அண்மைய செய்திகள்

recent
-

கிங் ஆஃப் பாப் மைக்கேல் ஜாக்சன் ஜூன் 25 நினைவு தின சிறப்பு..


மைக்கேல் ஜாக்சன் பாப் உலகின் மன்னன் ,நாடுகளை கடந்த கலைஞன்,இசையாலே இதயங்களை கரைத்தவர் . மைக்கேல் ஜாக்சன், இந்தியானா மாகாணத்தின் கேரி நகரில் பத்து குழந்தைகள் உள்ள அமெரிக்க ஆப்ரிக்க குடும்பத்தில் ஏழாவது பிள்ளையாக பிறந்தார் ..

அப்பா ஸ்டீல் ஆலையில் வேலைப்பார்த்து வந்தார் . மொத்தம் ஐந்து சகோதரிகள்,நான்கு சகோதரர்கள்,ஒரு சகோதரன் பிறந்த சில காலத்திலேயே இறந்து விட்டான். ஜாக்சனின் இளமைக்காலம் மகிழ்ச்சிகரமானதாக இல்லை . அவரின் தந்தை ஜோசப் ரொம்பவும் கண்டிப்பானவர். அடிக்கடி பெல்ட் அடி பட்ட அனுபவம் ஜாக்சனுக்கு உண்டு .அப்பாவை பார்த்தாலே வாந்தி எடுத்து விடுகிற அளவிற்கு அப்பாவின் மீது பயம் உண்டு . ஆனால் தான் வாழ்க்கையில் பெரிய அளவில் மிளிர்ந்ததற்கு காரணம் அவரின் அப்பாவின் கண்டிப்புதான் என நினைவு கூர்வார்.

சுட்டிப்பையனாக ஐந்து வயதிலேயே மேடை ஏறி பாடல் பாடிய அனுபவம் உண்டு ஜாக்சனுக்கு. தன் அண்ணன்மார்கள் நடத்தி வந்த ஜாக்சன் ப்ரோதேர்ஸ் இசைக்குழுவில்தான் முதன்முதலில் பாடினார் . அந்த குழுவில் இரண்டே வருடத்தில் முன்னணி பாடகராகவும் உயர்ந்தார் ,அப்பொழுதே நன்றாக நடனமும் ஆடுவார் .இளம் வயதிலேயே குறும்புக்காரர். அக்காவின் ஆடைக்குள் சிலந்திகளை போட்டு விட்டு வேடிக்கை பார்ப்பார்.

இளம் வயதில் பல்வேறு பாடல்களை பாடி மாபெரும் புகழை இவர்களின் இசைக்குழு பெற்றது .அதன் விளைவாக மொடவுன் ரெகார்ட்ஸ் எகிற இசைக்குழுமம் இவர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டது. அங்கே பல்வேறு ஹிட்களை தந்தார்கள் இவர்கள் .அமெரிகாவின் டாப் நாற்பது ஹிட்களில் தொடர்ந்து அவர்களின் பாடல்கள் இடம்பெற்றன .அதில் ஜாக்சனின் ஆதிக்கமே அதிகம். எனினும் மூன்றே ஆண்டுகளில் அவர்களுடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டார்கள்.

படைப்பாற்றலுக்கும் ,புதிய முயற்சிகளுக்கும் இடம் தராததே காரணம் என ஜாக்சன் பின்னாளில் இந்த பிரிவை பற்றி குறிப்பிட்டார் இதற்கு பிறகு எபிக் ஸ்டுடியோவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார் ஜாக்சன். இங்கேதான் கிவின்சி ஜோன்சின் அறிமுகம் கிடைத்தது .பல்வேறு ஆல்பங்களை அவரே பிறகு தயாரித்தார் . அவர் செல்லமாக ஜாக்சனை ஸ்மெல்லி என அழைப்பார். ஓயாது உழைக்க வேண்டும் என்பதை இந்த காலங்களில் உணர்ந்தார் மைக்கேல் ஜாக்சன் .

