையும் எடுத்து இணைத்து, '1972 கே.பி.என்.' என்கிற பெயரைவைத்து, டிராவல்ஸ் கம்பெனி தொடங்கினேன்.

'ஏ.பி.சி 7581' என்கிற ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட அந்த கே.பி.என். டிராவல்ஸ் பஸ், திருநெல்வேலி - பெங்களூரு இடையே இயக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு வருடங்கள் நடந்த போக்குவரத்தை தொடர்ந்து, 1974ம் வருடத்தில், கே.பி.என்.டிராவல்ஸின் இரண்டாவது பஸ் இயக்கப்பட்டது.1976 ல் மூன்றாவது பஸ்ஸை வாங்கினேன். மூன்று பேருந்துகளும் லாபகரமாக ஓடின.

பயணிகளிடம் நாங்கள் காட்டிய அன்பான அணுகுமுறை, சரியான நேரத்தில் புறப்பட்டு ஊரை சென்றடைதல், பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதம் உள்ளிட்ட விஷயங்களில், எங்கள் கம்பெனி டாப்கியரில் போகத்தொடங்கியது. இதில் ஒரு விஷேசம் என்னவென்றால், ஒரு பஸ் மட்டும் இயக்கிய பொழுது, நான் மட்டும்தான் டிரைவர். இரண்டாவது பஸ்ஸை ஓட்ட, இன்னொரு டிரைவரை வேலையில் சேர்த்தேன். படிப்படியாக கம்பெனி வளர்ந்து, ஒரு கட்டத்தில் 10 வண்டிகளுடன் உயர்ந்தது. அப்படி 10 வண்டிகளுக்கு முதலாளி என்கிற அந்தஸ்து கிடைத்தபோதும், அதில் ஒரு வண்டியின் டிரைவராக நான்தான் இருந்தேன்.

அடுத்தடுத்து தொலைதூர பயணிகளை ஈர்க்கும் விதமாக சொகுசு பஸ்களை அறிமுகம் செய்தேன். குளுகுளு வசதி செய்யப்பட்டதும், சாய்மானம் கொண்ட மெத்தை இருக்கைகளை உடைய பஸ்களை வடிவமைத்தோம். அவற்றுக்கு பயணிகளிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பல பஸ்களை இயக்கினோம்.

இந்தியாவில் படுக்கை வசதி கொண்ட தொலைதூர பஸ்ஸை அறிமுகம் செய்தது எங்கள் நிறுவனம்தான்.இப்போது எங்கள் நிறுவனத்தின் 210 பேருந்துகளில், 95 படுக்கை வசதி கொண்டவை. இன்று நாட்டின் எல்லா நகரங்களிலும் எங்கள் நிறுவனத்திற்கு பதிவுக் கிளைகள் உண்டு. நாட்டின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும், கே.பி.என்.டிராவல்ஸில் பயணம் செய்ய ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளமுடியும்.

ரயில் பயணிகளுக்கு ரயிலுக்குள் உணவு கிடைப்பது போல, எங்கள் பஸ்ஸில் பயணிப்பவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்திட உள்ளோம். எதிர்காலத்தில் 'கே.பி.என். ஏர்லைன்ஸ்' என்கிற பெயரில் குறைந்த கட்டணத்தில் விமானச் சேவை வழங்கும் ஒரு திட்டத்தைப் பற்றிய யோசனையும் இருக்கிறது.

ஏழாம் வகுப்பு வரை மட்டும் படித்த நான் 17 வயதில் கிளீனர்,18 வயதில் டிரைவர், 20 வயதில் ஒரு பஸ்ஸின் பங்குதாரர், 24 வயதில் கே.பி.என்.டிராவல்ஸ் என்கிற கம்பெனியின் முதலாளி என்று படிப்படியாக வளர்ந்து, இன்று 510 வாகனங்களை வைத்து இயக்கி வருகிறேன். நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் எங்கள் பஸ்ஸில் பயணிக்கிறார்கள். கோடிக்கணக்கான ருபாய் சரக்குகள் நாடெங்கிலும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதை நிர்வாகம் செய்ய, என்னிடம் நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் வேலை பார்க்கிறார்கள்" என்ற நடராஜன்," அன்றைக்கு ஏதோ ஒரு ஆர்வத்தில் படிப்பை பாதியில் கை விட்டேன். இன்னும் கூட படித்திருக்கலாம் என்கிற ஆதங்கம் சிலசமயம் எழுவதுண்டு. இன்று தென் மாநிலங்களுக்கு மட்டும் பஸ் போக்குவரத்தை நடத்திவரும் நான், பட்டப்படிப்பை படித்திருந்தால், இன்னும் நன்றாக பஸ் போக்குவரத்தை நடத்தியிருக்கலாம் என்று எப்போதாவது நினைப்பதுண்டு. ஆனாலும் வாழ்க்கையில் தெரிந்துகொண்ட அனுபவக் கல்விதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி உள்ளது என்பதையும் மறுபதற்கில்லை.'' என சொல்லி முடித்தார்.

-ஜி.பழனிச்சாமி
7 வது படித்தவர்... 210 பஸ்களுக்கு முதலாளி! Reviewed by NEWMANNAR on May 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.