நல்லிணக்க ஆட்சி நடைபெறுவதாக கூறும் கிழக்கு மாகாணசபை ஏன் சமஸ்டி பற்றி தீர்மானம் நிறைவேற்றவில்லை: யோகேஸ்வரன்
தமிழ் பேசும் மக்களுக்கான நிரந்தரத் தீர்வு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த தாயகத்தில் சமஷ்டி அடிப்படையில் அமைய வேண்டும் என வடமாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியது போன்று கிழக்கு மாகாண சபையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டு கிரான் கருணா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கிராமிய கலாசார விளையாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற்று ஒரு சுமுகமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்தில் தமிழர்கள் பெரும்பங்கு வகித்துள்ளார்கள்.
Go to Videos
யோகேஸ்வரன் கேள்வி
அதனூடாக கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோடு இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு அமைச்சுக்களையும் பிரதி தவிசாளர் பதவியையும் பெற்று ஆட்சியில் பங்காளர்களாக உள்ளோம் என யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணசபையின் விளையாட்டு அமைச்சு எங்களிடம் இருக்கின்ற போதிலும் எமது பிரதேசத்தில் விளையாட்டுத்துறைக்கு போதிய வசதிகளைப் பெற்றுக்கொடுக்க முடியாதவர்களாகவே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணசபையில் நல்லாட்சி நடைபெறுவதாக மாகாணசபையிலுள்ள பிரதான கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸ் ஆகியன கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதனை தாம் வரவேற்கின்றோம். வடக்கு, கிழக்கினைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் பேசும் மக்களுக்காக நீடித்து நிலைத்திருக்கக் கூடிய ஒரு சிறந்த அரசியல் தீர்வை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறது.
வட மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி இருப்பதன் காரணமாக வடக்கு, கிழக்கு இணைந்த தாயகத்தில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு வழங்கப்பட வேண்டும் என ஒரு பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றியுள்ளார்கள்.
கிழக்கு மாகாணசபையில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்த ஆட்சி நடைபெறுவதை உறுதிப்படுத்த இணைந்த வடகிழக்கு மாகாணத்துக்கு சமஷ்டி ஆட்சி முறை வழங்கப்பட வேண்டும் என வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது போன்று கிழக்கு மாகாணசபையும் நிறைவேற்ற வேண்டும் என யோகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்த ஆட்சி நடாத்துகிறோம் என மேடைகளில் கூறுவதில் அர்த்தமில்லை. வட மாகாணசபை போன்று முதுகெலும்புள்ள மாகாணசபையாக கிழக்கு மாகாணசபை இயங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கும் விடயத்தில் தமிழ் - முஸ்லிம் பிரதிநிதிகள் தமது சொந்த விருப்பங்களை விடுத்து தமிழ் பேசும் சமூகம் என்ற ரீதியில் இணைந்து செயற்படவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் பேசும் சமூகம் இரண்டாக பிரிவதற்கு விரும்பவில்லை.
கடந்த காலங்களில் இரு சமூகங்களிடையே பல கசப்பான சம்பவங்கள் நடந்துள்ளன. இனி இவ்வாறான ஒரு சூழல் உருவாவதற்கு நாம் இடமளிக்க கூடாது. எமக்கு கிடைக்கின்ற அரசியல் தீர்வானது வடக்கு கிழக்கிலே வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் அமைய வேண்டும். ஆனால் இன்று சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்துவிடக் கூடாது என்பதில் மிகத் தீவிரமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கு இணையக்கூடாது என்பதில் மும்முரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களிடையே இன முரண்பாட்டினை ஏற்படுத்தி தமது அரசியலை கொண்டு செல்வதில் தீவிரமாக இருக்கின்றார்கள். இந்த நிலை தொடருமாகவிருந்தால் இரண்டு இனங்களும் ஒருவரை ஒருவர் விரோதிகளாக கருதுகின்ற நிலைமை ஏற்படும். இதற்கு தமிழ் - முஸ்லிம் மக்கள் இடமளிக்க கூடாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தவொரு அரசியல்வாதியும் முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கு எதிராகச் செயற்படவில்லை. நாங்கள் எங்களுடைய அரசியல் நடவடிக்கைகளை எமது மக்களுடன் மேற்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
சிலர் தமிழ் மக்கள் மத்தியில் வாக்குகளை மட்டும் பெற முயல்கிறார்கள் இதனை அனுமதிக்க முடியாது. தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுத்ததாக சில அரசியல்வாதிகள் தம்பட்டம் அடிக்கிறார்கள் இதில் எத்தனை வேலை வாய்ப்புக்கள் விற்கப்பட்டன என்பது யாருக்குத் தெரியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆட்சி நடைபெறுவதாக கூறும் கிழக்கு மாகாணசபை ஏன் சமஸ்டி பற்றி தீர்மானம் நிறைவேற்றவில்லை: யோகேஸ்வரன்
Reviewed by Author
on
May 02, 2016
Rating:

No comments:
Post a Comment