தன் முதல் ஐந்து இசைக்கோர்வைகளில் தன் குரல் மின்னி, மவுஸ் மாதிரி இருந்ததாக தன்னையே சுய விமர்சனம் செய்துகொண்டார். ஜாக்சன் ஏகத்துக்கும் உடலளவிலும் பாதிக்கப்பட்டவர் .நடனப் பயிற்சியின் பொழுது மூக்கையும் உடைத்து கொண்டார் . பெப்சிக்காக ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட பொழுது தீப்பற்றி உடல் எல்லாம் பலத்த தீக்காயங்கள்.  விட்டிலிகோ எனும் உடல் நிறமிக் குறைபாடு தாக்கியது . அத்தனையும் அடிக்கடி அறுவை சிகிச்சைக்கு உள்ளாக்கியது. என்றாலும் இவை எதுவும் அவர் இசை நிகழ்வில் வெளிப்பட்டது இல்லை. ரோபோட் டான்ஸ் மூன் வாக் என இவர் அறிமுகப்படுத்திய நடன யுக்திகள் இளைஞர்களை இன்றைக்கும் கட்டி போடுகின்றன.

புவி ஈர்ப்பு விசையை மீறி நினைத்தவாறு கால்களை நகர்த்த உதவும் பூட்சை தானே உருவாக்கினார் .அதன் பேடன்ட்டை பதிவும் செய்து கொண்டார். இதை அணிந்து கொண்டு முன்பக்கம் சாதாரணமாக வளைவதை விட அதிகமாக வளைய முடிந்தது அவரால் .

இதனால் தான் ரப்பரை போன்ற வளைக்கிற ஸ்டெப்ஸை ஜாக்சன் போட முடிந்ததாக சொல்வார்கள்.
மைக்கேல் ஜாக்சனின் வாழ்வில் மறக்கவே முடியாத ஆண்டு 1982.  இந்த வருடம்தான் ஸ்பீல்பெர்கின் ஈடி படத்திற்க்கான ஆடியோ கோர்வையை தன் குரலில் பதிவு செய்தார் ஜாக்சன். இதற்காக கிராமி விருது அவருக்கு கிடைத்தது.

அதே வருடம் வெளிவந்த ஜாக்சனின் த்ரில்லர் வெளிவந்தது. இன்றைக்கும் உலகில்;அதிகமாக விற்கும் இசை ஆல்பம். இசை உலகின் மன்னன் என ஜாக்சனை இதற்கு பின் தான் கொண்டாடத்தொடங்கியது உலகம், த்ரில்லர் ஆல்பத்திற்காக எட்டு கிராம்மி விருதுகளை ஜாக்சன் அள்ளினார் . இது முப்பது ஆண்டுகளாக அப்படியே உள்ள சாதனை.

எய்ட்ஸ் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஏராளமான நிதி திரட்டி உள்ளார். தன்னுடைய மேன் ப்ரம் தி சிங்கள் பாடலின் மூலம் வந்த வருமானத்தை ஆதரவற்றோருக்கு தந்ததில் தொடங்கியது இது. கடைசி வரை ஏழை மக்களின் துயரங்களை நினைவு படுத்தும் வகையில் கருப்பு பட்டை ஒன்றை கையில் அணிந்து இருந்தார் . ஆப்ரிக்காவின் பகுதிகளுக்கு பயணம் போன பொழுது மக்களோடு ஏகத்துக்கும் அளவளாவி அன்பு காட்டினார்.அவரை தங்கள் மண்ணின் மைந்தன் என கொண்டாடினார்கள் அவர்கள் , டிஸ்னி நிறுவனத்திற்காக கேப்டன் EO என்கிற குழந்தைகள் படத்தில் நாயகனாக நடித்து உள்ளார் . அந்த படம் அவரின் மரணத்திற்கு பின் மீண்டும் அமெரிக்காவின் டிஸ்னி லாண்ட்களில் திரையிடப்பட்டது .தன் வீட்டில் மிகப்பெரிய தீம் பார்க் ஒன்றை உருவாக்கி அதில் பல்வேறு ஆதரவற்ற குழந்தைகளை விளையாட செய்தார் . அதற்கு முக்கிய காரணமாக எனக்கு கிடைக்காத அழகான இளமைக்காலம் இவர்களுக்கு வைக்கட்டுமே என்றார் தன் சுயசரிதயை மூன்வாக்கர் என்கிற தலைப்பில் வெளியிட்டார் .அதில் கண்ணீர் ததும்ப தன் வாழ்வில் பட்ட துன்பங்களை சொல்லி இருப்பார் .1992 இல் வில் சேரில் அமர்ந்தப்படியே விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில் பாடிய பாடல் தான் “ஹீல் தி வேர்ல்ட்”(உலகின் காயத்தை ஆற்றுவோம் )இசை நிகழ்வுக்கான பயிற்சின் பொழுது ஏற்பட்ட காயத்தால் இப்படி வீல் சேரில் அமர்ந்து பாட நேரிட்டதாக சொன்ன பொழுது உலகம் உணர்ச்சி வசப்பட்டது .

