அண்மைய செய்திகள்

recent
-

'ஆம் இலங்கை ராணுவம் அட்டூழியம் செய்தது” - ஒப்புக்கொண்ட இலங்கை அமைச்சர்-Photos

அந்தப் பேரவலம் நடந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் அந்தக் கதறல்கள், அழுகைச் சத்தம் நீதியின் பால் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரின் செவிகளிலும் கேட்டுக் கொண்டிருக்கிறது. 

முத்துக்குமார் எரியூட்டப்பட்ட அன்று, மூலக்கொத்தளம் இடுகாட்டிற்கு சென்றவர்களின் நாசியில் அந்த பிணவாடை இன்னமும் அடித்துக் கொண்டுதான் இருக்கிறது. பலர் இன்னும் குற்ற உணர்வில்தான் நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த தீவு நாட்டிலும், ஆட்சி மாறினாலும், இன்னும் பாதிக்கப்பட்ட மக்களின் மனக் காயங்கள் ஆறவில்லை. இன்றும், அம்மக்கள் உலக பொது சமூகத்திடம் நீதி வேண்டிதான் நின்று கொண்டிருக்கிறார்கள்.

அங்கு கடைசி போரின்போது இலங்கை ராணுவம் நிகழ்த்திய அட்டூழியங்கள் குறித்து சேனல் 4, வீடியோ ஆதாரம் வெளியிட்டு இருந்த போதும், இத்தனை நாள் இலங்கை அரசு மெளனம் சாதித்தே வந்தது. மெளனம் சாதித்து வந்தது மட்டுமல்லாமல், 'அந்த வீடியோ எதுவும் உண்மையல்ல. அது ஜோடிக்கப்பட்டது' என்றே மறுத்து வந்தது.


இத்தருணத்தில் இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் மங்கள சமரவீரா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவிற்கு எழுதி உள்ள மனம் திறந்த கடிதம், அங்கு நடந்த போர் விதி மீறல்களை ஒப்புக் கொள்வது போல் அமைந்துள்ளது. ஆம். அந்த சேனல் 4 வீடியோவில் உள்ள அனைத்தும் உண்மை என்று ஒப்புக் கொண்டுள்ளது.




இதுதான் கடிதத்தின் சாரம்

ஆம். மங்கள சமரவீரா ராஜபக்சேவிற்கு அண்மையில் எழுதி உள்ள கடிதத்தில், “உங்களை நான் 1988-ம் ஆண்டு சந்தித்தது, இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது. அப்போது நான் மதாரா பகுதி சுதந்திரா கட்சி ஒருங்கிணைப்பாளராக இருந்தேன். அப்போது நீங்கள் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய உணர்ச்சி மிகுந்த பேச்சைக் கேட்டு, உங்களை நான் மனித உரிமைக் காவலர் என்று நினைத்தேன். ஆனால், உங்களது நடவடிக்கைகள், அப்போது நீங்கள் பேசியதெல்லாம் உங்களது அரசியல் நலனுக்கானது என்பதை உணர்த்துகிறது...”

1990 ம் ஆண்டு இலங்கை பாராளுமன்றத்தில் நீங்கள், “இந்த நாடு அடிப்படை மனித உரிமைகளை மீறினால், நாம் ஜெனீவாவிற்கு மட்டுமல்ல, நீதிக்காக உலக நாடுகள் எதற்கு வேண்டுமானாலும் செல்வோம். ஏன் நரகத்திற்கு சென்று கூட நீதி கோருவோம்...” என்று பேசி இருந்தீர்கள். ஆனால், நீங்கள் பதவியேற்ற உடன், நீங்கள் அதிகாரப் போதையில் திளைக்க ஆரம்பித்தீர்கள். நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது, உங்களுக்கு நண்பனாக ஜெனீவாவையும், உலக சமூகத்தையும் காண்பித்துக் கொண்டீர்கள். ஆனால், நீங்கள் பதிவியேற்றபோது, அதே உலக சமூகத்தையும், ஜெனீவாவையும் புலிகளின் ஆதரவாளராக சித்தரித்தீர்கள்.

2007 ம் ஆண்டு, நீங்கள் அதிபராக பொறுப்பேற்றபோது, 13 பக்க கடிதத்தை உங்களுக்கு அனுப்பி இருந்தேன். அதில், ' உங்களது கோட்பாடுகள் ஜனநாயகத்தை சிதைப்பதாக, நல்லாட்சிக்கான அடிப்படை தத்துவங்களை மீறுவதாக உள்ளது. இது நம் தேசத்தை சிதைத்துவிடும்' என்று குறிப்பிட்டு இருந்தேன்.

கடந்த அக்டோபரில் கொண்டுவந்த ஜெனீவா தீர்மானத்தை நாங்கள் ஆதரித்ததற்காக, நீங்களும் உங்கள் ஆதரவாளர்களும், இலங்கை அரசை குற்றம் சுமத்துகிறீர்கள். ஆனால், உங்களுக்கு நன்கு தெரியும் அந்த தீர்மானம் லங்காவின் வெற்றி என்று, நமது அயல் நாட்டுக் கொள்கையின் வெற்றி என்று. நீங்கள் ஆட்சி செய்தபோது ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் நமது தேசம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக கவலை தெரிவித்தன. ஆனால் இப்போது அந்த தேசங்களே, இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறது" என்று
நீள்கிறது.

மேலும் சேனல் 4 வீடியோ பற்றியும், அதன் உண்மை தன்மை பற்றியும் அதில் குறிப்பிட்டுள்ளார் மங்கள சமவீரா.

“சேனல் 4 வீடியோ ஆதாரம் நமக்களிக்கப்பட்டபோது, அதன் உண்மை தன்மையை ஆராய உலகத்தில் சிறந்த தடவியல் நிபுணர்களிடம் கொடுக்கலாம் என்றேன். ஆனால், அப்போது நீங்கள் அதை மறுத்து, ராணுவம் பரிந்துரைத்த தடவியல் நிபுணர்களிடம் கொடுத்தீர்கள். உங்களது நோக்கம் அந்த வீடியோ உண்மை அல்ல என்று நிறுவுவது மட்டுமாகவே இருந்தது. ஆனால், அந்த வீடியோவில் உள்ளது உண்மை மட்டுமல்ல, அந்த அநீதிகளை கண்டு அதிர்ச்சியுற்ற நம் ராணுவத்தினராலேயே அந்த வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

அதாவது, அந்த தீவு நாட்டில் நடக்கும், கட்சி அரசியல் சண்டையில், ஒரு முக்கிய விஷயத்தை அந்த நாட்டின் அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். ஆம். சேனல் 4 அளித்த வீடியோவில் உள்ள அனைத்தும், அப்பாவி தமிழ் மக்களை கையைக் கட்டி சுடுவது, மோசமாக வதைப்பது போன்ற காட்சிகளே. இவை அனைத்தும் போர்க் குற்றங்கள். அந்த வீடியோவில் உள்ளது அனைத்தும் உண்மை என்று சொல்வதன் மூலம், அங்கு போர்க் குற்றங்கள் நடந்ததை இலங்கை அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளார்.

'ஆம் இலங்கை ராணுவம் அட்டூழியம் செய்தது” - ஒப்புக்கொண்ட இலங்கை அமைச்சர்-Photos Reviewed by NEWMANNAR on May 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.