அமெரிக்காவின் நூலகம் ஒன்றில் பல காலமாக ஜாக்சன் புத்தகங்களை திரும்ப தராததால் பத்து லட்சம் டாலர் அளவிற்கு அபராதம் உயர்ந்தது .அந்த நூல்களை அவரின் கையொப்பத்தோடு திருப்பி தந்தால் மட்டுமே போதும் என அந்த நூலகம் அறிவித்தது ரகளையான க்ளைமாக்ஸ் ஜாக்சனின் உலகின் காயத்தை ஆற்றுவோம் ஐநா சபையால் உலக பாடலாக அங்கீகரிக்கப்பட்டது .அவரின் எர்த் சாங் உலக சுற்றுச்சூழல் தினத்தின் அதிகரப்போர்வ பாடலானது .தென் கரோலினா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மாநில கீதமும் மைக்கேல் ஜாக்சனின் படைப்பு தான் வாழ்கையின் இறுதி காலங்களில் கடன் சுமையால் பெரிதும் கஷ்டப்பட்டார் .

குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உள்ளக்கியதாக வழக்குகள் கோர்ட் வரை சென்றன. அவர் அவை எல்லாவற்றில் இருந்தும் விடுதலை பெற்றார்.  அந்த கடன்களை தீர்க்கவும் ,ரசிகர்களை சந்திக்கவும் ஐம்பது இசை நிகழ்வுகளை உலகம் முழுக்க நடத்த திட்டமிட்டார் .அதற்கான பயிற்சியில் இருக்கும் பொழுது அதிகமாக வழி நிவாரணியான மருந்தை டாக்டர் தர, உயிர் பிரிந்தது ஜாக்சனுக்கு. .

உலகமே கண்ணீரால் அந்த இசை நாயகனுக்கு பிரியா விடை கொடுத்தது . உலகை எவ்வளவோ உற்சாகப்படுத்தினாலும் தன் வாழ்க்கை முழுக்க சோகத்தால்தான் நிரப்பிக்கொண்டார் கிங் ஆப் பாப். தன்னைப்பற்றி கவலை கொள்ளாமல் சுற்றி இருப்போருக்காக ஓயாமல் ஓடி ஓடி அவர் ஓய்ந்து போனது கசப்பான க்ளைமேக்ஸ்.

“எவ்வளவு செல்வம் இருக்கிறது என்பது முக்கியமில்லை. உன்னுடைய இதயத்தால் அன்பால் பிறரை எவ்வளவு நிறைக்கிறாய் என்பதே முக்கியம் !” என்று சொன்ன மைக்கேல் ஜாக்சனை "நீள்முக்கு கொண்டிருக்கும் உன்னையெல்லாம் யார் பார்ப்பார்கள் ?" என்று கேட்டார்கள். "மின்னி மவுஸ் போல இருக்கிறது அவனின் குரல் " என்றும் சொன்னார்கள்.

விட்டிலிகோ வந்து செய்த பிளாஸ்டிக் சர்ஜரியை எல்லாம் அழகுக்காக செய்கிறார் என்று காயப்படுத்தினார்கள். "உலகின் காயங்கள் ஆற்றுவோம் !" என்று இசைத்தார். "நாம் தான் உலகம் !" என்று எல்லாரையும் அன்பு செய்தார் அவர். உலகை நேசித்த அதன் காயங்களை ஆற்ற இசையால் பிறப்பெடுத்த கிங் ஆப் பாப்பின் நினைவு நாள் இன்று


கிங் ஆஃப் பாப் மைக்கேல் ஜாக்சன் ஜூன் 25 நினைவு தின சிறப்பு.. Reviewed by Author on June 26, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.